Published : 23 Feb 2024 04:52 AM
Last Updated : 23 Feb 2024 04:52 AM

நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பது, ஆதிதிராவிடர் சட்டம் உருவாக்குவது உட்பட 14 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

கோப்புப்படம்

சென்னை: புதிதாக மாநில நெடுஞ்சாலை ஆணையம், தமிழ்நாடு மருத்துவ மன்றம் அமைப்பது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக புதிய சட்டம் உருவாக்குவது உள்ளிட்ட 14 சட்ட மசோதாக்கள், பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

சட்டப்பேரவையில் கடந்த 21-ம் தேதி 12 மசோதாக்களை அமைச்சர்கள் அறிமுகம் செய்தனர். அந்தவகையில், ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மலக்கசடு, கழிவுநீரை பாதுகாப்பாக அகற்ற ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா, ஊரக உள்ளாட்சிகளில் திடக்கழிவுகளை திறம்பட சேகரித்து, அறிவியல் சார்ந்த முறையில் அகற்றுவதற்கான பொறுப்பை ஊராட்சிகளுக்கு ஏற்படுத்துவதற்கான சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்ஐ.பெரியசாமி அறிமுகம் செய்தார்.

2001-ம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டத் திருத்த மசோதா, மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைப்பதற்கான சட்டமசோதா ஆகியவற்றை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்தார்.

ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம், எதிர்பாரா செலவுநிதிய சட்டம், நிதிநிலை நிர்வாகபொறுப்புடைமை சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கான 3 சட்டத் திருத்த மசோதாக்களை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்தார்.

சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (CUMTA) சட்டத் திருத்தமசோதாவை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமியும், பாரதியார், பாரதிதாசன், அழகப்பா, மனோன்மணியம், பெரியார், திருவள்ளுவர், தமிழ்நாடு திறந்தநிலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர்களின் ஓய்வு வயதை58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும்சட்டத் திருத்த மசோதாவை உயர்கல்வி அமைச்சர் ராஜகண்ணப்பனும் அறிமுகம் செய்தனர்.

தமிழ்நாடு மருத்துவ பதிவு சட்டத்தை நீக்கி, தமிழ்நாடு மாநிலமருத்துவ மன்றத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களையும் கோயில்அறங்காவலர்களாக நியமிக்கும்வகையிலான சட்டத் திருத்தமசோதாவை அறநிலைய அமைச்சர் சேகர்பாபுவும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மேம்பாட்டுசெயல் திட்டம் தயாரித்தல், கண்காணித்தல் ஆகியவற்றுக்காக புதிதாகசட்டம் உருவாக்குவதற்கான மசோதாவை ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜும் அறிமுகம் செய்தனர்.

இந்நிலையில், நேற்று 2 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தொழில் உரிமம் தொடர்பான ஊராட்சிகள் சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமியும், திருச்சி, கடலூர், தேனிசந்தைக் குழுக்களின் தனி அலுவலர்கள் பதவிக் காலத்தை நீட்டிப்பது தொடர்பாக வேளாண்விளைபொருள் சந்தைப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் அறிமுகம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, மேற்கண்ட 14 சட்ட மசோதாக்களும் பிரிவுவாரியாக ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது, பேசிய தி.வேல்முருகன் (தவாக), ‘‘தனி அலுவலரிடம் தொழில் உரிமம் பெறலாம் என்பது, ஊராட்சி நிலைக் குழுவின் அதிகாரத்தை பறிக்கும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘‘தொழில் உரிமம் கோரும் விண்ணப்பங்களுக்கு ஊராட்சி நிலைக் குழு அனுமதி தருவதில் தாமதம் நிலவுகிறது. இதனால்தொழில் வாய்ப்பு தடைபடுவதை தவிர்க்கவே, தனி அலுவலரிடம்உரிமம் பெறும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது’’ என்றார்.

மாநில நெடுஞ்சாலை ஆணையம், சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுவது குறித்து ஜி.கே.மணி(பாமக), தி.வேல்முருகன் (தவாக)ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர்எ.வ.வேலு, ‘‘வாகன போக்குவரத்து அதிகரிக்கும் நிலையில், சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளின் தேவைஅதிகமாக உள்ளது. இதை ஈடுசெய்யும் அளவுக்கு நிதி இல்லாததால், ஆணையம் அமைத்துதிட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். ஆணையத்தில் பெருமளவுமாநில அரசின் நிதி பங்களிப்பே செயல்படுத்தப்படும். அதேநேரம்,சுங்கச் சாவடிகள் அமைப்பது தொடர்பாக தற்போது எதுவும் கூறமுடியாது. ஆணைய பரிந்துரை மற்றும் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெற்ற பிறகே முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து, 14 சட்டமசோதாக்களும், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x