Published : 24 Feb 2024 07:33 PM
Last Updated : 24 Feb 2024 07:33 PM
மதுரை: “511 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை திமுகவினர் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன். இது பழைய பாஜக இல்லை. வட்டியும் முதலுமாக திரும்ப கொடுக்கும் கட்சி. நான் நல்லவன் இல்லை. அரசியலில் நல்லவனுக்கு வேலையில்லை” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
மதுரை மேற்கு தொகுதியில், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். வில்லாபுரம் சந்திப்பில் தொடங்கி சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம் வழியாக ஜீவாநகர் வரை பாத யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரையில் அண்ணாமலை பேசியது: “திராவிட அரசியலை வேரோடு அழிக்கும் தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தல். தமிழக அரசியல் களத்தில் உள்ள தவறுகளை சரி செய்யும் தேர்தல்.
இதுவரை தேர்தல்களில் யார் வெற்றி பெறுவது என தெரியாமல் வாக்களித்தோம். இந்த தேர்தலில் சின்னக்குழந்தைக்கு கூட தெரியும் 3-வது முறையாக மோடி பிரதமராக வருவார் என்பது. இந்த தேர்தலை அரசியல் மாற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும். பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப்பெறும்.
தமிழக அரசியலை சுத்தம் செய்து சாமான்ய அரசியலை கொண்டு வரவும், குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, அடாவடித்தனத்தை அகற்ற வேண்டும். திமுக ஆட்சியில் லஞ்சம், விஞ்ஞான ஊழல், குடும்ப ஆட்சி, கொள்ளையடிப்பது, அடாவடித்தனம் ஆகியவற்றை தான் பார்க்க முடிகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்பது வேள்வியாகும். பாஜகவினர் ஒவ்வொரும் தங்களை மோடி என நினைத்துக் கொண்டு வாக்களிக்க வேண்டும். அடுத்த 80 நாட்களுக்கு பிரதமர் மோடி போல் சுறுசுறுப்பாக வேலை செய்தால் மோடியின் கனவு தமிழகத்தில் நிறைவேறும்.
மதுரையில் 4-வது தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழை வளர்த்தவர் பாண்டித்துரை தேவர். பிரதமர் மோடி 5-வது தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்த்து வருகிறார். மோடி உலகம் முழுவதும் தமிழை எடுத்துச் சென்று வருகிறார். தமிழகத்தில் மட்டும் தான் தமிழ் இருந்தது. இந்த பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் தமிழ் மொழி, கலாச்சாரத்தை பிரதமர் மோடி கொண்டுச் சென்றுள்ளார்.
தமிழக அமைச்சர்கள் தமிழை கொலை செய்து வருகின்றனர். துண்டு சீட் இல்லாவிட்டால் முதல்வரால் தமிழில் பேச முடியாது. தமிழை வியாபாரமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றனர். பிரதமர் இந்தியாவை ஒருங்கிணைத்து வருகிறார். திமுக வடக்கு, தெற்கு என பிரிவினை பேசி வருகிறது. தமிழக முதல்வர் 90 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக கூறி வருகிறார். முதல்வர் கனவு உலகில் வாழ்கிறார். 511 தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீத வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. 511 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை திமுகவினர் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்.
திமுக பொய் பேசுகிறது. திமுகவுக்கும், பாஜகவுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. மதுரை மண் அரசியல் மாற்றத்துக்கு ஏற்றது. பத்திரப்பதிவுத்துறை ஜிஸ்கொயர் நிறுவனத்துக்காக கைகட்டி வேலை செய்கிறது. விஞ்ஞான ஊழலுக்கு தந்தை யாரென்றால் கருணாநிதியை கூறுவார். ஆனால் அமைச்சர் மூர்த்தி ஊழல் செய்வதில் கருணாநிதிக்கு தந்தையாக மாறியுள்ளார். அமைச்சர் பிடிஆரை முதல்வர் பாராட்டியுள்ளார்.
பிடிஆரின் பேச்சை முழுமையாக கேட்டால் கோபாலபுரம் குடும்பம் மொத்தமாக கடலுக்குள் தான் போக வேண்டும். இலவச வேஷ்டி சேலையில் ரூ.100 கோடி ஊழல் செய்துள்ளனர். திமுகவினர் எங்கும் தப்பிக்க முடியாது. தமிழகத்தில் ஊழல் செய்பவர்களை வேட்டையாடுவோம். இதை செய்யாவிட்டால் நம் குழந்தைகள் நிம்மதியாக வாழ முடியாது. தலைமுறை தலைமுறையாக ஊழல் தொடர்கிறது. ஊழல் செய்யும் குடும்பங்கள் அரசியலில் இருக்கக் கூடாது என்பதற்கான வேள்வியை பாஜக நடத்துகிறது.
பங்காளி (அதிமுக) கட்சியினர் என்னை பூச்சாண்டி என்றும், மாயாண்டி என்றும் விமர்சனம் செய்கின்றனர். அதனால் எனக்கு வருத்தம் இல்லை. நான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போல் திருநீற்றை அழித்துக்கொண்டு எஸ்டிபிஐ எனும் தீவிரவாத இயக்கம் நடத்திய மாநாட்டில் நான் பங்கேற்கவில்லை. நான் கருப்பாக இருப்பதால் எனக்கு காவல் தெய்வமான கருப்பணசாமி என பெயரிட்டால் சிறப்பாக இருக்கும்.
இன்னொரு முன்னாள் அமைச்சர் என்னை லேகியம் விற்பவர் எனக் கூறுகிறார். பிப். 27-ல் பல்லடத்தில் மிகப்பெரிய லேகியம் விற்கப்படும். இதை பங்காளி (அதிமுக) கட்சியினர் வாங்கி குடித்தால் நோய் முழுயையாக குணமாகும். இது பழைய பாஜக இல்லை. வட்டியும் முதலுமாக திரும்ப கொடுக்கும் கட்சி. நான் நல்லவன் இல்லை. அரசியலில் நல்லவனுக்கு வேலையில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தல் நமக்கான தேர்தல். மோடியை மீண்டும் பிரதமராகக்க வேண்டும்” என்று அண்ணாமலை பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT