Published : 22 Feb 2024 03:11 PM
Last Updated : 22 Feb 2024 03:11 PM
சென்னை: “கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு நான் ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நிச்சயமாக மதுரையில் ‘எய்ம்ஸ்’ அறிவிக்கப்பட்டதைப்போல் இல்லாமல், குறிப்பிட்ட காலத்துக்குள் கோவை நூலகம் கட்டி முடிக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட நாளையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அது திறக்கப்படும்” என்று கோவை நூலகம் திறப்பு தொடர்பான கேள்விக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். இதன்பின்னர், பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “நேற்றைய தினம் சட்டமன்றப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றி இருக்கக்கூடிய உறுப்பினர்களுக்கு எல்லாம் மிகத் தெளிவாக, விளக்கமாக, விரிவாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரிய வகையில் அமைந்திருக்கிற காரணத்தால் என்னுடைய வாழ்த்துக்களையும் மனதார நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
நேற்றையதினம் விவாதத்தின்போது சில குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த வினாவுக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார். ஆனால், அதேநேரத்தில், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கைக்கு ஏன் பதில் சொல்லாமல் விட்டுவிட்டார் என்று எனக்குப் புரியவில்லை.
அவர் ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அது எங்கே அமையவிருக்கிறது? எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறீர்கள்? எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்? எப்போது அந்தப் பணிகள் முடிவடையும் என்று கேள்விகளைக் கேட்டிருந்தார். அது நிச்சயமாக உடனடியாக செயலாக்கத்துக்கு வரும். ஏனென்றால், இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், சொன்னதைத் தாண்டியும் செய்யும், சொல்வதைத்தான் செய்யும்.
மதுரையில் எவ்வாறு உலகத் தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறதோ, சென்னையில் கலைஞர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக ஏறுதழுவுதல் அரங்கம் அமையப் பெற்றிருக்கின்றனவோ, இன்னும் சில தினங்களில் நம்முடைய கலைஞர் நினைவிடம் அமையவிருக்கிறதோ, அதேபோல் அதுவும் சொன்னபடி நிச்சயமாக இந்த ஆட்சியில் நடக்கும்.
ஆனால், வானதி சீனிவாசனுக்கு நான் ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நிச்சயமாக மதுரையில் ‘எய்ம்ஸ்’ அறிவிக்கப்பட்டதைப்போல் இல்லாமல், குறிப்பிட்ட காலத்துக்குள் கோவை நூலகம் கட்டி முடிக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட நாளையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அது திறக்கப்படும். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு உங்களுக்கு முறையாக அழைப்பு வரும். நீங்களும் வந்து விழாவில் கலந்துகொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு - முதல்வர் விளக்கம்: முன்னதாக, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று பாமக உறுப்பினர்கள், தமிழக சட்டப்பேரவையில் குரல் கொடுத்தனர். ஆனால், ஆளுநர் உரையில் இதுபற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறி இதுகுறித்து பேரவையில் விவாதிக்க மறுக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து பாமக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “நீங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு பிரச்சினை பண்ண வேண்டும் என்றே கூச்சல் எழுப்புகிறீர்கள். ஏற்கெனவே ஆளுநர் உரையில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கணக்கெடுத்தால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்த முடியும். நீங்கள் அரசியலுக்காகவோ அல்லது எதற்காகவோ மாநில அரசு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்கிறீர்கள். மாநில அரசு எடுக்க வேண்டிய அவசியமில்லை.
மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தினாலும், அதனை நடைமுறைபடுத்துவதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்த அரசியலமைப்பு சட்டப்படி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றிய அரசு மட்டும்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியும். முதல்வர் ஸ்டாலினும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள். உங்களின் கருத்தோடு ஒத்த கருத்தாக முதல்வரும், இந்த அரசும் உள்ளது” என்றார்.
பின்பு விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், “சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஏற்கெனவே இந்த அவையில் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டிலும் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி, வேல்முருகன், ஜி.கே.மணி போன்றோர் இதுகுறித்து என்னிடம் நேரடியாக சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்கள். அப்போதே இதுகுறித்து விளக்கமாக பதில் சொல்லியிருக்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிராளிகள் அல்ல. உங்களுக்கு சாதகமாகதான் நாங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
பிப்.26-ல் கலைஞர் நினைவிடம் திறப்பு: இதனிடையே, சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம், புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரும் 26-ம் தேதி திறக்கப்படவுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
“கலைஞர் நினைவிடம் அமைக்கும் பணி முழுமையடைந்திருக்கிறது. அறிஞர் அண்ணா நினைவிடமும் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. புதுப்பிக்கப்பட்டிருக்கக் கூடிய பேரறிஞர் அண்ணா நினைவிடமும், கலைஞர் புதிய நினைவிடமும் வருகிற 26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளன.
எதற்காக இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை. அதனை ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம்; முடிவெடுத்திருக்கிறோம். ஆகவே, அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மேகேதாட்டு விவகாரம்: இதனிடையே, மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு செங்கல் கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது என்று சட்டப்பேரவையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்தார். | அதன் முழு விவரம்: மேகேதாட்டு | தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு செங்கல்கூட கர்நாடகம் வைக்க முடியாது - அமைச்சர் துரைமுருகன்
அதேவேளையில், “உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி ஒரு நல்ல தீர்ப்பை பெற்று தந்து இருக்கிறோம். இன்று ஒரு வேளை மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டுவிட்டால், மேட்டூருக்கு தண்ணீர் வராமல் வறண்டு போய்விடும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக ஆகிவிடும். எனவே இந்த அரசு அலட்சியமாக செயல்பட்டு நடந்துகொண்டு இருப்பதனால் தான் இதனை நாங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். | வாசிக்க > “திமுக தூங்கிக் கொண்டிருக்கிறது” - மேகேதாட்டு விவகாரத்தில் இபிஎஸ் காட்டம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT