Published : 24 Feb 2024 05:41 PM
Last Updated : 24 Feb 2024 05:41 PM
திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அவர்களது பணியில் பல்வேறு சங்கடங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பணிப் பாதுகாப்பின்மை, வரையறுக்கப்பட்ட ஊதியம் கிடைக்காதது, பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்வது, நோய்க்குதரமான மருத்துவ சிகிச்சை கிடைக்காதது போன்ற பல இன்னல்களை அவர்கள் சந்திக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிரந்தர ஊழியர்களாக, இலவச குடியிருப்பு வசதிகளுடன் அவர்கள் பணிபுரிந்து வந்தனர். இப்போது தினக்கூலி அடிப்படையில்(அவுட்சோர்சிங்) தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தூய்மைப் பணி தொழிலாளர்கள் சந்திக்கும் சங்கடங்கள் குறித்து திருச்சி மாநகராட்சி தொழிலாளர்கள் சங்க(சிஐடியு) மாநகரத் தலைவர் இளையராஜா கூறியது: தூய்மைப் பணி தொழில் அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு அரசுநிர்ணயிக்கும் ஊதியம் கிடைப்பதில்லை. இஎஸ்ஐ பிடித்தம் செய்தாலும், அதற்கான கார்டு வழங்காததால் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற முடியவில்லை.
மேலும், இவர்களுக்கு தொற்று நோய் பாதிப்பு, அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், முன்பு 6 மாதங்களுக்கு ஒரு முறை முத்தடுப்பு நோய் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக தடுப்பூசி போடுவதில்லை.
எனவே, இவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இலவசஉயர்தர சிகிச்சை பெற வசதியாகமருத்துவக் காப்பீடும் செய்துகொடுக்க வேண்டும்.அத்துடன்,பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, காலணி, முகக்கவசம் ஆகியவற்றை குறிப்பிட்ட காலஇடைவெளியில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஊரை தூய்மையாக்கி, மக்களின் சுகாதாரத்தை காக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை இன்னும் துயரத்தில் தான் இருக்கிறது. தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT