Published : 24 Feb 2024 04:34 PM
Last Updated : 24 Feb 2024 04:34 PM

“எம்.பி சீட் மறுப்பு, காங்கிரஸில் பெண்கள் புறக்கணிப்பு...” - பாஜகவில் இணைந்த விஜயதரணி அடுக்கிய காரணங்கள்

பாஜகவில் இணைந்த விஜயதரணி

சென்னை: “காங்கிரஸ் கட்சியில் பெண்கள் பெரிய பதவிகளுக்கு வர முடியாத சூழல் நிலவி வருகிறது. ஆனால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்த நாடு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. என்னைப் போன்ற பெண்கள் இதனை உணர முடிகிறது. பெண் சமூகத்துக்கும் பிரதமர் மோடி நிறைய நன்மைகளை செய்து இருக்கிறார்” என்று பாஜகவில் இணைந்த விஜயதரணி விளக்கம் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று (பிப்.24) பாஜகவில் இணைந்தார். அத்துடன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக மேலிடத்துக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த சில நாட்களாகவே விஜயதரணி பாஜகவில் இணைகிறார் எனப் பேசப்பட்ட நிலையில், அவர் இன்று டெல்லியில் அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்த பின்னர் அவர் கூறியது: “காங்கிரஸ் கட்சியில் பெண்கள் பெரிய பதவிகளுக்கு வர முடியாத சூழல் நிலவி வருகிறது. நான் மூன்று முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருக்கிறேன். தற்போது சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி ஒரு ஜூனியருக்குதான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சித் தலைமை பதவிகளுக்கு பெண்களே வரக்கூடாது என்ற சூழல்தான் காங்கிரஸில் நிலவி வருகிறது. இது தொடர்பான அதிருப்தி நீண்ட நாட்களாக இருந்தது. நீண்ட நாட்களாக நான் எம்.பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் உச்ச நீதிமன்ற பிராக்டீஸிங் லாயராக இருக்கிறேன். நாடாளுமன்றத்தில் என்னுடைய பணிகளை தொடர வேண்டும் என்று ஆசைப்பட்டு சீட்டு கேட்டேன்.

கடந்த இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ, எம்.பி தேர்தல் சேர்ந்து வந்த சேர்ந்து வந்தபோதும் அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இந்த முறையும் அந்த வாய்ப்பு கொடுக்கப்படாது என்றுதான் நினைக்கிறேன். குறிப்பாக, என்னுடைய கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நிறையப் பணிகள் நடைபெறாமல் இருக்கின்றன. ஏற்கெனவே இருந்த எம்.பி-யும், தற்போது இருக்கின்ற எம்.பி-யும் எந்த வேலையையும் செய்யவில்லை.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்கள் கொலை செய்யப்படுவது குறைந்துவிட்டது. அந்த அளவுக்கு மீனவர்கள் பாரதிய ஜனதா ஆட்சியில் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வும் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மீனவர்கள் பிரச்சினைக்காக பாரதிய ஜனதா கட்சி எடுத்த முயற்சி மிகப் பெரியது. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

பிரதமர் மோடி அறிவித்த ரேஷன் திட்டங்கள், அனைத்து மாநிலங்களிலும் சென்று அடைந்திருக்கிறது, ஆனால், தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இந்த திட்டங்களை ஏற்க மறுக்கிறார்கள். இந்தத் திட்டங்களை நாம் செயல்படுத்த வேண்டும். இது போன்ற நல்ல நல்ல திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சிக்கு வட இந்தியாவில் இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்றால் இந்தத் திட்டங்கள் மக்களை சென்றடைந்தது தான் காரணம். ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்த திட்டங்கள் சென்றடையவில்லை. அவர்களும் ஏற்க மறுக்கிறார்கள் இதுதான் உண்மை.

மொழியும் பிரச்சினையாக இருக்கிறது. மொழி பிரச்சினையில் இந்த திட்டங்கள் எந்த அளவுக்கு பயனளிக்கின்றன என்பது தமிழக மக்களுக்கு புரியவும் இல்லை, தெரியவும் இல்லை. பாரதப் பிரதமரின் முயற்சியை என்னை போன்றவர்கள் நிச்சயமாக வரவேற்கிறோம்.

அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் பெரிய தலைவராக இருக்கிறார் பிரதமர் மோடி. அவரின் தலைமையின் கீழ் இந்த நாடு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. என்னைப் போன்ற பெண்கள் இதனை உணர முடிகிறது. பெண் சமூகத்துக்கும் பிரதமர் மோடி நிறைய நன்மைகளை செய்து இருக்கிறார். பெண்களுக்கு நிறைய இட ஒதுக்கீடுகளை கொண்டு வந்து நன்மை செய்து இருக்கிறார். சட்டமாகவும் மாற்றியிருக்கிறார்.

இஸ்லாமிய பெண்களுக்காக விடுதலையை கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக, முத்தலாக்கில் இருந்து விடுதலை கொடுத்திருக்கிறார்கள். இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொண்டு வந்திருக்கிறார்கள். இது மாதிரியான விஷயங்களை காங்கிரஸ் கட்சி செய்ய முயற்சி கூட செய்யவில்லை. இன்று இஸ்லாமிய பெண்களின் வாக்குகள் மொத்தமாக பாஜகவுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பல்வேறு நன்மைகள் இருக்கக் கூடிய இடத்தில் பாஜக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மோடி தலைமையில் இந்தியா இயங்க வேண்டும் என்ற விருப்பத்தோடு என்னை போன்றவர்கள் பாஜகவில் எங்களை இணைத்துக் கொண்டு வருகிறோம். பாரதிய ஜனதா கட்சியில் பெண்களுக்கான தளம் மிக அதிகமாக இருக்கிறது.

எம்.பிக்.கள் எம்.எல்.ஏ.க்கள் என உங்களுக்கு அதிகமான பதவிகள் வழங்கப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நடத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் பெரிய எழுச்சி இருக்கிறது.

காங்கிரஸ் தலைமையிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டேன். எல்லா பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்து விட்டேன். காங்கிரஸ் கட்சி அதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்கும். தற்போது, என்னை இணைத்துக் கொண்ட கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு செல்வேன்” என்று விஜயதரணி கூறினார்.

பின்புலம்: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு கணிசமான வாக்கு வாங்கி கொண்டது. தற்போது காங்கிரஸை சேர்ந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியை காங்கிரஸ் தக்க வைக்குமா அல்லது பாஜக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. காங்கிரஸ் சார்பில் மீண்டும் விஜய் வசந்த்துக்கே சீட் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம், 3 முறை விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக தொடர் வெற்றி பெற்ற விஜயதரணி, இம்முறை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனக்கு எம்.பி. சீட் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், அதுகுறித்து எவ்வித தகவலும் காங்கிரஸ் தரப்பில் இல்லாத நிலையில், பாஜகவில் இணைய முடிவு செய்தது உறுதியாகியுள்ளது. அவர் குமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x