Published : 21 Feb 2024 09:04 PM
Last Updated : 21 Feb 2024 09:04 PM
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள காலதாமதம் ஏன்? அம்பானி முதலீடு தமிழகத்தில் என்ன செய்யும்? ஓபிஎஸ் இருக்கை மாற்றத்தில் திமுக பின்னணி என்ன? பாஜக - அதிமுக கூட்டணி இணையுமா? மக்களவையில் தமிழக வாழ்வுரிமை கட்சிப் போட்டியிட வாய்ப்பா? திமுக கூட்டணியில் அங்கம் வகித்தும் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொள்ள மறுப்பதேன்? - இவ்வாறான பல கேள்விகளுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், நமக்கு பதில் அளித்திருக்கிறார். அவரது நேர்காணல் இங்கே...
திமுகவிடம் மக்களவைத் தேர்தலில் ‘சீட்’ கேட்டீர்களா? இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இருக்கிறதா?
“மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளின் கோரிக்கை. இது தொடர்பாக சேலத்தில் நடைப்பெற்ற மாநிலப் பொதுக் குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. முதல்வரிடம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறோம். விரைவில் முதல்வரைச் சந்தித்தும் பேசவிருக்கிறேன். எங்கள் கோரிக்கையை முன்வைக்கிறோம். ஆனால், போட்டியிட வேண்டுமா, இல்லையா என்பதை முடிவெடுக்கும் அதிகாரத்தில் திமுக இருக்கிறது. எனவே, முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும்.”
கடந்த காலங்களாக திமுக மீது அதிருப்திகளை முன்வைத்திருந்தீர்கள். ஆனால், ‘மக்களவையில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவோம்’ என தெரிவித்துள்ளீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?
”ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும், ஆதரிக்க வேண்டிய விஷயங்களில் ஆதரிப்பதும், மக்களுக்குப் பிரச்சினை உண்டாக்கும் விஷயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டிய கடமை இருக்கிறது. ஆனால், பெரும் அரசியல் கட்சிகளோடு கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக எல்லாத்தையும் ஆதரித்துப் பேச வேண்டும் என்னும் விதியை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பின்பற்றுகின்றன.
கூட்டணியில் இருப்பதற்காக கடந்து போகும் அரசியலை நான் செய்யவில்லை. சில வேளைகளில் மிகக் கடுமையாக குரலை உயர்த்தி சட்டப்பேரவையில் நான் பேசுகிறேன். மேலும். அதனை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல, போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறேன். திமுக தலைமையிலான கூட்டணியில், ‘தோழமைக் கட்சிகள்’ என்னும் பெயரில், சுட்டிக்காட்டாமல் கடந்து போகிறார்கள். எனவே, ‘திமுக கூட்டணியில் இருந்து கொண்டு எதிர்க்கிறீர்கள்’ என்று என்னை நோக்கி கேள்வி வருகிறது. நான் திமுகவை எதிர்க்கவில்லை. திமுக அறிமுகம் செய்யும் திட்டங்களால் மக்கள் மத்தியில் கூட்டணிக்கு அவப்பெயர் வந்து விடக்கூடாது. அதனால், ஒவ்வொருமுறையும் கடுமையான வாதங்களை முன்வைக்கிறேன்.”
தோழமை கட்சிகள் குரல் கொடுக்காத எந்தப் பிரச்சினைகளுக்கு நீங்கள் பேசியிருக்கிறீர்கள்?
“பரந்தூர் விமான நிலையம் விரிவாக்கத்தில் மக்களுடன் களத்தில் இறங்கி போராடினேன். ஆனால், மற்ற கூட்டணி கட்சிகள் என்னைப் போல் ஆணித்தரமாக கருத்துகளை எடுத்து வைத்தார்களா என்பது தெரியவில்லை. அதேபோல், செய்யாறில் விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது, இது விவசாயிகள் மத்தியில் திமுக மீது விமர்சனத்தை உண்டாக்கும் என விரிவாக முதல்வருக்கு தெரிவித்தேன்.
என்.எல்.சி விவகாரத்திலும் அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி நிலுவையில் இருந்த இழப்பீட்டு தொகையைப் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி களத்தில் போராடினேன். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் காவல் துறையில் உயர் பதிவுகளில் இருக்கிறார்கள். அவர்களைச் சட்டப் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்கில் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராடினேன்.
வேங்கைவயலில் தண்ணீர் தொட்டியை இடிக்க முற்பட்டு களத்தில் தொடர் போராட்டத்தை நிகழ்த்தினேன். ஆனால், மற்ற கட்சிகள் அறிக்கையோடு முடித்துக் கொண்டனர். சிலர் சனி, ஞாயிறு நாட்களில் மட்டும் ஆர்ப்பாட்டத்தோடு கடந்து சென்றனர். இப்படியாக, என்னைப் போல் மற்ற கூட்டணி கட்சிகளும் கருத்துகளை முன்வைத்திருந்தால், ’கூட்டணி கட்சியாக இருந்துகொண்டு ஏன் எதிர்க்கிறீர்கள்?’ என்னும் கேள்வியே எழுந்திருக்காது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் எதிர்ப்பு, கூட்டணி கட்சியாக இருக்கும் போது ஆதரவு என்னும் அரசியல் நிலைப்பாட்டை தமிழகத்தில் உள்ள கட்சிகள் காலம் காலமாகப் பின்பற்றி வருகிறார்கள். இது மாற்றப்பட வேண்டும்.”
‘திமுகவுக்கு ஆதரவு, ஆனால் காங்கிரஸுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய மாட்டோம்’ என கூறியுள்ளீர்கள். காங்கிரஸ் மீது ஏன் இந்த வெறுப்பு?
“கடந்த மூன்று தேர்தல்களிலுமே காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்கு கேட்பதில்லை என்னும் முடிவை எடுத்திருக்கிறேன். ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு காங்கிரஸ் ஆதரவாக இருந்தது. தமிழ் மக்களைக் கொன்று குவிக்க பேரூதவியாக காங்கிரஸ் செயல்பட்டது. அந்த வலி காரணமாக காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க மாட்டேன் என்னும் முடிவெடுக்கப்பட்டது.”
‘ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் திமுகவின் பங்கு இல்லை’ என சொல்லிவிட முடியுமா?
“மாநில கட்சியாக திமுக இருந்தது. மத்தியில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தது. திமுகவுக்கு எதிராக கண்டனத்தை நான் பதிவு செய்திருக்கிறேன். அவர்களுக்கு எதிராகப் போராட்டத்தையும் கடந்தகாலங்களில் நடத்தியிருக்கிறேன்.”
பாஜகவோடு அதிமுக மீண்டும் இணைய வாய்ப்பிருக்குமா..?
“பாஜக உடன் கூட்டணி இல்லை’ என்பதை பலமுறைக்கு அதிமுக அறிவித்திருக்கிறார்கள். அதனால், அதை நாம் நம்புவோம்.”
ஆனால், பாஜகவை நேரடியாக விமர்சிப்பதை அதிமுக தவிர்க்கிறதே...
“மத்திய அரசு எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளைப் பணிய வைக்க, அவர்களின் ராஜதந்திரிகளான அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ சோதனையை ஏவும். ’மூன்றாவது முறையாக மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரலாம்’ என்று கணிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே, இந்தச் சூழலில் பகைத்துக் கொள்ள வேண்டாம் என அதிமுகவினர் அடக்கி வாசிக்கிறார்கள்.”
சட்டப்பேரவையில் பல மாதங்களாக ஓபிஎஸ் இருக்கை மாற்றம் தொடர்பாக திமுக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. ஆனால், இப்போது மாற்றியிருப்பதன் பின்னணி என்ன?
“துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட உதயகுமாரை அங்கீகரித்து இருக்கை ஒதுக்கியிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் எந்த இடத்தில் அமர வேண்டும் என்பது சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. முதல்வர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இருக்கை மாற்றப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு ஓபிஎஸ் யார் பக்கம் என்பதில் தெளிவில்லாமல் இருந்தது. தற்போது அவர் பாஜகவுடன் கூட்டணியே அமைத்துவிட்டார். அதனால், பாஜகவை எதிர்க்கும் திமுக, பாஜகவுடன் ஆதரவாக இருக்கும் ஓபிஎஸ்ஸின் இடத்தை மாற்றியிருக்கிறது.”
சட்டப்பேரவையில் கொண்டு வந்த ‘தொகுதி மறுசீரமைப்பு’ எதிரான தீர்மானத்துக்குப் பாஜக ஆதரவு தெரிவித்ததே... மத்தியில் ஆதரவு, மாநிலத்தில் எதிர்ப்பு! இது மக்கள் நலனா?
“பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எதிர்த்து சுயமரியாதையோடு கருத்து சொல்லும் முதுகெலும்புடைய பாஜக ஆளுமைகள் யாரும் தமிழகத்தில் இல்லை. சட்டப்பேரவையிலும் வானதி சீனிவாசன் மழுப்பலான கருத்தைத்தான் கூறினார்.
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தொகுதிகளை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது. உத்தரப் பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் மக்கள்தொகை நெருக்கம் அதிகம் உள்ளது. ஆனால், தமிழகத்தில் மத்திய அரசின் திட்டத்தைத் தீவிரமாகப் பின்பற்றி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய ஒரு காரணத்துக்காக தொகுதிகளை குறைக்கிறோம் என்று சொல்வது ஏற்புடையது அல்ல. அப்படி குறைப்பது ஜனநாயகத்துக்கே பேராபத்தாகிவிடும்.”
அதானி, அம்பானியைப் பாஜகவுடன் தொடர்புப்படுத்தி பேசுகிறோம். ஆனால், தமிழக அரசு அவர்களின் முதலீட்டை வரவேற்கிறது. இதை எப்படி பார்க்கறீர்கள்?
“மக்களின் உழைப்பைச் சுரண்டி, ஏழை மக்களின் வரிப் பணத்தில் கொழுத்திருக்கும் கார்ப்ப்ரேட் நிறுவனத்திடம் முதலீடு பெறுவது எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழக வாழ்வுரிமை கட்சி அதை எதிர்க்கிறது.”
10.5% வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்தானது. சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பின் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை திமுக தள்ளிப்போடுவது ஏன்? உள்நோக்கம் கொண்டதா?
“இது குறித்து முதல்வரிடம் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகிறோம். சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானமும் கொண்டு வந்துள்ளேன். தமிழகத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காததால் மக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய ’கல்வி’ மற்றும் ’வேலைவாய்ப்பு’ மறுக்கப்படுகிறது. பிஹாரைத் தொடர்ந்து பல மாநிலங்கள் சாதிவாதி கணக்கெடுப்பை எடுப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த நவீன உலகில் தமிழக அரசு நினைத்தால், வெறும் ஒரு மாத காலத்துக்குள் அனைத்து தரவுகளை எடுத்து விட முடியும். அதைச் செய்ய திமுக தயங்குகிறது. இந்தப் பட்ஜெட்டிலும், ’மத்திய அரசை சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கச் சொல்லி வலியுறுத்துவோம்’ என அறிவித்துள்ளது. ’இந்தியாவுக்கே சமூக நீதி கொள்கைக்கு வழிகாட்டும் திமுக அரசு’ என்பதை ஒவ்வொரு முறையும் முதல்வரும் அமைச்சர்களும் மார்தட்டிக் கொள்கிறார்கள். அதை நான் வரவேற்கிறேன். அந்த சமூக நீதியை நிலைநாட்டவே தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என கோருகிறோம். ஆனால், தொடர்ந்து திமுக காலம் தாழ்த்துவதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதை கேள்வியாக ஏற்கெனவே எழுப்பியிருக்கிறேன்.”
தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், அதனால் எதிர்க்கட்சிகளும் பலனடைந்திருக்கிறதுதானே...
”80% பலனை பாஜக அடைந்திருக்கிறது. அடுத்ததாக காங்கிரஸ் பலனடைந்துள்ளது. பிற கட்சிகளும் பலனை அடைந்து இருக்கிறார்கள். ஆனால், இந்த லாபத்தை அடைய வேண்டும் என்னும் உள்நோக்கத்தோடு பாஜக இந்த திட்டத்தை அமல்படுத்தியது.
ஆளும் அரசாக இருக்கும் ஒரு கட்சி, கார்ப்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் சட்டத்தையே வளைத்து, கமிஷனை மறைமுகமாகப் பெறுவதற்குப்பதில், ‘தேர்தல் பத்திரம்’ என்னும் மாற்று பெயரில் பெறுகிறது. அதை யார் வாங்குகிறார்கள், யார் கொடுக்கிறார்கள் என்னும் முழு விவரத்தையும் தர மறுக்கிறது. இது மிகவும் மோசமான திட்டம். இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் திட்டத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறது.”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT