Published : 24 Feb 2024 02:55 PM
Last Updated : 24 Feb 2024 02:55 PM
ராமேசுவரம்: கச்சத்தீவில் இந்திய பக்தர்கள் இல்லாமல், இலங்கை பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. ராமேசுவரத்திலிருந்து படகு சேவை ரத்து செய்யப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத் திருவிழாவை, நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் நேற்று மாலை 4 மணியளவில் ஆலயத்தின் கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம். யாழ்ப்பாணம் முதன்மை குரு ஜோசப் தாஸ் ஜெபரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, ஜெபமாலை, சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன. இரவு புனித அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர், ஆலயத்தை வலம் வந்தது.
இந்த நிகழ்வுகளில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பங்குத் தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்திய பக்தர்கள் ஏமாற்றம்: சமீபத்தில், இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றம், ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதைக் கண்டித்தும், இந்த தீர்ப்பை ரத்து செய்து மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கச்சத்தீவு திருவிழாவையும் புறக்கணிப்பதாக அறிவித்த மீனவர்கள், பயணத்துக்கான விசைப்படகுகளையும் வழங்க மறுத்து விட்டனர். இதனால் கச்சத்தீவுக்கு ராமேசுவரத்திலிருந்து பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, கச்சத்தீவு திருவிழாவுக் காக முன்பதிவு செய்திருந்த சிலர் நேற்று ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத் துக்கு வந்து காத்திருந்தனர். பின்னர், படகு சேவை இல்லாத தால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இன்று காலை கச்சத்தீவில் (சனிக்கிழமை) சிறப்புத் திருப்பலி பூஜையும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறுகின்றன. பின்னர், கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT