Published : 22 Feb 2024 09:25 PM
Last Updated : 22 Feb 2024 09:25 PM

“தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான பாசிச ஆட்சி” - அண்ணாமலை சாடல் @ மேல்மா போராட்டம்

அண்ணாமலை | கோப்புப்படம்

சென்னை: "மேல்மா சிப்காட் எதிர்ப்பு இயக்க விவசாயிகளைக் கொச்சையாகப் பேசி அவமானப்படுத்திய அமைச்சரைக் கண்டிக்கத் திராணி இல்லாமல், தங்கள் நிலங்களைக் காக்கப் போராடும் விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போடுவதும், அவர்களைச் சந்திக்க மறுத்துக் கைது செய்வதுமான, விவசாயிகளுக்கெதிரான பாசிச ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்துக்காக, 3,200 ஏக்கர் விவசாய நிலங்களை திமுக அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 7 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், விவசாயிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்த திமுக அரசு, விவசாயிகள் மற்றும் தமிழக பாஜக கடுமையாக எதிர்த்ததால், வேறு வழியின்றி குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.

தொடர்ந்து, மேல்மா விவசாயிகள் கடந்த 236 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து, சமீபத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் பேசுகையில், தங்கள் விவசாய நிலங்களைக் காப்பாற்றப் போராடிய மேல்மா விவசாயிகளை அவமானப்படுத்தும் விதமாக, “போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்குச் சொந்தமாக நிலம் இல்லை, சிப்காட் தொடங்க பல விவசாயிகள் ஆதரிக்கின்றனர்” என்று கூறியிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ‘சட்டப்பேரவையில் விவசாயிகளுக்கு எதிராக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த கருத்தை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும், மேல்மா சிப்காட் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், இது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிடச் சென்ற விவசாயிகளையும் இன்று காவல் துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது.

விவசாயிகளைக் கொச்சையாகப் பேசி அவமானப்படுத்திய அமைச்சரைக் கண்டிக்கத் திராணி இல்லாமல், தங்கள் நிலங்களைக் காக்கப் போராடும் விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போடுவதும், அவர்களைச் சந்திக்க மறுத்துக் கைது செய்வதுமான, விவசாயிகளுக்கெதிரான பாசிச ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உடனடியாக, கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென்றும், அவர்கள் கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x