Published : 20 Feb 2024 12:00 PM
Last Updated : 20 Feb 2024 12:00 PM
சென்னை: சென்னை: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) தாக்கல் செய்தார். அதில், “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" என்ற புதிய திட்டம், 2024- 2025ஆம் ஆண்டில், 22 இனங்களுடன் 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்”எனத் தெரிவித்துள்ளார். முக்கிய அம்சங்கள்:
மண் வளத்தைக் காக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 2024- 2025 ஆம் ஆண்டில் 22 இனங்களுடன் 206 கோடி ரூபாய் நிதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் சில முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு;
பசுந்தாள் உரம்: மண்ணில் கரிம கார்பன் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் சரிவிகிதத்தில் இருந்தால் மட்டுமே நுண்ணுயிர்கள் பல்கிப்பெருகி, பயிர்களுக்கு ஊட்டச்சத்துகள் எளிதாகக் கிடைக்கப்பெற்று மகசூல் அதிகரிக்கும். எனவே, பசுந்தாள் உர உபயோகத்தினை விவசாயிகளிடையே ஊக்குவித்து மண்வளம் காக்கும் வகையில், ஆயக்கட்டு, இறவைப் பாசனப் பகுதிகளில், முதற்கட்டமாக 2024- 2025-ஆம் ஆண்டில் 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், தமிழ்நாட்டிலுள்ள 2 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
மண்புழு உரம்: மண்புழு உரம் வளமான ஊட்டச் சத்துகளை வழங்குவதோடு மட்டுமின்றி, மண்ணின் தன்மையையும் மேம்படுத்துகிறது. எனவே, மண்புழு உரம் தயாரித்து மண்வளத்தை மேம்படுத்திட ஒரு விவசாயிக்கு இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வீதம் 10,000 விவசாயிகளுக்கு வழங்கிட 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள் அமைத்து, தொடர்ந்து மண்புழு உரம் தயாரிக்க ஏதுவாக, 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
களர் அமில நிலம்: களர் நிலத்தில், மண் இறுகியும் காற்றோட்டம் இல்லாமலும், அமில நிலத்தில் நுண்ணுயிர்ச் செயல்பாடுகள் குறைந்தும், பயிர் வளர்ச்சியும், மகசூலும் குறைந்தும் காணப்படுகிறது. இதனைச் சீர்செய்யும் பொருட்டு, 37,500 ஏக்கர் களர் நிலங்களைச் சீர்ப்படுத்த 7 கோடியே 50 இலட்சம் ரூபாயும், 37,500 ஏக்கர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்த 15 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT