Published : 22 Feb 2024 04:45 PM
Last Updated : 22 Feb 2024 04:45 PM
சென்னை: "மத்திய அரசு நியாயமற்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து நமது நிதி நிலைமையை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, மாநில அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் பகிர்மான இழப்பீட்டினை, மத்திய அரசு வகுத்துள்ள கணக்கீட்டுக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு வருடமும் மாநில அரசு வழங்க வேண்டும். இதன் விளைவாக, இந்த வருடம் 17,117 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். வரும் ஆண்டில் 14,442 கோடி ரூபாய் வழங்க உள்ளோம்" என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். அவர் பேசுகையில், “எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் TANGEDCO-வுக்கான இழப்பீட்டு நிதியினைப் பற்றி எழுப்பிய முக்கியமான கேள்விக்கு, இம்மாமன்றத்தில் இருக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவாக விளக்க விரும்புகிறேன். நான் வரவு செலவுத் திட்டத்தில் கூறியதுபோல, மத்திய அரசு நியாயமற்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து நமது நிதி நிலைமையை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
அவற்றில் ஒன்றாக, மாநில அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் பகிர்மான இழப்பீட்டினை, மத்திய அரசு வகுத்துள்ள கணக்கீட்டுக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு வருடமும் மாநில அரசு வழங்க வேண்டும். இதன் விளைவாக, இந்த வருடம் 17,117 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். வரும் ஆண்டில் 14,442 கோடி ரூபாய் வழங்க உள்ளோம். இதனால்தான், அதிகளவில் இழப்பீட்டுத் தொகையை TANGEDCO-வுக்கு வழங்கவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
எனினும், மாநில அரசு இத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. TANGEDCO நிறுவன அமைப்பை மாற்றியமைத்தல் (unbundling). இதனால், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்தில் தனிக் கவனம் செலுத்த இயலும். அதிக வட்டியுள்ள கடனை குறைந்த வட்டிக் கடனாக மாற்றுதல். பசுமை ஆற்றலின் மீது சிறப்புக் கவனம் செலுத்த ஒரு புதிய நிறுவனம் அமைத்துள்ளது” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT