Published : 22 Feb 2024 01:53 PM
Last Updated : 22 Feb 2024 01:53 PM
சென்னை: “உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி ஒரு நல்ல தீர்ப்பை பெற்று தந்து இருக்கிறோம். இன்று ஒருவேளை மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டுவிட்டால், மேட்டூருக்கு தண்ணீர் வராமல் வறண்டு போய்விடும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக ஆகிவிடும். எனவே இந்த அரசு அலட்சியமாக செயல்பட்டு நடந்துகொண்டு இருப்பதனால் தான் இதனை நாங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மட்டுமே ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் கடந்த ஆட்சியில் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்து பேசினார். தமிழ்நாட்டில் பிறந்த யாரும் மேகேதாட்டுவில் அணை கட்ட ஆதரவு தரமாட்டார்கள் என்று ஆவேசமாகப் பேசினார். இந்த நிலையில் துரைமுருகன் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து செய்தியாளர்களிடத்தில் கூறியது: “காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தமிழகத்துக்கு பாதகமானது. இதை நான் சுட்டிக்காட்டினேன். காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவதற்கு மட்டும்தான் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்தின் பணிகளும் குழுவின் பணிகளும் முறையாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதில், முதலாவது, காவிரி நீரை தேக்குதல், பகிர்மானம் செய்தல், முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல். இரண்டாவது, காவிரி நீரை முறைப்படுத்தும் குழுவின் துணையுடன் அணைகள் செயல்பாட்டை மேற்பார்வையிடுதல் மற்றும் அவற்றிலிருந்து நீரை பாசனம் மற்றும் இதர தேவைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் அடங்கும். இவற்றைத் தவிர வேறு எந்த பணிகள் மேற்கொள்ளவும், இந்த அமைப்புகளுக்கு அதிகாரம் கிடையாது, இந்நிலையில் புதிதாக மேகேதாட்டு அணை கட்டுவது குறித்து விவாதிக்க இந்த ஆணையத்திற்கோ, குழுவுக்கோ எந்தவித அதிகாரமும் கிடையாது.
உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி ஒரு நல்ல தீர்ப்பை பெற்று தந்து இருக்கிறோம். இன்று ஒரு வேளை மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டுவிட்டால், மேட்டூருக்கு தண்ணீர் வராமல் வறண்டு போய்விடும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக ஆகிவிடும். எனவே இந்த அரசு அலட்சியமாக செயல்பட்டு நடந்துகொண்டு இருப்பதனால் தான் இதனை நாங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இன்றைக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.
இந்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு என்று ஒரு வரையறுக்கப்பட்ட அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அதிகாரத்தை மீறி செயல்படுகிறது. இந்த அதிகாரத்தை மீறி செயல்படும் போது அதிமுக உரிய நடவடிக்கை எடுத்தது. இதனால் மேகேதாட்டு குறித்து எந்த அறிவிப்பையும் கர்நாடகா வைக்கவில்லை. ஆனால் இந்த திமுக அரசு வந்த பிறகு இப்படி இந்த 28-வது கூட்டத்தில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இது உண்மையிலையே கண்டிக்கத்தக்கது.
இந்த அரசு விவசாயிகள் மீது அக்கறையின்றி மெத்தனமாக செயல்படுகிறது. இனிமேலும் இந்த அரசு தூங்கிக் கொண்டு இருக்காமல், விவசாயிகள் நலன் கருதியும், பொதுமக்கள் நலன் கருதியும் விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறுகிறேன். நாங்கள் இதைப் பற்றி பேசிய பிறகுதான் தூக்கத்திலிருந்து விழித்து, உச்ச நீதிமன்றம் செல்வதாக நீர்வளத்துறை அமைச்சர் சொல்கிறார். அதைத்தான் ஏன் செய்யவில்லை? அதுதான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுகிறது. உடனடியாக 28-வது காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் முடிந்த பிறகு, தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று தெரிந்தவுடன் இது குறித்து விவாதித்திருக்க வேண்டும்.
தற்போது சட்டமன்றம் கூடியிருக்கும் பட்சத்தில் இந்த காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்த முடிவு சரி இல்லை என்று கூறி ஒரு கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி, இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று ஒரு அவதூறு வழக்கை தொடர்ந்திருந்தால் சரியானது. ஆனால் அவர்களை எதையுமே செய்யவில்லையே.
அண்டை மாநிலத்தை முழுக்க முழுக்க தண்ணீருக்காக நம்பி இருப்பது தமிழ்நாடுதான். 20 மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது காவிரி நீர்தான். டெல்டா பாசன விவசாயிகள் அதிகமாக பாசனம் பெருவது காவேரியில் தான். ஜீவநதிக்கு இப்படி ஒரு ஆபத்து ஏற்படுகின்ற போது, இந்த அரசு அலட்சியமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்குரிய முயற்சியை இந்த அரசு எடுக்கவில்லை.
இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்கள். தற்போது மிகவும் நெருக்கமாக இருப்பதாக கூறுகிறார்கள். கர்நாடக முதல்வரும், தமிழக அமைச்சரும் நெருக்கமாக இருக்கிறார்கள். இவ்வாறு நெருக்கமாக இருக்கும்போது, இப்படி ஒரு பிரச்சினை வரும்போது ஏன் செயல்படவில்லை” என்றார் இபிஎஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT