Published : 23 Feb 2024 08:35 AM
Last Updated : 23 Feb 2024 08:35 AM
திருவண்ணாமலை: அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வரை சந்திக்க அனுமதிக்க கோரியும் செய்யாறு அடுத்த மேல்மா கூட்டுச்சாலையில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த 7 விவசாயிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்த காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை எதிர்த்து, கடந்த 7 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து, சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கருத்து தெரிவித்திருந்தார். அமைச்சர் கருத்துக்கு கடும்கண்டனம் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், விவசாயிகளுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட அமைச்சர் எ.வ.வேலுவின் தவறான கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினை சந்திக்க கடந்த 20-ம் தேதி புறப்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், மேல்மா கூட்டுச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர். இந்தப் போராட்டம் 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
மேல்மா கூட்டுச்சாலையில் காவல்துறையினர் அதிகாலை 4.30 மணியளவில் குவிக்கப்பட்டனர். உண்ணாவிரதம் இருந்த விவசாயிகள் சந்திரன், மணிகண்டன், மாசிலாமணி, தேவன், ரேணுகோபால், நேதாஜி, ராஜா ஆகிய 7 விவசாயிகளை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அவர்களுக்கு, மருத்துவப் பரிசோதனை செய்ததில் உடல்நிலை சீராக இருப்பது தெரியவந்ததால், அனைவரும் வீட்டுக்கு செல்லலாம் என கூறி மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 7 விவசாயிகளையும் திருவண்ணாமலை காவல் துறையினர் சிறைபிடித்து, மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், விவசாயிகளுக்கு ஆதரவாக மருத்துவமனை வளாகத்தில் பாமகவினர் திரண்டனர். இதனால், காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான காவல் துறையினர் பின்வாங்கினர். இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து 7 விவசாயிகளும் வெளியேறினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “முதல்வரை சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இன்று (நேற்று) அதிகாலை, எங்களை குண்டு கட்டாக தூக்கி, கைதியை போல் 108 ஆம்புலன்ஸில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
எங்களை பரிசோதித்த மருத்துவர், உடல்நிலை சீராக இருப்பதாக கூறி அனுப்பிவிட்டனர். சொந்த கிராமத்துக்கு செல்ல முயன்ற எங்களை, காவல்துறையினர் சிறைபிடித்தனர். நிலம் தர மறுத்ததால் எங்களை குற்றவாளிகளை போல் மடக்கி பிடித்து அவமதித்தனர்” என்றனர்.
ஏற்கெனவே, உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி பெருமாள், கணேசன் ஆகிய 2 விவசாயிகள், வந்தவாசி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
9 விவசாயிகளை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கொண்டு சென்றதால், ஆத்திரமடைந்த பிற விவசாயிகளில் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
23 விவசாயிகள் கைது: இதற்கிடையில், முதல்வரை சந்தித்து மனு கொடுக்க சென்னை தலைமை செயலகத்துக்கு நேற்றுகாலை சென்ற 19 பெண்கள், 4 ஆண்டுகள் என 23 விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அப்போது இரண்டு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், 2 விவசாயிகள் காயமடைந்துள்ளனர். முதல்வரை சந்தித்து மனு கொடுக்கும் வரை, சென்னையில் இருந்து திரும்பமாட்டோம் என விவசாயி கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT