Last Updated : 24 Feb, 2024 02:55 PM

1  

Published : 24 Feb 2024 02:55 PM
Last Updated : 24 Feb 2024 02:55 PM

“திரையில் நன்றாக நடிப்பது, டான்ஸ் ஆடுவது மட்டுமே அரசியலுக்கு மூலதனம் அல்ல!” - வேல்முருகன் நேர்காணல்

தமிழகத்தில் வாரிசு அரசியல், விஜய்யின் அரசியல் நகர்வு, விஜய்யின் கட்சிப் பெயர் சிக்கல், இண்டியா கூட்டணியின் பலம், பாஜக ஆட்சி என முக்கியமான வாதங்களை முன்வைத்து பேசியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். அவரது நேர்காணலின் இரண்டாவது பகுதி இங்கே...

இண்டியா கூட்டணியில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது என உள்துறை அமைச்சர் கடுமையான விமர்சனத்தை வைக்கிறார். அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

“மன்னராட்சி காலம் தொடங்கி மக்களாட்சி நடக்கும் இந்தக் காலத்திலும் ’வாரிசுகள் ஆட்சி’ என்பது நடக்கிறது. அடிப்படை தொண்டனும் வாரிசுகளை ஏக மனதாக ஏற்றுக் கொண்டால், ஜனநாயக நாட்டில் இதுதான் நடக்கும். மத்தியில் காங்கிரஸில் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என வாரிசுகள் இருக்கிறார்கள்.

கர்நாடகா, தமிழகம், மகாராஷ்டிரா என அனைத்து மாநிலங்களும் வாரிசு அரசியல் என்பது இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் பாஜகவிலும் வாரிசுகள் ஆதிக்கம் இருக்கிறது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளிலும் வாரிசு அரசியல் இருக்கிறது. திமுக, பாமக, தமாகா, மதிமுக என அனைத்து கட்சிகளிலும் வாரிசு அரசியல் இருக்கதான் செய்கிறது. இது சரியா தவறா என்பதைக் கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.”

வாரிசு அரசியல் பற்றி அமித் ஷா சொல்வதை ஒப்புக்கொள்கிறார்களா?

“இந்தியாவில் அரசியலமைப்புக்கு உட்பட்டு வாரிசு அரசியல் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது என்பது என் கருத்து.”

டிவிகே... விஜய்யின் கட்சிப் பெயருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவிருக்கிறீர்களா?

“தேர்தலில் டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற்ற கட்சியாக என்னுடைய தமிழக வாழ்வுரிமை கட்சி இருக்கிறது. கட்சியின் சுருக்கெழுத்து ’டிவிகே’ என்றுதான் தேர்தல் ஆணையத்திலும் பதியப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துடன் கடிதத் தொடர்பும் அந்தப் பெயரில்தான் இருக்கிறது. அதே பெயரை விஜய்யின் கட்சிப் பெயராகக் கொண்டிருப்பது மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். எப்படி கட்சிப் பெயரான வெற்றிக் கழகத்தில் அனைவரின் கோரிக்கை ஏற்று ’க்’ சேர்த்தாரோ, அதுபோல் கட்சிப் பெயர் தொடர்பாகக் கோரிக்கை வைத்துள்ளேன்.

விஜய்யின் கட்சி இன்னும் பதிவு செய்யவில்லை. அதற்கான பணிகளைத் தான் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் என் கட்சியின் பெயரும் ‘டிவிகே’ என தேர்தல் ஆணையத்திடம் நினைவுப்படுத்தியிருக்கிறேன். தேர்தல் ஆணையம்தான் யாருக்கு பெயரை வழங்க வேண்டுமென முடிவு செய்யும். இதில் விஜய்யை எதிர்க்க வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு கிடையாது. ஒரு தமிழனாக விஜய் இங்கு கட்சி தொடங்கியிருக்கிறார். அவர் மீது இளைய தலையைமுறையினர் அன்பு வைத்துள்ளனர். அவருக்கு கட்சித் தொடங்குவதற்கான எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், கட்சிப் பெயரை முடிவு செய்யும்போது, இதே பெயரில் வேறு கட்சி இருப்பதை வழக்கறிஞர்கள் அவருக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். அதனால் இப்படியாக குழப்பங்கள் எழுந்துள்ளது.”

விஜய் கட்சி தொடங்கியதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கிறதா?

“12 ஆண்டுகளாக தமிழகத்தில் மக்கள் பிரச்சினைக்காகப் போராட்டங்களை நடத்தி வருகிறேன். இதுபற்றி அனைத்தும் தகவலும் என சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறேன். அப்போதெல்லாம் என்னை யார் என்று கூட தெரியாத இளைய தலைமுறைகள், இன்று டிவிகே என்னும் பெயரை விஜய் வைத்ததால், பலரும் சமூக வலைதளங்களில் அந்தப் பெயரைப் பதிவிட்டு தேடும்போது, என் வீடியோக்களும் வருகிறது. இதைப் பார்த்தும் பலரும் இன்று என்னைத் தெரிந்து கொள்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் கட்சித் தொடங்கியது எனக்கு மகிழ்ச்சி, நன்மையும் கூட. ஆனால், கத்தி படத்தை லைக்கா நிறுவனம் வெளியீடு செய்வதை நான் எதிர்த்தேன். அதைக் குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் என்னை விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், அப்போதும் நான் விஜய்யை எதிர்க்கவில்லை.”

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து விஜய் அரசியலில் ஜொலிக்க வாய்ப்பிருக்கிறதா?

“சமூகம் சார்ந்த பிரச்சினைக்கு விஜய் குரல் கொடுக்க வேண்டும். சமீபத்தில் தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்தது. அதுபற்றி விஜய்யின் கருத்து என்ன? பரந்தூர் விமான நிலையம் வேண்டுமா வேண்டாமா என்பதில் விஜய்யின் கருத்து என்ன? செய்யாற்றில் சிப்காட் வேண்டுமா வேண்டாமா... அதில் விஜய்யின் கருத்து என்ன? இப்படியாக சமூகம் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விஜய்யின் கருத்து என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவர் களத்தில் இறங்கி போராட வேண்டும்.

’அரசியலுக்கு வருகிறேன்’ என அறிவித்த நிலையிலும், பல பிரச்சினைகளில் மவுனம் காக்கிறார். மக்களுக்காகப் போராடிய நான், எனக்கு வாக்களியுங்கள் என கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது. ஆனால், விஜய் திரையில் நன்றாக நடித்திருக்கிறார். அருமையாக டான்ஸ் ஆடுகிறார். ஆனால், அது மட்டுமே அரசியலுக்கு மூலதனம் இல்லை. அவர் களத்தில் இறங்கி பயணிக்க தொடங்க வேண்டும். அப்போது மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்தால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என நான் மனதார வரவேற்பேன்.”

மூன்றாவது முறையாகப் பாஜக ஆட்சியைப் பிடித்தால், என்ன நடக்கும்?

“ஜனநாயக மாண்பு என்பது அழிந்து போகும். சகோதரத்துவம், சமத்துவம் அனைவருக்குமான சம நீதி என எதுவும் இல்லாமல் ஒற்றை சர்வாதிகார ஆட்சியை நோக்கி பாஜக மூன்றாவது முறை ஆட்சியில் அடி எடுத்து வைக்கும்.”

மீண்டும் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் ஏறவிடாமல் தடுப்பதற்கு ஒற்றை நம்பிக்கையாக இண்டியா கூட்டணி இருக்கிறது. அதன் செயல்பாடுகளில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?

“இண்டியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லது. ஆனால், தலைவர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினை, இடப்பகிர்வு சிக்கல் என கூட்டணி தடுமாறுகிறது. இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த நிதிஷ் குமார், பாஜக பக்கம் இழுக்கப்பட்டிருக்கிறார். மேற்கு வங்கத்திலும் பஞ்சாப்பிலும் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு பிரச்சனை இருக்கிறது. எனவே, பேச்சுவார்த்தை வாயிலாகப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இண்டியா கூட்டணி, பாஜக போன்று வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். அதுதான் மக்களின் விருப்பம். ஆனால் ஒருங்கிணைப்பு குறைபாட்டால் இண்டியா கூட்டணி தடுமாறுவது வருத்தமாக இருக்கிறது.”

தமிழக பட்ஜெட் பற்றி உங்கள் கருத்து?

“தமிழக பட்ஜெட் பல்வேறு அம்சங்களைக் கொண்டிருந்தது. எனவே, நான் அதை வரவேற்கிறேன். ஆனால், சமூக நீதி தளத்தில் இயங்கும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தவதாக தெரிவித்து கடந்து போவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி பட்ஜெட்டில் தகவல் இல்லை. ஒப்பந்த ஆசிரியர் மற்றும் செவிலியர்கள், தொகுப்பூதிய பேராசிரியர்கள் பணி நிரந்தரம் பற்றி எதுவும் இல்லை. இவர்கள் வாழ்க்கையில் ஒளி வருமா என எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆகவே, இதையெல்லாம் தமிழக அரசு கவனிக்க தவறிவிட்டது என்னும் விமர்சனத்தை முன்வைக்கிறேன்.”

இந்தப் பேட்டியின் முதல் பகுதி > “சாதிவாரி கணக்கெடுப்புக்கு ‘சமூக நீதி’ திமுக தயங்குவதில் உள்நோக்கம்...” - வேல்முருகன் நேர்காணல்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x