Published : 26 Feb 2018 11:17 AM
Last Updated : 26 Feb 2018 11:17 AM
பசுமை பொருளாதாரத்தை ஏற்படுத்தும் வகையில், விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு, பொருட்களைத் தயாரிப்பதற்கு உரிய பயிற்சி அளித்து தொழில் முனைவோராக ஆக்கும் புதிய திட்டத்தை மத்திய குறு, சிறு மற்றும் நடுரக தொழில் மேம்பாட்டு நிறுவனம் தொடங்க உள்ளது.
சென்னையில் உள்ள மத்திய குறு, சிறு மற்றும் நடுரக தொழில் மேம்பாட்டு நிறுவனம் (எம்எஸ்எம்இ – டிஐ) கடந்த 1954-ம் ஆண்டு, மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுரக தொழில்துறை அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டது. இந்நிறுவனம், திறமை யான தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர்களை உருவாக்குதல், தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், பெண் களுக்குத் தொழில்முனைவோர் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட சேவைகளை அளித்து வருகிறது.
இதைத் தவிர, உற்பத்தியாளர், விற்பனையாளர் சந்திப்பு, சந்தைப்படுத்து வதற்கான உதவிகள், தொழில்நுட்ப உதவிகள், தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கைகள் தயாரிக்க உதவுதல், தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கான கள ஆய்வுகள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு உரிய பயிற்சி அளித்து தொழில்முனைவோராக ஆக்கும் புதிய திட்டத்தை மத்திய குறு, சிறு மற்றும் நடுரக தொழில் மேம்பாட்டு நிறுவனம் தொடங்க உள்ளது.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து, எம்எஸ்எம்இ வளர்ச்சி மையத்தின் கூடுதல் தொழில்துறை ஆலோசகர் எஸ்.சிவஞானம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தொழில்முனைவோர்களுக்குத் தேவை யான பயிற்சிகள், தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை திறம்பட செய்யத் தேவையான உதவிகள், ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை எங்கள் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில், ஒரு புதிய முயற்சியாக விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு உரிய பயிற்சி அளித்து தொழில்முனைவோராக ஆக்கும் புதிய திட்டம் ஒன்றைத் தயாரித் துள்ளோம்.
இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராமங்களில் வேளாண் சார்ந்த உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் மற் றும் வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி இனமக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு புதிய பொருட்களைத் தயாரிப்பதற்கு பயிற்சி அளித்து அவர்களை தொழில் முனைவோராக உருவாக்க உள்ளோம்.
மதிப்பு கூட்டல்
உதாரணமாக, மலைப்பகுதிகளில் சுத்த மான தேன் மற்றும் ஏராளமான மூலிகைப் பொருட்கள் கிடைக்கின்றன அவற்றைச் சேகரித்து மதிப்பு கூட்டல் செய்து மக்களுக்குப் பயன்படும் வகையில் பொருட்களைத் தயாரித்தல், அவற்றை எவ்வாறு பேக்கிங் செய்தல், பிராண்டிங் செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் வரை தேவையான அனைத்துப் பயிற்சி களையும் அளிப்போம்.
கிராமப்பகுதிகளில் விவசாயத்தில் ஈடு படுபவர்களுக்கு அவர்கள் பகுதியில் விளையும் பொருட்கள், உதாரணமாக சிறுதானியங்கள், காளான்கள், இயற்கை விவசாயத்தில் விளைவித்த பொருட்களையே மதிப்பு கூட்டச் செய்து பொருட்களைத் தயாரிப்பதற்கான பயிற்சிகள் அளிக்க உள்ளோம். மேலும், அவர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு அரசு நிறுவனமான நாங்கள் சான்றிதழ் அளிப்போம். இதனால், அவற்றை எளிதாக சந்தைப்படுத்த முடியும். அத்துடன், ஆன்லைன் மூலமும் அவர்கள் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்ய உதவுவோம். வரும் ஏப்ரல் மாதம் முதல் இப்பயிற்சித் திட்டம் தொடங்குகிறது.
பசுமை பொருளாதாரம்
சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், பசுமை பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில் இந்த திட்டம் அமையும். மேலும், கிராமப் பகுதியில் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் நகரங்களுக்கு குடிபெயர்வது தடுக்கப்படும். அத்துடன், அவர்களுடைய வாழ்க்கைத் தரமும் உயரும் நிலை ஏற்படும்.
இவ்வாறு சிவஞானம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT