Published : 21 Feb 2024 01:01 PM
Last Updated : 21 Feb 2024 01:01 PM

“விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்ததில் 10% கூட ஒன்றியம் செய்யவில்லை” - கமல்ஹாசன்

சென்னை: “விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்ததில் 10% கூட ஒன்றியம் செய்யவில்லை” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து இன்று ஏழாம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் கமல்ஹாசன் பேசினார். அப்போது பேசுகையில், “இந்த ஏழு ஆண்டுகள் எப்படி கடந்தது என்பது தெரியவில்லை என்று கூறுவது மெய்யாக இருக்காது. ஒவ்வொரு கனவும் புரிந்தது. தெரிந்தது. நம்முடைய ஏற்பாடு, தயாரிப்பு எல்லாம் நம்முடைய நேர்மையும், உத்வேகமும் தான் என்பது எனக்குப் புரிந்தது.

வேறு எதுவும் இல்லாமல் இந்த அரசியல் களத்தில் குதிக்கும் தைரியம் என் வீட்டு மாடியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காரணம், நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் இல்லை. சோகத்தில் வந்தவன். என் மக்களுக்கு இப்படி நடக்கலாமா. ஏன் இப்படி சென்றுகொண்டிருக்கிறது என்கிற கேள்வியுடன் அரசியலுக்கு வந்தவன் நான். இதற்கு பிறகு என்ன நடக்கும்? எப்படி போகும்? என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல் நான் இங்கு வந்திருக்கிறேன்.

நான் முழுநேர அரசியல்வாதி கிடையாது என எல்லோரும் சொல்கிறார்கள். முழுநேர அரசியல்வாதி என்பவர் யார். ஒருவனும் கிடையாது என்பதுதான் உண்மை. முழுநேர அப்பனும் கிடையாது. முழுநேர கணவனும் கிடையாது. முழுநேர பிள்ளையும் கிடையாது. எல்லோரும் 8 மணிநேரம் தூங்க வேண்டும். எல்லோரும் 8 மணிநேரம் வேலை செய்தாக வேண்டும். அப்படியென்றால் முழுநேர அரசியல்வாதி யார் என்று சொல்லுங்கள்.

என்னை இத்தனை வருடமாக இரண்டு வீடு, கார் என வசதியாக வைத்துள்ளீர்கள். அதற்கு பிறகு நான் ஏன் அரசியலுக்கு வந்துள்ளேன் என்றால், அதற்கு ஒரே காரணம் மக்களின் அன்புதான். மக்கள் எனக்கு இதுவரை காட்டிய அன்புக்கு கைமாறு இதுவரை செய்யவில்லை. நான் சினிமாவில் நீங்கள் ரசிப்பதை எல்லாம் செய்துவிட்டேன். வரி கட்டிவிட்டேன். ஆக எனது கடமை முடிந்துவிட்டது என்று என்னால் போக முடியாது. ஏனென்றால் மக்கள் கொடுத்த அன்பு இன்னும் பாக்கி இருக்கிறது. அதற்காக தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

ஏன் இன்னும் முழுநேர அரசியலுக்கு வரவில்லை என்று கேட்பவர்களுக்கு, இன்று நடக்கும் கூட்டம், கூட்டத்தில் ஏற்பட்ட கொடி, இனி இங்கு வழங்க போகும் சிற்றுண்டி, நான் தற்போது நிற்கும் மேடை இவை எல்லாமே நான் சம்பாதித்த பணத்தில் இருந்து பண்ணியது. நான் திமிராகப் பேச வேண்டும் என்று சொன்னால், இந்த திமிர் எல்லாம் பெரியாரிடம் இருந்து வந்தது.

ஒரு வேட்பாளர் தேர்தலுக்கு 95 லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்கிறது தேர்தல் ஆணையம். நிஜத்தில் 95 லட்ச ரூபாய் மட்டுமே செலவு செய்தால் என்னவாகும் சொல்லுங்கள். கோவை தெற்கு தொகுதியில் நடந்ததுதான் நடக்கும். நான் கோவையில் தோற்றேன் என்பது 1728 வாக்குகளால் அல்ல. 90,000 பேர் அந்த தொகுதியில் வாக்களிக்கவில்லை. இதை தான் எனது தோல்வியாக நான் கருதுகிறேன். இந்தியா முழுவதும் 40 சதவீத மக்கள் வாக்களிப்பதில்லை. அவர்கள் அனைவரும் வாக்களித்தால் எல்லாம் சரியாகிவிடும். முழுநேர அரசியல்வாதி யார் என்னை கேள்வி கேட்பவர்கள் வாக்களிக்காத இந்த 40 சதவீதம் யார் என்று கேட்க முடியுமா. முழுநேர குடிமகன்கள் கூட இல்லாமல் வாக்களிக்காமல் வீட்டில் இருக்கிறார்கள். இப்படியான நிலையில் 95 லட்ச ரூபாய் மட்டுமே செலவு செய்யும் நேர்மையானவன் வெற்றிபெறவே முடியாது.

என்னை அரசியலுக்கு வரவைப்பது கஷ்டம் என்றார்கள். ஆனால் போக வைப்பது அதைவிட கஷ்டம். சும்மா சொல்லவில்லை. எஞ்சிய வாழ்நாள் இனி இப்படித்தான். இனி எனது எல்லாம் உங்களது தான். இப்படியான ஆளை நீங்கள் தூக்கிப்பிடித்தாக வேண்டும். அதற்கு வாக்களிக்காமல் வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் வெளியேவர வேண்டும். நீங்கள் வெளியே வந்தால் நான் இவ்வளவு செலவு செய்ய வேண்டாம். நீங்கள் இதுவரை கொடுத்த பணம் தான் என்னிடம் செலவு செய்ய உள்ளது. உங்களிடம் இருந்து திருடினால் தான் ஆயிரம் கோடி வரைக்கும் இருக்கும். நான் அதற்கு வரவில்லை.

என்னுடைய அரசியல் பயணம் என்பது ஆரம்பித்துவிட்டது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. தொடர்ந்து அழுத்தமாக நடைபோட்டு கொண்டே இருப்பேன். இந்த அரசியல் வேறு. எங்களின் சக அரசியல்வாதி கேட்பதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. சக அரசியல்வாதி என்று நினைப்பவர்கள் அரசியல்வாதிகளே அல்ல வியாபாரிகள். அவர்களை என்னை அது போல் ஆசைப்பட வேண்டாம். இது வேறு அரசியல். இந்த அரசியலில் கொடுத்தால் என்ன கிடைக்கும் என்கிற வியாபாரம், வர்த்தகம் கிடையாது. ஏற்கனவே பெற்றுவிட்டேன். பெற்றதற்கான வட்டியாக செலுத்துகிறேன் என்று நினைத்தால் இந்த அரசியலுக்கு வர முடியும்.

இன்றைக்கு முக்கியமாக தேசத்தின் குடிஉரிமை என்கிற விஷயமே ஆட்டம் கொண்டிருக்கும்போது கட்சி எல்லாம் இரண்டாம் பட்சம் தான். தேசம் தான் முதலில். இரண்டாவது எனது தமிழ்நாடு. அதன்பின்னரே மொழி. நாம் மொழியை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் அல்வா கொடுப்பது போல் அதை காண்பித்து மற்ற இரண்டையும் கழித்துவிடுவார்கள். விவசாயிகளுக்கு இன்றைக்கு தமிழகம் செய்திருக்க கூடிய விஷயத்தில் 10% கூட ஒன்றியம் செய்யவில்லை.

இன்னும் சொல்லப்போனால், நாட்டை படையெடுக்க வரும் எதிரிபடைக்கு என்னென்ன வரவேற்பு கிடைக்குமோ அத்தனையும் டெல்லியில் விவசாயிகளுக்கு கிடைத்து கொண்டிருக்கிறது. டெல்லியில் விவசாயிகளை தடுக்க ஆணி படுக்கை போடுகிறார்கள். அதேநேரம், இங்கு நாம் விவசாயிகளை மதிக்கிறோம். இந்த வித்தியாசம் அண்ணா காலத்தில் இருந்து தெள்ளத் தெளிவாகிறது. தெற்கு தேய்த்தால் பரவாயில்லை என்று நினைக்கக் கூடிய மையம் அங்கு இருக்கிறது. அது தவறு. நாம் செய்த நன்மைக்காக, தேசத் தொண்டுக்காக இன்று தண்டிக்கப்படுகிறோம். தொகுதி வரையறை என்று எம்பிக்கள் எண்ணிக்கையை குறைக்க பார்க்கிறார்கள். தேசத்தின் நன்மைக்கென குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களை கடைபிடித்த தேசபற்றுக்காக நாம் குரல் கொடுக்க முடியாத மாதிரி தண்டனை கொடுக்கிறார்கள்.

வருவாய் எந்த மாநிலத்தில் இருந்து கிடைக்கிறது என்று மத்திய அரசு கணக்கெடுத்தால் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் இருக்கும். நாம் கொடுக்கிற ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா தான் திரும்ப கிடைக்கிறது. ஆனால், உத்தரபிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களுக்கு 4 ரூபாய் திரும்ப கிடைக்கிறது. பிஹாரில் இருப்பது எனது தம்பிதான். அவர்களும் நன்றாக இருக்கட்டும். ஆனால், என் சிற்றுண்டி தான் அவனுக்கான தின்பண்டமாக இருக்கக்கூடாது. எல்லோருக்கும் சமமான உரிமை இருக்க வேண்டும். ஏழ்மை நிரந்தர நிலைமை அல்ல. நீங்கள் நினைத்தால் மாற்றக்கூடியது. ஒரு ஓட்டுக்கு 5000 கொடுத்தால் வாங்கும் நீங்கள் இழப்பது 50 லட்சம். இந்தக் கட்சி ஆரம்பிப்பதால் எனக்கு எந்த பயனும் அல்ல. நஷ்டம் தான். என்றாலும் பயணித்துக் கொண்டே இருப்பேன்" இவ்வாறு பேசினார் கமல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x