Published : 20 Feb 2024 03:24 PM
Last Updated : 20 Feb 2024 03:24 PM

1,680 ஏக்கரில் மூலிகைப் பயிர் சாகுபடிக்கு ரூ.5 கோடி - தமிழக வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கீடு

ஊட்டி ரோஜா பூங்கா.

சென்னை: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) தாக்கல் செய்தார். அதில், “ஊட்டி ரோஜா பூங்காவில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம் செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார். முக்கிய அம்சங்கள்:

ஊட்டி ரோஜா பூங்காவில் புதிய ரோஜா ரகங்களை அறிமுகம் செய்தல்: உதகையில் அரசு ரோஜா பூங்காவில் பெரிய, சிறிய வகை ரோஜாக்கள், கொடி ரோஜா போன்ற 4,201 வகைகளை உள்ளடக்கிய 32,000 ரோஜாச் செடிகள் உள்ளன. இந்த உலகப் புகழ்பெற்ற அரசு ரோஜா பூங்காவில் ஆண்டுக்கு சராசரியாக 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து அனைத்து வகையான இப்பூங்காவின் ரோஜாக்களையும் கண்டு மகிழ்கின்றனர். ரோஜா தொகுப்பினைச் செறிவூட்டும் வகையில், முதற்கட்டமாக, 100 புதிய ரக ரோஜா வகைகள் நடவு செய்யப்பட்டு சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வண்ணம் இப்பூங்கா மேம்படுத்தப்படுத்தப்படும்.

மூலிகைப் பயிர் சாகுபடியை ஊக்குவித்தல்: பாரம்பரிய மருத்துவத்தின் மகத்துவத்தை மக்கள் உணர்ந்துள்ளதால், மூலிகைப் பயிர்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ள சூழ்நிலையில், மூலிகைப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கவும், மூலிகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவவும், கண்வலிக் கிழங்கு (செங்காந்தள்), சென்னா, நித்தியகல்யாணி, மருந்துக்கூர்க்கன் (Coleus) போன்ற மூலிகைப் பயிர்களை 1,680 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டம்: தமிழகத்தில், முந்திரி இரண்டு லட்சத்து ஏழாயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டிற்கு சுமார் 43,500 மெட்ரிக் டன் முந்திரிப் பருப்பு உற்பத்தியாகிறது. மேலும், 4 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு முந்திரி பதப்படுத்தும் வசதிகள் இருந்தும், அதற்கான மூலப்பொருளான முந்திரி 10 சதவீதம் மட்டுமே இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, முந்திரி சாகுபடிப் பரப்பை அதிகரித்து உற்பத்தியை உயர்த்திட 2 கோடியே 36 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும், தரமான முந்திரியை விளைவிக்க இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 2,470 ஏக்கர் பரப்பளவில் செயல்விளக்கம் அமைத்திட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மிளகாய் பயிர் ஊக்குவிப்புத் திட்டம்: கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, 2,470 ஏக்கர் பரப்பில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு மிளகாய் பயிரிடப்பட்டது. 2024 2025 ஆம் ஆண்டிலும், மிளகாய் மண்டலம் ஏற்படுத்தப்பட்ட பகுதிகளான இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க. 1230 ஏக்கர் பரப்பில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு மிளகாய் சாகுபடி செய்யப்படும். மேலும், நெல், இதர தானியங்களின் அறுவடைக்குப்பின்பு 3,700 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் பயிரிட ஊக்குவிக்கப்படும். இராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களில் 200 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு நீர் ஆதாரங்கள் ஏற்படுத்தப்படும். இதற்கென, 3 கோடியே 67 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

பாரம்பரிய ரகங்களுக்கு முக்கியத்துவம்: சிறப்புடைய பாரம்பரிய காய்கறி ரகங்களை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மீட்டெடுத்து விவசாயிகளிடையே அந்த ரகங்களை ஊக்குவிக்கும் வகையிலும், 2470 ஏக்கர் பரப்பு விரிவாக்கம் செய்யவும், 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x