Published : 20 Feb 2024 03:47 PM
Last Updated : 20 Feb 2024 03:47 PM
சென்னை: “இது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சிறப்பான வேளாண் நிதிநிலை அறிக்கை” என தமிழக வேளாண் பட்ஜெட்டுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “2024-25 நிதியாண்டுக்கான வேளாண் வரவு செலவுத் திட்டத்திற்கு 42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. 2020-21-ல் 152 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு, 2022-23-ல் 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட போதிலும், இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர்ச் சேதத்திற்கு, 380 கோடியே 40 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை, 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்திட, 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 4,436 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பரப்பை அதிகரித்து, உற்பத்தியைப் பெருக்க ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மண்வளத்தைப் பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்தவும், முதல்மைச்சரின் மண்ணுயிர் காத்து, ‘மண்ணுயிர் காப்போம் திட்டம்' என்ற புதிய திட்டம் 22 இனங்களுடன் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளை மகிழ்விக்கும்.
ரசாயன உரங்களின் பயன்பாட்டினைக் குறைத்து, மண்ணின் வளம் காக்க 6 கோடியே 27 லட்சம் ரூபாய் மத்திய - மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 37,500 ஏக்கர் களர் நிலங்களைச் சீர்படுத்த 7 கோடியே 50 லட்சம் ரூபாயும், 37,000 ஏக்கர் அமிர நிலங்களைச் சீர்படுத்த 15 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும். இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு 10 லட்சம் ஏக்கரில் பயிர் இடுவதற்காக 5 லட்சம் லிட்டர் உயிர் உரங்கள், 7 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.
வேம்பினை பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வேளாண் காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.இயற்கை விவசாயத்துக்கு இயற்கை உரம் தயாரிக்க 100 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும்.
10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம், வேளாண் காடுகள் திட்டம்' மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும்.
இயற்கைவள மேம்பாட்டு பணிகளுக்காக மட்டும் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு, சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீன்ம்பூர் சீரக சம்பா, அய்யம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம்புளி, புவனகிரி மிதிபாகற்காய், செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி, ஓட்டைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் மகிழ்ச்சி தருகிறது.
முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த ரூ.41.35 கோடி ஒதுக்கீடு, நடப்பாண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல புதிய அறிவிப்புகள் வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது. ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும். விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய கோவையில் ஆய்வகம் அமைக்கப்படும்.
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு, கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம் அறிமுகம். துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் ரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.
புதிய அறிவிப்புகள் விவசாயிகளுக்கு ஊக்கத்தை அளிக்கும், உழவர் சந்தையை போன்று தரமான வேளாண் பொருட்களை நகர்ப்புறங்களில் விற்பனை செய்ய ரூ.5 கோடியில் 100 உழவர் அங்காடிகள் அமைக்கப்படும். விவசாயிகள் வருவாய் இழப்பிலிருந்து மீண்டு வர பயிர்க் காப்பீடு திட்டம் 1,775 கோடியில் செயல்படுத்தப்படும். பொருளீட்டுக் கடன் வரம்பு ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் தகுதியுள்ள புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.16,500 கோடி வழங்க இலக்கு, உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு, வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தும் வேளாண் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT