Published : 20 Feb 2024 06:34 PM
Last Updated : 20 Feb 2024 06:34 PM

“நிறைவேறாத எதிர்பார்ப்புகளும், வரவேற்பும்...” - முத்தரசன் பட்டியல் @ வேளாண் பட்ஜெட்

சென்னை: “பரந்துபட்ட பிரிவினரின் கருத்துக்களையும், தேவைகளையும் கேட்டறிந்து ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இலக்கியச் சுவையுடன் அமைந்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது” என அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (20.02.2024) சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நான்காவது வேளாண் நிதிநிலை அறிக்கையை (2024 - 25) சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். கடந்த மூன்றாண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் கூறப்பட்ட உறுதி மொழிகள், திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள விபரங்களை நிதிநிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

வரும் ஆண்டில் இயற்கை சார்ந்த சாகுபடிக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்களை முன் வைத்துள்ளது. மண்ணுயிர் பாதுகாக்கும் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது ஆடா தொடா, நொச்சி, செங்காந்தள் உள்ளிட்ட மூலிகை செடிகள் வளர்ப்பில் கவனம் செலுத்தியுள்ளது.

சிறு தானியங்கள் மற்றும் பருப்புவகைகள் உற்பத்திக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மண்புழு உற்பத்திக்கு மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. “ஒரு கிராமத்துக்கு ஒரு பயிர்” புதிய திட்டம் 15 ஆயிரத்து 280 கிராமங்களில் செயல்படுத்தப்படும் என்பது புதிய முயற்சியாகும்.

டெல்டா கால்வாய்கள் தூர்வார ரூ.110 கோடி ஒதுத்தப்பட்டுள்ளது. பாசனப் பரப்பளவு சுமார் ஒரு லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கூட்டுறவு பயிர் கடனாக ரூ 16 ஆயிரத்து 500 கோடி இலக்கு நிர்ணயித்து அதற்கு ரூ.700 கோடி வட்டி மானியம் வழங்குவதாக உறுதியளிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 150 நாள் வேலை வழங்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

பேரிடர் காலங்களில் பேரிழப்புகளை சந்திக்கும் விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்ட உதவி முழுமையாக கிடைப்பதை உறுதி செய்வது அவசியமாகும். இது தொடர்பாக தனியார் காப்பீட்டு நிறுவனங்களை தவிர்த்து பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

ஒப்பீட்டு அளவில் வேளாண் வணிகம், பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறது. இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும். நிலத் தொகுப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை குறித்து நிதி நிலை அறிக்கையில் ஏதும் இடம் பெறவில்லை.

பரந்துபட்ட பிரிவினரின் கருத்துக்களையும், தேவைகளையும் கேட்டறிந்து ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இலக்கிய சுவையுடன் அமைந்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x