Published : 23 Feb 2024 07:45 PM
Last Updated : 23 Feb 2024 07:45 PM
சென்னை: "வாக்காளரின் வாக்கு நேரடியாக கன்ட்ரோல் யூனிட்டுக்குச் செல்வதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும். இடையில் விவிபேட் கருவியை வைப்பதும், அதில் நூறு சதவீதம் எண்ணிக்கையைப் பார்க்க முடியாது என்று கூறுவது மிகப் பெரிய சந்தேகத்தை உருவாக்குகிறது" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்துகிறார். அதன்படி, திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 10 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தேர்தல் தேதி, வாக்குச்சாவடி, நடத்த விதிமுறைகள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: "தேர்தல் ஆணையத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை, திமுக சார்பில் அடிப்படை கோரிக்கையாக வைத்திருக்கிறோம்.
கடந்த தேர்தலுக்கும் தற்போது நடக்கவிருக்கும் இந்த தேர்தலுக்கு இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கும், கன்ட்ரோல் யூனிட்டுக்கும் நேரடியாக தொடர்பு இருந்து வந்தது. இதற்கிடையே விவிபேட் என்ற கருவியை வைக்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டைக் கொண்டு வந்துள்ளனர். இது சட்டத்துக்குப் புறம்பானது.
வாக்காளரின் வாக்கு நேரடியாக கன்ட்ரோல் யூனிட்டுக்குச் செல்வதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும். இடையில் விவிபேட் கருவியை வைப்பதும், அதில் நூறு சதவீதம் எண்ணிக்கையைப் பார்க்க முடியாது என்று கூறுவது மிகப் பெரிய சந்தேகத்தை உருவாக்குகிறது.
இந்த முறையைப் பின்பற்றினால், 1 முதல் 2 சதவீதம் வரை தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையமே ஒப்புக்கொள்கிறது. ஒரு மக்களவைத் தொகுதிக்கு 2 சதவீதம் என்றால், ஏறத்தாழ 40 முதல் 50 ஆயிரம் வாக்குகள். இந்த வாக்குகள் ஒரு தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை அனைவரும் அறிவர். எனவே, இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
அதேபோல், இங்கு கொடுக்கப்படும் மனுக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பித்தான் அனுமதி பெற வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே, அதனை எளிமைப்படுத்தும் வகையில் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்து, அரசியல் கட்சிகள் தரப்பில் கொடுக்கப்படுகிற புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்ற கோரிக்கையையும் திமுக சார்பில் வைத்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT