Published : 22 Feb 2024 06:10 AM
Last Updated : 22 Feb 2024 06:10 AM
மதுரை: இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு அறிவித்த திட்டங்கள் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. டைடல் பார்க் அறிவிப்புவெளியாகி 2 ஆண்டுகளான நிலையில், நிதி ஒதுக்கப்படவில்லை. மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. மதுரை கூட்டுக் குடிநீர் திட்டப் பணி மெத்தனமாக நடந்து வருகிறது.
பாஜகவில் இருந்து பலரும் அதிமுகவில் இணைகின்றனர். கட்சி மாறுவது ஜனநாயக உரிமை. அதேபோல, போகிறவர்களையும் தடுக்க முடியாது. விருதுநகரில் அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட ஜவுளிப் பூங்கா திட்டத்துக்கு திமுக அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிறது.
திமுகவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகாரத்தில் இருக்கின்றனர். அது கட்சி அல்ல, கம்பெனி. திமுக வாரிசு அரசியல் செய்கிறது. ஒரு குடும்பத்துக்குள் கட்சி போகக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை. அதிமுகவில் சாதாரண தொண்டன்கூட, என்னைப் போன்று உயர்ந்த பொறுப்புக்கு வரமுடியும்.
மக்களவைத் தேர்தல் அறிவித்தபின்புதான் கூட்டணி குறித்து முடிவாகும். மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்திதான் வாக்குக் கேட்க வேண்டும் என்பதில்லை. 2014-ல் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி ஜெயலலிதா வாக்கு கேட்கவில்லை.
வேறு கட்சியிலிருந்து வந்தவர் சேலம் ஏ.வி.ராஜு. கட்சியின் கட்டுப்பாடு, விதிகளை மீறியதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் கூறுவதை எல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது. பதவி இல்லாத விரக்தியில் அவர் பேசுகிறார்.
சசிகலா, ஓபிஎஸ் காரில் அதிமுக கொடி கட்டிப் பயணிப்பதாக ஆதாரப்பூர்வ தகவல் இல்லை. அப்படியிருந்தால், அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
திமுக தலைமையிலான கூட்டணியில் இன்னும் பேச்சுவார்த்தை முடியவில்லை. திமுக கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகள் வெளியே செல்கின்றன என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இரட்டை இலைச் சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப்பின்பு அவரது (ஓபிஎஸ்) ஆசைநிறைவேறாது. அது நிராசையாகவே முடியும்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் துரோகம் செய்தது திமுக அரசு.அந்தப் பிரச்சினையில் எங்கு, எதைப் பேச வேண்டுமோ, அதைப் பேச திமுக தவறிவிட்டது.
விலைவாசி உயர்வு, சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு, சட்டம்,ஒழுங்கு பிரச்சினையால் திமுகஅரசின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்த ஆட்சி தொடர்ந்தால், ஆண்டவனாலும்கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது.
இவ்வாறு பழனிசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT