Published : 20 Feb 2024 02:23 PM
Last Updated : 20 Feb 2024 02:23 PM

“திறமையாக கையாண்டது வரவேற்கத்தக்கது” - செல்வப்பெருந்தகை கருத்து @ வேளாண் பட்ஜெட்

சென்னை: “மத்திய அரசு புறக்கணித்தாலும், நிதி நிலைமை மிக மோசமாக இருந்த போதிலும் திறமையாக கையாண்டு இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. மீண்டும் விவசாயிகளின் கோரிக்கையை காங்கிரஸ் வலியுறுத்தும்” என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, “மத்திய அரசு புறக்கணித்தாலும், நிதி நிலைமை மிக மோசமாக இருந்த போதிலும், திறமையாகக் கையாண்டு இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது.

மீண்டும் விவசாயிகளின் கோரிக்கையை காங்கிரஸ் வலியுறுத்தும். தேர்தலுக்குப் பிறகு முழுமையான பட்ஜெட்டின் மீது வாதம் நடைபெறும். இந்த விவாதத்தின்போது காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைக்க இருக்கிறோம். அந்தக் கோரிக்கையின் அடிப்படையில், பதில் உரையில் வேளாண்மை துறை அமைச்சர், இவை அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாக கூறியிருக்கிறார்.

மத்திய அரசை கண்டித்து இந்தியா முழுவதும் வேளாண் குடிமக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே வேளாண் குடிமக்களை வஞ்சிக்கிறது. மூன்று புதிய வேளாண் சட்டத்தை கொண்டு வந்து, வாதம் நடத்தாமல் எதிர்க்கட்சிகளைக் கூட கேட்காமல் இரவோடு இரவாக நிறைவேற்றினார்கள்.

விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு, ஒரு வருடம் போராடினார்கள். சுதந்திரப் போராட்டத்தில் எப்படி உயிர்களை பலி கொடுத்தார்களோ, அப்படி இந்த போராட்டத்திலும் பலி கொடுத்தார்கள். ஆனால் மோடி அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை. அமைச்சரின் மகனே காரையேற்றி கொலை செய்யும் அளவுக்கு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் சேதாரம் விவசாயிகளுக்கு தான். மத்திய அரசு மாநில அரசுகளை வஞ்சிக்கிறது. மத்திய அரசு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றால் தாராளமாக நிதி வழங்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x