Published : 14 Aug 2014 10:53 AM
Last Updated : 14 Aug 2014 10:53 AM

ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கைக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதி மன்றம் நோட்டீஸ்

பணி விதிகளுக்கு எதிராக கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்தில் பங்கேற்று, பிற மதத்தினரை மிரட்டுவதாக ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், மேற்கு பரசேரி இந்து சாம்பவர் சமுதாயத் தலைவர் எம்.ஜோதி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

‘’மேற்கு பரசேரி கிராமத்தில், அண்மையில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய 5 குடும்பத்தினர் வீடுகளில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், கிராமத்தில் மத மோதல் ஏற்பட்டுவருகிறது. ஊராட்சி சட்டத்தில் வீட்டை பிரார்த்தனைக் கூடமாக மாற்ற முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், உள்ளாட்சி, வருவாய்த் துறை அனுமதி பெறாமல் வீடுகளில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இப்பகுதியில், 2012-ல் வீடுகளில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்த கல்குளம் தாசில்தார் தடை விதித்தார். இந்த தடை இருந்தாலும் ஐஏஎஸ் அதிகாரி சி.உமாசங்கர், மேற்கு பரசேரி கிராமத்துக்கு வந்து ரூபி என்பவர் வீட்டில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினார். அதில் அவர் பிற மதத்தினருக்கு மிரட்டல் விடுத்தார்.

ஐஏஎஸ் அதிகாரி அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். அவர் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி பணிக்குரிய கடமையைச் செய்வதில் தவறிவிட்டார். அவர் தனது அதிகாரப்பூர்வ கடிதம் மூலம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிற மதத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளார். இது அரசியலமைப்பு சட்டம், இந்திய ஆட்சிப்பணி விதிக்கும் எதிரானது.

பதற்றமான பகுதிகளில் சட்டவிரோதமாக பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பது நன்கு தெரிந்தும், உமாசங்கர் அடிக்கடி மேற்கு பரசேரி கிராமம் வந்து கிறிஸ்தவ மதக் கூட்டம் நடத்தி வருகிறார். உமாசங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், மாவட்ட நிர்வாகமும், போலீஸாரும் உமாசங்கருக்கு ஆதரவாக உள்ளனர்.

எனவே, உமாசங்கர் மீது சட்ட நடவடிக்கை மற்றும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.சுபாஷ்பாபு வாதிட்டார். மனுவுக்குப் பதிலளிக்க மத்திய பணியாளர் நலம் மற்றும் பயிற்சித் துறை செயலர், தமிழக தலைமைச் செயலர் மற்றும் உமாசங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த விசாரணை செப். 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x