Published : 23 Feb 2024 08:38 PM
Last Updated : 23 Feb 2024 08:38 PM
சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் அன்னா ஜெர்டே உலக வங்கியின் உயர்மட்ட குழுவினருடன் இன்று (பிப்.23) சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் அன்னா ஜெர்டே (Anna Bjerde) உலக வங்கியின் உயர்மட்ட குழுவினருடன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் , தமிழக அரசின் சார்பில் தாம்பரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும், பணிபுரியும் பெண்களுக்கான குறைந்த வாடகையில், தரமான மற்றும் பாதுகாப்பான தங்கும் விடுதி திட்டமான “தோழி” விடுதியை பார்வையிட்டதாகவும், மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்துக்கு தனது பாராட்டினை தெரிவித்து, இத்திட்டம் உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியான திட்டமாகும் என்று தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது, தமிழக முதல்வர், உலக வங்கியின் நிர்வாக இயக்குநரை வரவேற்று, தமிழகத்தின் வேளாண் கடன் திட்டத்துக்கு 1971-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து தமிழகத்துக்கும் உலக வங்கிக்கும் நீண்டகால உறவு இருப்பது குறித்தும், அப்போதிலிருந்து மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை அடையவும் உலக வங்கி பல வெற்றிகரமான ஒத்துழைப்புகளை அளித்துள்ளது.
தற்போது, உலக வங்கி நிதியுதவியுடன் நடைமுறையுள்ள 8 திட்டங்கள் குறித்தும், மேலும் ஆலோசனை நடைபெற்றுவரும் 3 திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து, அனைத்துத் திட்டங்களுக்கும் உலக வங்கியின் ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். மேலும், அவர்களது தமிழகப் பயணம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், தெற்காசிய மண்டல துணைத் தலைவர் மார்டின் ரைசர், சர்வதேச நிதி நிறுவன Country Manager வெண்டி வெர்னர் (Wendy Werner), உலக வங்கியின் பங்கு நிதி நிறுவனங்களின் திட்டத் தலைவர் (Equity Finance Institutions, Program Leader) பாவ்னா பாட்டியா, தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர் டி. ராஜேந்திரன் ஆகியோர் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT