Published : 23 Feb 2024 04:00 AM
Last Updated : 23 Feb 2024 04:00 AM
கோவை: கோவை போத்தனூர் ரயில் நிலையம் ரூ.100 கோடியில் ரயில் முனையமாக உருவாகிறது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டராக அறியப்படும் கோவை மாவட்டத்தில், 1862-ல் போத்தனூரில் ரயில் நிலையம் உருவானது. 1873-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி கோவை ரயில் நிலையம் திறக்கப்பட்டது. கோவை ரயில் நிலையம் உருவாகி 151 ஆண்டுகள் ஆகின்றன. மேலும், தெற்கு ரயில்வேயில் மூன்றாவது வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக கோவை ரயில் நிலையம் உள்ளது. கோவை ரயில் நிலையம் 6 நடைமேடைகளை கொண்டதாகும். சுமார் 38 ரயில்கள் இங்கிருந்து புறப்பட்டு செல்கின்றன.
101 ரயில்கள் கோவை ரயில் நிலையம் வழியாக சென்று வருகின்றன. ஆண்டுக்கு சராசரியாக சுமார் 1 கோடி பயணிகள் ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். கோவை ரயில் நிலைய பகுதியில் ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என முக்கிய அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
உக்கடம் மற்றும் டவுன்ஹால் செல்வதற்கு முக்கியமான வழியாக உள்ளதால் ரயில் நிலையம் அமைந்துள்ள சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளாவில் இருந்தும் பெரும்பாலான ரயில்கள் கோவை வழியாக இயக்கப்படுகின்றன. ஆனால், சுமார் 26 ரயில்கள் கோவை ரயில் நிலையம் வராமல் புறக்கணிக்கப்பட்டு வந்தது.
கோவையைச் சேர்ந்த பொது மக்கள், அரசியல் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக சில ரயில்கள் கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன. இருப்பினும், சுமார் 15 ரயில்கள் கோவை ரயில் நிலையம் வராமல் போத்தனூர் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வட மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் ஆலப்புழா - சென்னை விரைவு ரயில், திருவனந்தபுரம் - புதுடெல்லி விரைவு ரயில், கன்னியாகுமரி - திர்புர்கர் விவேக் விரைவு ரயில், கொச்சுவேலி - யஷ்வந்த்பூர் விரைவு ரயில், எர்ணாகுளம் - பாட்னா உள்ளிட்ட 6 ரயில்கள் கோவை ரயில் நிலையம் வராமல் போத்தனூர் வழியே திருப்புவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தெற்கு ரயில்வேயின் இந்த பரிந்துரை பயணிகள், தொழில் துறையினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: கோவை ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதி நெரிசல் மிக்கதாக உள்ளது. வரும் காலங்களில் புதிய ரயில் சேவை அறிமுகம் செய்தல் உள்ளிட்டவைகளை நடைமுறைப்படுத்துவதில் இட நெருக்கடி பெரும் சவாலாக உள்ளது. இருகூரில் இருந்து கோவை ரயில் நிலையம் சென்றடைய 45 நிமிடங்கள் ஆகிறது.
ஆனால், இருகூரில் இருந்து போத்தனூர் செல்ல 15 நிமிடங்கள் தான் ஆகிறது. இருகூரில் இருந்து கோவை ரயில் நிலையம் வரை இயக்க கால விரயம் ஏற்படுகிறது. எனவே, போத்தனூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுமார் ரூ.20 கோடி மதிப்பில் பல்வேறு கட்ட வளர்ச்சி பணிகளை தற்போது செய்து வருகிறோம்.
கோவை ரயில் நிலையத்தில் வசதிகளை பெருக்கும் அதே வேளையில் போத்தனூர் ரயில் நிலையத்தை மற்றொரு முனையமாக மாற்ற ரூ.100 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. வட கோவை ரயில் நிலையத்தையும் மேம்படுத்த உள்ளோம். ரயில் பயணிகளுக்கு சிரமமான சூழல் ஏற்படாமல் ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வோம், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT