Last Updated : 14 Feb, 2018 09:59 AM

 

Published : 14 Feb 2018 09:59 AM
Last Updated : 14 Feb 2018 09:59 AM

புதுச்சேரி தலைமைச்செயலகம் எதிரே பலகோடி ரூபாய் செலவில் உருவான மணல்பரப்பு முற்றிலும் மறைந்தது

பல கோடி ரூபாய் செலவில் புதுச்சேரி தலைமைச்செயலகம் எதிரே உருவான மணல் பரப்பு முற்றிலும் மறைந்துவிட்டது.

புதுச்சேரியில் தலைமை செயலகம் எதிரே கடற்கரையில் மணல் பரப்பு உருவாக்கும் பணி கடந்த ஆண்டு மார்ச்சில் ரூ.20 கோடியில் தொடங்கப்பட்டது. கடலில் 200 மீட்டர் நீளத்துக்கு கற்கள் கொட்டப்பட்டன. அதையடுத்து மணல் பரப்பு உருவானது. பலரும் மணல் பரப்பில் இறங்கி கடல்நீரில் கால் நனைக்க தொடங்கினர்.

அதன்பின்னர் கடல் சீற்றம் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி இப்பகுதியில், சுற்றுலா பயணிகள் 10 நாட்களுக்கு இறங்க அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. தலைமை செயலர் உத்தரவுப்படி ஒப்பந்ததாரர்கள் தடுப்புகள் வைத்தனர்.

இதுதொடர்பாக அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டன. தடுப்புகளை தாண்டி குழந்தைகளுடன் பொதுமக்கள் இப்பகுதியில் குளித்தப்படி இருந்தனர்.

இந்நிலையில் தலைமைச்செயலகம் எதிரே தூண்டில் வளைவு அமைத்து செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணியும் தீவிரமாக நடந்து வந்தது. செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடற்கரை மணல்பரப்பு மாயமாகத் தொடங்கியது.

தென்மேற்கு பகுதியில் திட்டமிட்டப்படி பணிகள் நடக்கவில்லை. பல கோடி செலவில் உருவான கடற்கரை பகுதி தற்போது முற்றிலும் இல்லை. பழைய நிலை போல் மாறிவிட்டது.

கடல்சார் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு

இதற்கிடையே தேசியகடல் தொழில்நுட்ப இயக்குநர் ரமணமூர்த்தி மற்றும் குழுவினர் இப்பணிகளை பார்வையிட்டுள்ளனர். “கடல் அலையின் சீற்றத்தை தடுத்து மணல் குவியும் பணிகள் நடக்கின்றன. ஏப்ரலுக்குள் இப்பணிகள் நிறைவடையும். கடலில் மீண்டும் மணல்பகுதி உருவாகும்” என இக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து இப்பகுதியில் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளில் ஈடுபட்டு வரும் குழுவினர் தரப்பில் கூறியதாவது:

கடற்கரையில் மணல் பரப்பு உருவாகும் வகையில் முக்கோண அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. பெரிய இரும்பு தகடுகள் முக்கோணம் போல் வடிவமைக்கப்படுகிறது. கடலில் பள்ளம் தோண்டி அதன் மீது கற்கள் கொட்டி இரும்பினால் உருவான முக்கோண அமைப்பு வைக்கப்படும். இது கடலின் மட்டத்துக்கு இணையாக இருக்கும். இந்த முக்கோண அமைப்பு கடலின் சீற்றத்தைத் தடுக்கும். அலையின் வலு குறையும். மணல் கரையில் குவியும். மீண்டும் கரை உருவாகும் என்று குறிப்பிடுகின்றனர்.

இருப்பினும், கடற்கரை இரண்டாவது பகுதியிலுள்ள தென்மேற்குப் பகுதியில் திட்ட வடிவமைப்புப்படி நிர்மாணிக்கப்பட்டால் மட்டுமே கடற்கரையை மீட்டமைக்க முடியும். இப்பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு வட்டாரங்களில் இப்பணி தொடர்பாக அதிகாரிகள் ஏதும் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. அரசு இவ்விஷயத்தில் உண்மை நிலையை விளக்க வேண்டும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x