Published : 23 Feb 2024 05:38 AM
Last Updated : 23 Feb 2024 05:38 AM

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தின் இசைவின்றி ஒரு செங்கல்கூட வைக்க முடியாது: அமைச்சர் துரைமுருகன் உறுதி

சென்னை: காவிரியில் தமிழகத்தின் இசைவின்றி ஒரு செங்கல்லைக் கூட கர்நாடகத்தால் எடுத்து வைக்க முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில்,கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி பேசியதாவது:

கடந்த 2018-ம் ஆண்டு எங்கள்ஆட்சியின்போது, மேகேதாட்டு விவகாரம் மத்திய நீர்வள ஆணையத்தின் பார்வைக்குச் சென்றபோது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தோம். எங்கள் ஆட்சி இருக்கும் வரை,மேகேதாட்டு விவகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்தில் கொண்டுவர அனுமதிக்கவில்லை.

ஆனால், திமுக ஆட்சியில் கடந்த 1-ம் தேதி ஆணையத்தின் பணி வரம்புக்கு அப்பாற்பட்டு மேகேதாட்டு அணை கட்டுவது பற்றிய விவாதத்தை 28-வது ஆணைய கூட்டத்தில் அனுமதித்துள்ளீர்கள். கர்நாடக அரசும் ஆணையத்தின் விவாதப்பொருளில் இதை தந்திரமாகச் சேர்த்துவிட்டது. இப்போது ஆணையம், மத்திய நீர்வளஆணையத்துக்கு மேகேதாட்டு அணை குறித்து பரிந்துரைத்துள்ளது. கர்நாடக முதல்வரும் அணை கட்ட நிதி ஒதுக்கியுள்ளார். மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் மேட்டூருக்கு தண்ணீர் வருவது தடுக்கப்பட்டு, அணை வறண்டு, டெல்டா பாசனப்பகுதி பாலைவனமாகும். இது திமுக அரசின் அலட்சியப்போக்காகும். காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேகேதாட்டு அணை பிரச்சினை தொடர்பாக, டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜவாஹிருல்லா (மமக), ஜி.கே.மணி (பாமக), வானதி சீனிவாசன் (பாஜக) ஆகியோரும் பேசினர். வானதி சீனிவாசன் பேசும்போது, கூட்டணி கட்சியிடம் பேசி இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இவற்றுக்குப் பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: ஒவ்வொரு முறையும் மேகேதாட்டு பிரச்சினையை ஆணைய கூட்டத்தில் கொண்டுவருவார்கள். நாம் எதிர்த்தால் விட்டுவிடுவார்கள். இந்நிலையில், பிப்.1-ம் தேதி கூட்டத்திலும் இந்த பிரச்சினை வந்தது. அப்போது நமது நீர்வளத் துறை செயலர், “ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். 4 வழக்கும் தொடுத்துள்ளோம். எனவே இந்த விவகாரத்தை நீங்கள் எடுக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும், மேலாண்மை ஆணையத்தில் விவாதத்துக்கு எடுத்தனர்.

உச்ச நீதிமன்றம் தடை விதிக்காததால் திட்டம் குறித்து விவாதித்து முடிவெடுத்து, மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பலாம் என கர்நாடக பிரதிநிதி கூறினார். மத்திய நீர்வள ஆணைய பிரதிநிதியோ, உச்ச நீதிமன்ற ஆணை கிடைக்காததால், திட்டத்தை ஆய்வு செய்ய இயலாது, எனவே திருப்பியனுப்பிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

கேரள உறுப்பினர், விவாதத்துக்கு ஏற்றதல்ல; பன்மாநில நதிநீர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் மத்திய நீர்வளத் துறைக்கே திருப்பியனுப்பும் படி தெரிவித்தார். புதுச்சேரியும் அதே கருத்தை தெரிவித்துள்ளது. உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தார்களே தவிர ஓட்டெடுப்பு நடைபெறவில்லை.

இந்தக் கருத்துகளை கேட்டஆணையத்தின் தலைவர், பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்துப்படி, மேகேதாட்டு விவகாரத்தை மத்திய நீர்வளத் துறைக்கே திருப்பியனுப்பலாம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவரே, அந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை நமக்கு அனுப்பும்போது, மேகேதாட்டு திட்டத்தில் பொருளாதார சாத்தியங்களை ஆய்ந்து, திட்டம் குறித்து முடிவெடுக்கவும், மேல்நடவடிக்கைக்காகவும் மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பலாம் என்று முடிவெடுத்தார்.

இந்த நிகழ்ச்சி நிரல் வந்ததும், ஆணையத்தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டோம். நடவடிக்கை எடுப்பதுடன், நீதிமன்றத்துக்கும் செல்ல உள்ளோம். இதுதவிர ஜல்சக்தி அமைச்சகம், வனத்துறை, மத்திய நீர்வள ஆணைய தலைவருக்கும் கடிதம் எழுதி, திட்டம் உச்ச நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, மற்ற மாநிலங்களிடம் இருந்து இசைவு பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி கடிதம் எழுதியுள்ளோம்.

மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பப்பட்டதாலேயே இந்த திட்டம் நிறைவேறிவிட முடியாது. வனத்துறை, சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற்றாலும், தமிழகத்தின் இசைவைப் பெறாமல் ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்க முடியாது. பணம் ஒதுக்கியதாலோ, கட்டியே தீருவோம் என்பதாலோ கட்டிவிட முடியாது. தமிழகத்தில் பிறந்த எவரும், எந்த கட்சியாக இருந்தாலும் இசைவு தரமாட்டார்கள். அஞ்ச வேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், காவரி மேலாண்மை ஆணையத்தைக் கண்டித்து பேரவையில் தீ்ர்மானம்நிறைவேற்றாததால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உட்பட அதிமுகஉறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, “அதிமுக சட்டப்போராட்டம் நடத்தி கிடைத்த தீர்ப்பின் காரணமாக அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு குறித்து விவாதிக்கப்படவில்லை. ஆனால் திமுக அரசு வந்த பிறகு இப்படியாவ நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய நீர்வள ஆணையம் ஏதேனும் உத்தரவு பிறப்பித்த பிறகு உச்ச நீதிமன்றத்தை நாடினால் மீண்டும் தேவையில்லாத பிரச்சினைகள்தான் உருவாகும். அண்டை மாநிலத்தை நீருக்காக தமிழகம் நம்பியிருக்கிறது. கர்நாடக முதல்வரோடு நெருக்கமாக இருக்கும்போது செயல்படாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x