Published : 22 Feb 2024 05:41 AM
Last Updated : 22 Feb 2024 05:41 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தைத் தொடர்ந்து, நேற்று 12 சட்டமுன்வடிவுகள் பல்வேறு துறை அமைச்சர்களால் அறிமுகம் செய்யப்பட்டன.
ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் மலக்கசடு, கழிவுநீரைப் பாதுகாப்பாக அகற்றஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம்செய்தார். அதில், மலக்கசடுகள், கழிவுநீரை சேகரித்துக் கொண்டு செல்லுதல், அகற்றுவதற்கான நடவடிக்கைகளை குறிப்பேட்டில் பதிவு செய்வது, கழிவுநீர் சிந்தினால்அதை வாகன உரிமையாளர், பொறுப்பாளரே அகற்றும் வகையிலான சரத்துகள் இடம்பெற்றுள்ளன. மீறினால், அபராதம் விதிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ஊரக உள்ளாட்சிகளில் திடக்கழிவுகளை திறம்பட சேகரிப்பதற்கும் அறிவியல் சார்ந்த முறையில் அதை அகற்றுவதற்கும் ஊராட்சியில் மீது ஒரு கடமையை ஏற்படுத்துவதற்கான சட்டத்திருத்த முன்வடிவையும் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்தார்.
கடந்த 2001-ம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டத்தில், மாநில நெடுஞ்சாலைகள் அமைப்பு, நெடுஞ்சாலைகள் அதிகார அமைப்பு ஆகியவற்றுக்கு பதில்மாநில தலைமை நிர்வாகி, நிர்வாகிகள் என மாற்றுவதற்கான சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகம் செய்தார்.
கடந்தாண்டு ஏப்.1-ம் தேதி, சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியார்துறை பங்களிப்பில், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்டமுன்வடிவையும் அவர் அறிமுகம் செய்தார். நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்த உடனடி, நீ்ண்டகால திட்டம் தயாரித்தல், பன்னாட்டு நிதியைக் கொண்டுவருவதற்கான மாதிரிகளை உருவாக்குவது இந்த ஆணையத்தின் பணியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேரம், 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட் டுள்ளது.
தொடர்ந்து, வணிகம்சாரா நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல்செய்வது தொடர்பாக ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்திருத்த முன்வடிவு, மாநிலத்தின் எதிர்பாராத செலவுகளுக்காக, அதற்கான நிதியத்தின் உள்ளடக்கத் தொகையை ரூ.150 கோடியில் இருந்து ரூ.500 கோடியாக உயர்த்தும் வகையில் எதிர்பாரா செலவுநிதிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்வடிவு, வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் மாநில உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 3 சதவீதம்வரை குறைக்கும் வகையில், நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவு என 3 சட்டத்திருத்த முன்வடிவுகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்தார்.
அதைத்தொடர்ந்து, சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா)சட்டத்திருத்த முன்வடிவை வீட்டுவசதி அமைச்சர் சு.முத்துசாமி அறிமுகம் செய்தார். இந்த சட்டத்திருத்தம், சென்னையில் நிலவும் போக்குவரத்து சிக்கல்களை தீர்க்கவும், கும்டா அதிகார அமைப்பைமாற்றியமைக்கவும், அதிகார அமைப்பின் பங்கை மேம்படுத்தவும் வழிவகை செய்கிறது. இந்த அதிகார அமைப்பின் தலைவராக முதல்வர் செயல்படுவார்.
இதையடுத்து, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டதன் அடிப்படையில், பாரதியார், பாரதிதாசன், அழகப்பா,மனோன்மணீயம், பெரியார், திருவள்ளுவர், தமிழ்நாடு திறந்தநிலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் ஓய்வு வயதை 58-ல் இருந்து60 ஆக உயர்த்தும் வகையில், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் சட்டங்களை திருத்துவதற்கான சட்டத்திருத்த முன்வடிவை உயர்கல்வி அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிமுகம் செய்தார்.
மேலும், கடந்த 1914-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு மருத்துவ பதிவுச்சட்டத்தை புதுப்பிக்கவும், தேர்தல் நடவடிக்கைகளில் சீர்திருத்தம் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதையடுத்து. தமிழ்நாடு மருத்துவ பதிவுச்சட்டத்தை நீக்கி, தமிழ்நாடு மாநில மருத்துவ மன்றத்தை உருவாக்குவதற்கான சட்டமுன்வடிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். இந்தசட்ட முன்வடிவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித் தார்.
அதைத்தொடர்ந்து, அறநிலையத் துறை கோயில்களுக்கான அறங்காவலர்களாக தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களையும் நியமிக்கும் வகையிலான சட்டத்திருத் தத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிமுகம் செய்தார். தொடர்ந்து, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் தயாரித்தல், ஒப்புதல்செய்தல், கண்காணித்தல் ஆகியவற்றுக்காக ஒரு சட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அறிமுகம் செய்தார்.
இந்த 12 சட்ட முன்வடிவுகளும் இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில், பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT