Published : 21 Feb 2024 07:02 PM
Last Updated : 21 Feb 2024 07:02 PM
மதுரை: மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடக்கும் மாசி வீதிகளில் ரூ.11 கோடிக்கு டெண்டர் விட்டும் இன்னும் கம்பியில்லா புதை வழி மின்வயர் திட்டம் தொடங்கப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம், புதைவழி மின் திட்டத்துக்காக 'ஸ்மார்ட் சிட்டி' யில் அமைத்துக் கொடுத்த 3 அடுக்கு கம்பார்ட்மெண்ட்கள் அனைத்தும் உடைந்துபோய் கழிவு நீர் தேங்கி நிற்பதால் மின்வாரியத்தால் இந்த திட்டத்தை தொடங்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழாவில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள். இந்த விழாவில் தேர்களில் எழுந்தருளும் சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மன், நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
மாசி வீதிகளில் கடந்த காலத்தில் குடியிருப்புகளும், குறைந்தளவு வணிக நிறுவனங்கள் மட்டுமே இருந்தது. தற்போது மாசி வீதிகளில் குடியிருப்புகள் அனைத்தும் வணிக நிறுவனங்களாக மாறிவிட்டன. இந்த கட்டிடங்கள், மிக நெருக்கமாகவும், எண்ணற்ற மடங்கு பெருகிவிட்டது. அதனால், ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் திறந்த வெளியில் மின்வயர்கள் மின்கம்பங்களில் இருந்து மாசி வீதிகளில் செல்கின்றன.
இந்த வயர்கள், அலங்கோலமாக, சாலைகளின் குறுக்கும், நெடுக்கமாகவும், ஒருவர் மீது மற்றொரு வயர்கள் பின்னி பிணைந்து மாசி வீதிகளின் அழகை கெடுக்கும் வகையில் மின்வயர்கள் செல்கின்றன. அதனால், தேரோட்டம் நடக்கும் நாளில் மாசி வீதி, சித்திரை வீதிகளில் மின்சார வாரியத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இந்த நடைமுறைதான் காலம், காலமாக கடைபிடிக்கப்படுகின்றன.
ஆனால், தற்போது முக்கிய தேர்திருவிழா நடக்கும் கோயில் மாநகரங்கள் மற்றும் சென்னை மாநகரில் பெரும்பாலான சாலைகளில் மின்வயர்கள் மேலே செல்லாதவரை கம்பியில்லாத புதை வழி மின் வயர் திட்டமாக மாற்றப்பட்டு வருகிறது. ஆனால், 3, 500 ஆண்டிற்கு மேல் பழமையான மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் தேரோட்டம் நடக்கும் மாசி வீதிகளில் தற்போது வரை புதைவழி மின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் நிறைவேற்றப்படாத மற்ற கோவில் நகரங்களில் இந்த திட்டம் அந்த கோயில்களின் தேரோட்டம் நடக்கும் கம்பியில்லாத புதை வழி மின் வயர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தப்பட்சம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் நிறைவேற்றப்பட்ட மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் கூட இந்த புதை குழி மின் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மாநகராட்சி சார்பில் தேரோட்டம் நடக்கும் மாசி வீதிகள் மட்டுமில்லாது சித்திரை வீதிகளிலும் கம்பியில்லாத தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான புதைவழி மின் வயர் திட்டம் செயல்படுத்துவதற்காக இந்த சாலைகளில் தொலைத்தொடர்பு கேபிள்கள், மின்சார கேபிள்கள் ஆகியவற்றுக்காக பூமிக்கு அடியில் தனித்தனி கம்பார்ட்மெண்ட்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது வரை மின்சார வாரியம், இந்த சாலைகளில் புதை வழி மின் வயர் திட்டத்தை செயல்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவுக்கு முன்பாகவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தனர். ஆனால், தற்போது வரை செயல்படுத்தவில்லை.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ''மின்சார வாரியம் கம்பியில்லாத புதை வழி மின் வயர் திட்டத்தை செயல்புடுத்த கடந்த 6 மாதத்திற்கு முன்பே ரூ.11 கோடியில் டெண்டர் விட்டுள்ளது. டெண்டர் எடுத்த நிறுவனத்தினர் அதற்கான புதைவழி மின் வயர் திட்டத்திற்கான வயர்களை கொள்முதல் செய்து பணியை தொடங்கும்போது, மாநகராட்சி அமைத்துக் கொடுத்த 3 அடுக்கு கம்பார்ட்மெண்ட்கள் அனைத்தும், இடிந்து ஒன்றுடன் ஒன்று கலந்தது தெரிய வந்தது.
மேலும், மழைநீர், சாக்கடை நீர் அதில் தேங்கி நிற்கின்றன. அதனால், மாநகராட்சி இந்த இடிபாடுகளையும், கழிவு நீரையும் சீரமைத்துக் கொடுத்தால் மட்டுமே மின்சார வாரியம் புதை வழி மின் வயர் திட்டத்தை மாசி, சித்திரை வீதிகளில் செயல்படுத்த முடியும். தரமில்லாமல் போட்டாதாலே, கம்பார்ட்மெண்ட்கள் இப்படி உடைந்து போய் உள்ளன. மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடிதமும் எழுதிவிட்டோம். அவர்கள் நேரடியாக வந்து பார்வையிட்டு சீரமைத்துக் கொடுப்பதாக கூறினர். ஆனால், தற்போது வரை அதை சீரமைத்துக் கொடுக்காததாலே மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி புதை வழி மின் வயர் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை,'' என்றார்.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி தொடங்கும்போது, தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான கம்பியில்லா புதை வழி மின் வயர் திட்டம் என பிரமாண்டமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டம் அறிவிப்போடு தற்போது வரை நிற்கிறது. கடந்த காலங்களை போலலே, மின்தடை செய்து சித்தித்திரைத் திருவிழா தேரோட்டம் இந்த ஆண்டும் நடக்கும்நிலை உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT