Published : 20 Feb 2024 10:30 AM
Last Updated : 20 Feb 2024 10:30 AM
மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் மாநிலத் தலைவரான தற்போதைய எம்.பி. வைத்திலிங்கமே மீண்டும் களம் காண இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தனித்து களம் காண்கிறது. ஆளும் தரப்பு கூட்டணித் தலைவரான முதல்வர் ரங்கசாமி பாஜகவுக்கு பச்சைக் கொடி காட்டிய நிலையில், பாஜக தரப்பில் வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் தொடர்கிறது. தற்போதைய மாநில அரசில் முக்கிய பதவிகளில் உள்ளயாரும் போட்டியிட விரும்பவில்லை.
இதற்கிடையே தொகுதி பாஜக பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டிருக்கிறார். “நீங்கள் எல்லாம் ஆச்சரியப்படும் வேட்பாளர் ஒருவர் புதுச்சேரி தொகுதிக்கு அறிவிக்கப்படுவார்” என்று நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி பாஜக உயர்மட்டத் தலைவர்கள் சிலர் கூறியதாவது: பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறலாம் எனகட்சித் தலைமையிடம் வலியுறுத்தினோம். ஆனால் நமச்சிவாயமோ புதுவை அரசியலில் தொடரவே விரும்புகிறார். தான் போட்டியிட விரும்பவில்லை என்றும் கட்சி நிறுத்துபவரை வெற்றி பெற வைப்பது எனது பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில் புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன. இவர்களைத் தவிர்த்து பாஜக நியமன எம்எல்ஏவில் ஒருவர், பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏவில் ஒருவர் ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இவர்களில், முதல்வர் ரங்கசாமி ஏற்கும் வேட்பாளரை பாஜக அறிவிக்கும் என்றனர்.
ஆளுநர் தமிழிசையிடம் இதுபற்றி கேட்டால், ‘சஸ்பென்ஸ்’ என்று அர்த்தப் புன்னகையோடு பதில் தருகிறார். தமிழகத்தில் இல்லாவிட்டாலும், புதுச்சேரியில் களம் கண்டுவெற்றி பெற்று ஒரு ‘தமிழ்’ அடையாளத்தோடு நிர்மலா சீதாராமன் இந்த முறை கேபினட் வந்தால், அது ஒரு கூடுதல் தகுதியாக இருக்கும் என்று பாஜக தலைமை எண்ணுவதாகவும் பேச்சு எழுகிறது. வேட்பாளர் யார் என விரைவில் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT