Published : 21 Feb 2024 10:07 AM
Last Updated : 21 Feb 2024 10:07 AM

அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள்... அத்திக்கடவு - அவிநாசி திட்டம் திறப்பு எப்போது?

திருப்பூர்: கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 1045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பி, அதன் மூலமாக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மற்றும் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக தொடங்கப்பட்டது தான் அத்திக்கடவு - அவிநாசி திட்டம். 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, 2016-ம் ஆண்டு அவிநாசியில் பலரும் தொடர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஆய்வு பணிகளுக்கான ஆரம்ப கட்ட நிதியாக ரூ.3.27 கோடியை ஒதுக்கினார். அதைத்தொடர்ந்து, அரசாணை வெளியிட்டார். அவிநாசியில் 2017-ம் ஆண்டு ஒரு நாள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பின்னர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, 2018-ம் ஆண்டு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இன்றைக்கு ரூ.1652 கோடி நிதியில் முழுமை அடைந்துள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் பழனிசாமி அவிநாசியில் பேசும்போது, அத்திக்கடவு - அவிநாசி திட்டம், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு 80 சதவீதத்துக்கும் அதிகமாக பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு 34 மாதங்கள் ஆட்சியில் இருந்த திமுக இன்னும் திட்டத்தை திறந்து வைக்கவில்லை என்றார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதுடன், விடுபட்ட குளம், குட்டைகளை சேர்க்க வலியுறுத்தி அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் மார்ச் 1-ம் தேதி பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக அத்திக்கடவு - அவிநாசி திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.சுப்பிரமணியம் கூறியதாவது: 2019 பிப்.28-ம் தேதி அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக முன்னாள் முதல்வர் பழனிசாமி, அவிநாசிக்கு நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். 2 ஆண்டுகளில் திட்டம் முழுமையாக நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு வரும் என உறுதி அளித்தார். இதையடுத்து 2019 மார்ச் மாதம், பணி ஆணைகள் வழங்கப்பட்டன. 10 மாதங்களில் 1045 குளம், குட்டைகளின் நீர் வழித்தடங்கள் ஆய்வு, டிசைன் செய்யப்பட்டு, 2019 டிச.24-ம் தேதி பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் உலகையே அச்சுறுத்திய கரோனாவால் தாமதமானது. ஆனால், அந்த கால கட்டத்திலும் கூட, 83 சதவீதம் பணிகள் நிறைவடைந்தது. எஞ்சிய 17 சதவீத பணிகள்தான், இன்றைக்கு 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது திட்டத்தை திறக்க பவானி ஆற்றில் தண்ணீர் இல்லை. இந்த திட்டத்துக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

முழுமையாக அனைத்து குளம், குட்டைகளில் சோதனை ஓட்டம் நடைபெறவில்லை என, திட்டத்தை திறக்காமல் இருக்க பல்வேறு காரணங்களை அடுக்குகின்றனர். சோதனை ஓட்டம் நிறைவடைந்து ஓராண்டாகிறது. இன்றைக்கு திட்டத்துக்காக பம்பிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து திறந்துவைக்க தண்ணீர் தேவையில்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக திட்டத்தை தொடங்கி வைத்துவிடலாம்.

மக்களவைத் தேர்தல், வாக்கு எண்ணிக்கை, தேர்தல் நன்னடத்தை விதிகள், அதன் பின்னர் வறட்சி என மேலும் தாமதமாகும் என்பதால், தற்போது அரசு நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி, திட்டத்தை தொடங்கிவைக்க வேண்டும் என்பதே, இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த 4 தலைமுறைக்கு மேலான மக்களின் எதிர்பார்ப்பு எனலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x