Last Updated : 22 Feb, 2024 04:06 PM

1  

Published : 22 Feb 2024 04:06 PM
Last Updated : 22 Feb 2024 04:06 PM

ஆளுநர் தமிழிசை Vs புதுச்சேரி அரசு - மத்திய அரசிடம் செல்கிறது புதிய பேரவை கட்டிட கோப்பு விவகாரம்

புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் | துணை நிலை ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை கட்டிட கோப்பினை தாமதப்படுத்தினால், ஆளுநர் தமிழிசை மீது மத்திய உள்துறையில் புகார் செய்வேன் என்று அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த தலைமை செயலகத்துடன் கூடிய சட்டப்பேரவை கட்ட அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசையின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை, இந்தக் கோப்பினை மத்திய அரசுக்கு அனுப்பாமல், கடந்த 5 மாதங்களாக நிலுவையில் வைத்திருப்பதாக பேரவைத் தலைவர் செல்வம் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், ‘மக்கள் வரிப்பணத்தை வீணாக்கக் கூடாது, ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சில கேள்விகளை கேட்டுள்ளேன்’ என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். இதனையடுத்து பேரவைத் தலைவர் செல்வம் இன்று கூறியது: “முதல்வர் ஆலோசனையின் பேரில் பிரதமர், நாடாளுமன்றத் தலைவர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை கட்ட 100 சதவீதம் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என வைத்த கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்றார்.

இதன்பின் மத்திய உள்துறை அமைச்சகம் திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்க 2021-ஆம் ஆண்டு புதுவை அரசுக்கு கடிதம் அளித்தது. பொதுப் பணித்துறை மூலம் சட்டப்பேரவை கட்ட ரூ.335.70 கோடிக்கான பூர்வாங்க திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பித்து சிறப்பு மத்திய நிதி உதவியை விடுவிக்க கோரியது. டிசம்பர் 2021-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் சில விளக்கங்கள் கேட்டு அதன் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்படி புதுவை அரசை அறிவுறுத்தியது.

இதனால் இந்தியாவின் சிறந்த நிறுவனம் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. நொய்டாவை சேர்ந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட கோப்பு, உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும் முன்பு துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்காக கடந்த அக்டோபரில் சமர்பிக்கப்பட்டது. இந்தக் கோப்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை கையொப்பமிட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்புவதற்கு பதிலாக, கோப்பு சரியாக தயாரிக்கவில்லை என்பது போன்ற விளக்கங்களை கேட்டு துறைக்கு திருப்பி அனுப்பினார்.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு துணைநிலை ஆளுநர் அனுப்பிய பிறகு அவர்கள் ஏதேனும் விளக்கம் கேட்டு கோப்பினை திருப்பி அனுப்பினார்களா அல்லது ஆளுநரே மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக விளக்கங்களை கேட்டாரா என்று கேள்வி எழுகிறது.

உள்துறை அமைச்சகம் விளக்கம் கோரினால் தலைமைச் செயலருக்குத்தான் கோப்பினை அனுப்பும். மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பாமலேயே ஆளுநர் தமிழிசை விளக்கங்கள் கேட்கிறேன் என்ற பெயரில் கோப்பினை கால தாமதப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. பொதுப் பணித்துறை அனைத்து விளக்கங்களையும் அளித்துள்ளதாக ஆளுநர் மாளிகை கூறுகிறது.

இருப்பினும் கோப்பு தொடர்பாக ஆளுநர் தமிழிசை முடிவு செய்யாமல், பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் என்ன - புதுச்சேரியில் தலைமைச் செயலகத்துடன் கூடிய சட்டப்பேரவைக் கட்ட 100 சதவீத மானியம் வழங்க மத்திய அரசு தயாராக இருந்தும், காலதாமதத்துக்கு யார் காரணம் என்று கேட்கிறேன். துணைநிலை ஆளுநர் தமிழிசை இந்த கோப்பினை விரைந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

சட்டப்பேரவை கட்ட ஆளுநர் முழுவதும் தடையாக உள்ளார். ஆளுநர் கூறியப்படி விமானத் தளம் ஏதும் புதிய சட்டப்பேரவை திட்டத்தில் இல்லை. ஹெலிகாப்டர் இறங்க வாய்ப்பு உருவாக்கவே திட்டமிட்டோம். தலைமைச்செயலர் தலைமையில் குழு அமைத்து நான்கு முறை கூடி திருத்தங்கள் செய்துதான் முடிவு எடுத்தது.

இது முழுக்க மத்திய அரசின் மானியத்தில்தான் கட்டப்போகிறோம். அதற்காகதான் திட்ட வரைவு அறிக்கை கேட்டனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கேட்டதன் அடிப்படையில்தான் இக்கோப்பினை தயாரித்தோம். முதல்வரோ நானோ இம்முடிவை எடுக்கவில்லை.

நான் ஆளுநரிடம் 50-க்கும் மேற்பட்ட முறை சட்டப்பேரவை கட்டுவது தொடர்பாக பேசிவிட்டேன். அவர் கோப்பினை அனுப்பாதது தெரியவில்லை. இதற்கு மேலும் அனுப்பாவிட்டால், தேவைப்பட்டால் மத்திய உள்துறையிடம் ஆளுநர் மீது புகார் செய்வேன், புதுவை வளர்ச்சிக்கு துணைநிலை ஆளுநர் தடையை ஏற்படுத்துவது சரியல்ல. பேரவைக்கான புதிய கட்டடக் கோப்பு தாமதத்துக்கு துணைநிலை ஆளுநர்தான் விளக்கமளிக்க வேணடும்.

தெலங்கானா பேரவைக் கட்டிட மதிப்பை விட புதுவை பேரவைக் கட்டட மதிப்பு குறைவாகவே உள்ளது. புதுச்சேரி பேரவை வளாகத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்க முன்வந்தும் ஆளுநர் தடையாக இருக்கிறார். ஆளுநரிடம் கருத்து மோதல், பிரச்சினை ஏதுமில்லை. ஆகவே, எங்கள் கருத்தால் மக்களவைத் தேர்தலில் ஏதும் (பாஜக அணிக்கு) பாதிப்பிருக்காது” என்று அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x