Published : 22 Feb 2024 04:24 PM
Last Updated : 22 Feb 2024 04:24 PM

மத்திய அரசின் திட்டத்தை ‘பெயர் மாற்றி’ அறிவித்ததா தமிழக அரசு? - தங்கம் தென்னரசு மறுப்பு @ பேரவை

சென்னை: “மத்திய அரசு தனது திட்டங்கள் என்று பெருமைகூறும் திட்டங்களிலேயே, தமிழக அரசுதான் பெருமளவில் பங்களிக்கிறது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கு (நகர்ப்புறம்) மத்திய அரசின் பங்கு வெறும் 1.5 லட்சம். ஆனால், மாநில அரசின் பங்கு 7 லட்சம்" என்று தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விவரித்துள்ளார். தமிழக பாஜகவுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசு தனது திட்டங்கள் என்று பெருமைகூறும் திட்டங்களிலேயே, தமிழக அரசுதான் பெருமளவில் பங்களிக்கிறது. பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் (கிராமம்) ஒரு அலகின் விலை-1.2 லட்சம் ரூபாய். இதில், 72,000 ரூபாய் மத்திய அரசின் பங்கு, 48,000 ரூபாய் மாநிலத்தின் பங்கு.

கிராமங்களில் இத்தொகை போதவில்லை என்று தமிழக அரசு ‘Additional Roofing Cost’ எனக் கூடுதலாக 1.2 லட்சம் ரூபாய் வீடு ஒன்றுக்கு வழங்கி வருகிறது. ஆக மொத்தம், ஒரு வீட்டுக்கு 2.4 லட்சம் ரூபாயில், மத்திய அரசின் பங்கு 72,000 ரூபாய், மாநில அரசின் பங்கு 1,68,000 ரூபாய். 30 சதவீதம் மட்டுமே கொடுத்துவிட்டு, திட்டத்துக்குப் பெயர் ’பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா‘ என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

நாட்டிலேயே முதன்முறையாக, ஆதி திராவிடர்களுக்கு கான்க்ரீட் வீடு வழங்கியது மறைந்த முதல்வர் கருணாநிதிதான். அதுமட்டுமல்ல, 1970-ம் ஆண்டில் முதன்முறையாக குடிசைமாற்று வாரியத்தை அமைத்தார். கடந்த 2010-ம் ஆண்டு ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை’ அறிமுகப்படுத்தினார். 14 வருடங்கள் கழித்து தந்தையின் கனவை இன்று மகன் நிறைவேற்றுகிறார். தமிழக முதல்வர் இன்று குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

மத்திய அரசால் வழங்கப்படும் தொகை போதாது என்றுதான், ஏழை எளிய மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, ’கலைஞரின் கனவு இல்லம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், வீடு ஒன்றுக்கு ரூ.3.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழக அரசு நிதியிலிருந்தே செயல்படுத்தப்படும். இது மட்டுமன்றி, அரசு ஏற்கெனவே கட்டித்தந்த 2.5 லட்சம் பழைய வீடுகளைப் பராமரிப்பதற்காக 2,000 கோடி ரூபாய் நிதியை அறிவித்துள்ளது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கு (நகர்ப்புறம்) மத்திய அரசின் பங்கு வெறும் 1.5 லட்சம். ஆனால், மாநில அரசின் பங்கோ 7 லட்சம்.

முதல்வரின் கிராம சாலை திட்டம், பிரதமரின் கிராம சாலை திட்டத்தை பெயர் மாற்றி அறிவித்துள்ளதாக தவறாக கூறினார்கள். இத்திட்டம் முழுவதையும் மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து தான் செயல்படுத்தி வருகிறது. ஆனால், மறுபுறம், பிரதமரின் கிராமசாலை திட்டத்துக்கு, 1,945 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. இன்றுவரை ஒப்புதல் பெறப்படவில்லை.

மேலும், ஊட்டச்சத்தை உறுதி செய், மாதிரி பள்ளிகள் ஆகிய திட்டங்களை மாநில அரசு தனது சொந்த நிதியிலிருந்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலைஉணவு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், இதுவரை செயல்படுத்தவில்லை. தமிழக முதல்வர், மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு நாட்டுக்கே முன்னோடியாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார்.

தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள்தான், பின்னர் நாடு முழுவதும் பின்பற்றப்படும். நாட்டையும் பிற மாநிலங்களையும் வழிநடத்திச் செல்லும் நலத்திட்டங்களை இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மக்களின் நலனுக்காக, இந்த திராவிட மாடல் அரசு அறிமுகப்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை மத்திய அரசு நாடு முழுவதும் விரிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

பேரிடர் மேலாண்மை: மிக்ஜாம் புயலால் பெரும் பாதிப்பினை சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டத்தில் சந்திக்க நேரிட்டது. இப்பாதிப்புக்களை சீரமைப்பதற்காக மத்திய அரசிடம் 19,689 கோடி ரூபாய் மாநில அரசுக்கு நிவாரண நிதியாக வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெரும் பாதிப்பினை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் எதிர்கொண்டது. இதனால், 18,214 கோடி ரூபாயாக மத்திய அரசிடம் தற்காலிக மற்றும் நிரந்தர சீரமைப்பு பணிகளுக்கு நிதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், பேரிடர் நிகழ்கிறதோ இல்லையோ, 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ஆண்டுதோறும் விடுவிக்கப்படும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை வழங்கிவிட்டு, ஏதோ பெரிய உதவியை வழங்கியதுபோல் மத்திய நிதியமைச்சர் பெருமை கூறினார்கள். மேலும், பல்வேறு குழுவினர் வந்தபோதிலும், எந்த ஒரு நிதியையும் இன்றுவரை மத்திய அரசு வழங்கவில்லை.

தமிழகத்துக்கு மட்டும் இந்த பாரபட்சமா என்று பார்த்தால்,2023-ல் குஜராத்தில் ஏற்பட்ட பிபர்ஜாய் புயலுக்கு 338 கோடி, 2022-ல் அசாம் வெள்ளத்துக்கு 250 கோடி, 2022-ல் கர்நாடகா வெள்ளத்துக்கு 939 கோடி, 2021-ல் குஜராத் புயலுக்கு 1000 கோடி, 2021-ல் மத்தியப் பிரதேச வெள்ளத்துக்கு 600 கோடி, 2021-ல் பிஹார் வெள்ளத்துக்கு 1,038 கோடி, 2021-ல் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 1,623 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாகச் செயல்படும் மத்திய அரசினால் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தான். மக்களை வாக்குகளாகப் பார்க்கும் பாஜகவுக்கு மக்களின் துயரத்தை எவ்வாறு அறிய இயலும். மத்திய அரசு எந்த ஒரு நிதியையும் வழங்காத நிலையில் இந்த அரசு தனது சொந்த நிதியிலிருந்து பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள 24.25 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் என 1,486 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 1,000 ரூபாய் என மொத்தம் 30.94 லட்சம் குடும்பங்களுக்கு 541 கோடி ரூபாய் செலவில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் மற்றும் பழுது பார்த்தல் 385 கோடி ரூபாய். பயிர் சேத நிவாரணம் 250 கோடி ரூபாய், தற்காலிக மற்றும் நிரந்தர சீரமைப்புக்காக நெடுஞ்சாலை துறைக்கு 725 கோடி ரூபாய், நீர்வளத் துறையில் சீரமைப்பு பணிகளுக்காக 630 கோடி ரூபாய், நிவாரண இழப்பீடாக பல்வேறு துறைகளுக்கு தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக 130 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

சிறு வணிகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிறப்புக் கடன் திட்டம். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மூன்று லட்சம் ரூபாய் வரை வெள்ள நிவாரண கடனுதவித் திட்டம். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 350 கோடி ரூபாய் கடன். நிலுவையில் உள்ள கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பு. சேதம் அடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் 15 கோடி ரூபாய்
கால்நடைகள் வாங்குவதற்கு கடன், உப்பள தொழிலாளர்களுக்கு உதவித்தொகை 3,000 ரூபாய். பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் மற்றும் பாட புத்தகங்கள் வழங்குதல் மற்றும் இதர அரசு துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் வழங்குதல்.

இந்த மாதத்தில் பிரதமர் தூத்துக்குடிக்கு வருகைதர உள்ளார். அதற்கு முன்பாவது, தேசியப் பேரிடர் நிவாரண நிதியை வழங்குவார் என்று நம்புகிறோம். விண்வெளிச் சாதனைக்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர், சமவெளியில் நடந்த துயரத்துக்கு நிவாரணம் அளிப்பாரா என்று எதிர்நோக்குகிறோம்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டம், நம் நாட்டிலேயே ஒரு மாபெரும் கட்டமைப்புத் திட்டமாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்தும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு தனது பங்களிப்பை வழங்கும். சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்டத்துக்கு அவ்வாறு ஒப்புதல் அளித்துள்ளது. அவ்வாறே, சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்துக்கு தனது பங்களிப்பாக 50% மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று நம்பிக்கையில்தான், இத்திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சரும், சென்னைக்கு வருகை புரிந்து, எதிர்க்கட்சித் தலைவருடன் கைகுலுக்கி, திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். எதிர்க்கட்சியினர் தங்களது கூட்டணிக் கட்சியின் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்து பணிகளைத் தொடங்கினார்கள். சற்றுத் தாமதாகவே அவர்கள் கண் திறந்திருக்கிறது. சற்று முன்பே திறந்திருந்தால், மாநிலத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை சேமித்திருக்கலாம். அதற்குப் பின், 17.8.2021 அன்று திட்ட முதலீட்டு வாரியம் (PIB) ஒப்புதல் அளித்தது. ஆனால், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், இத்திட்டத்தின் மொத்தச் செலவையும் மாநில அரசே ஏற்க வேண்டியுள்ளது.

நமக்கு ஒப்புதல் அளிக்காத அதேவேளையில், மத்திய அரசு, 2022-ல் நாக்பூர் மெட்ரோ இரண்டாம் கட்டம், கொச்சி மெட்ரோ இரண்டாம் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2023-ல் குருகிராம், புனே மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நியாயமற்ற செயலினால், மாநில அரசுக்கு இந்த வருடம் 9,000 கோடி ரூபாயும் அடுத்த வருடம் 12,000 கோடி ரூபாயும் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு தனது கடமையை நிறைவேற்றாததால், மாநில அரசின் பற்றாக்குறையும், கடனும் அதிகரித்துள்ளது. மத்திய அரசு விரைவில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று நம்புகிறோம். அதற்கு, சமீபத்தில் மனம் மாறிய நமது எதிர்கட்சித் தலைவர் குரல் கொடுப்பார் என்றும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் உதவுவார் என்றும் நம்புகின்றேன் என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x