Published : 22 Feb 2024 10:56 AM
Last Updated : 22 Feb 2024 10:56 AM
நெல்லை: இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட உள்ள நிலையில், இதற்கான அடிக்கல்லை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி நாட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் இந்நிகழ்ச்சியில் பிரதமரும், முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கவுள்ளனர்.
வரும் 27, 28-ம் தேதிகளில் தமிழகத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வரும் 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், அன்று இரவு சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தங்குகிறார்.
ராக்கெட் ஏவுதளம்: திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கரில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 28-ம் தேதி காலை 11 மணிக்கு தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்தில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக கோவை சூலூரில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். பின்னர், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி, வஉசி துறைமுக விரிவாக்கப் பணி உள்ளிட்ட பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.
ராக்கெட் ஏவுதளம் தொடர்பாக ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். குலசேகரன்பட்டினம் பகுதியில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இங்கு சுமார் 2,300 ஏக்கர் நிலம் தமிழக அரசு சார்பில் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரதமர் உடன் இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். அரசியல் ரீதியாக திமுக - பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. தேர்தல் வரவுள்ளதை அடுத்து இம்மோதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினும், பிரதமர் மோடியும் ஒரே மேடையை பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT