Published : 23 Feb 2024 11:30 AM
Last Updated : 23 Feb 2024 11:30 AM

மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டம்: தமிழக அரசு உடனடியாக கைவிட டிடிவி வலியுறுத்தல்

டிடிவி தினகரன்

சென்னை: திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்கும் பணிக்காக விளைநிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளைக் கைது செய்து குற்றவாளிகளைப் போல நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து வெளியிட்டிருக்கும் தனது எக்ஸ் பதிவில், “திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்கும் பணிக்காக விளைநிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளைக் கைது செய்து குற்றவாளிகளைப் போல நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது. போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்காக 3,200 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிப்காட் விரிவாக்க திட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகள் நிலமற்றவர்கள் எனவும், வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் பேசியிருப்பது ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுப்பணித்துறை அமைச்சரின் உண்மைக்கு மாறான கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி திருவண்ணாமலை மேல்மா கூட்டுச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தேர்தல் அறிக்கையில் 43-வது வாக்குறுதியான விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை வேறுபயன்பாட்டிற்கு மாற்றுவது தடுக்கப்படும் என கூறிய திமுக அரசின் முதல்வர், கோரிக்கை மனுக்களை வழங்க வரும் விவசாயிகளைச் சந்திக்க மறுத்து காவல்துறை மூலம் கைது செய்திருப்பது ஈவு இரக்கமற்ற செயலாகும்.

எனவே, விளைநிலங்களைப் பறித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்பதோடு, சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் உண்மைக்கு மாறான கருத்தையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x