Published : 20 Feb 2024 08:22 AM
Last Updated : 20 Feb 2024 08:22 AM

தமிழக பட்ஜெட் 2024-25: 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் முதல் கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ வரை!

சென்னையில் ஜனவரியில் உலக புத்தொழில் மாநாடு: முதல் தலைமுறை தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், வரும் நிதியாண்டில் ரூ.101 கோடி அளவுக்கு மானிய உதவி அளிக்க நிதி ஒதுக்கப்படும். உலகின் பல்வேறு பகுதிகளில் முத்திரை பதித்த முன்னணி புத்தொழில் நிறுவனங்களும், இளம் தொழில்முனைவோரும் கலந்துகொள்ளும் வகையில் ‘உலக புத்தொழில் மாநாடு’, 2025 ஜனவரியில் சென்னையில் நடத்தப்படும்.

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் ஒட்டன்சத்திரம், மானாமதுரை, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோருக்கென 3 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.

குறுந்தொழில் முனைவோர் தொழில் தொடங்க, கோவை மாவட்டம் குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி ஆயத்தத் தொழில் வளாகமும், மதுரையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் தொழில் புத்தாக்க மையமும் அமைக்கப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்காக மதுரை சக்கிமங்கலம் தொழிற்பேட்டையில் ரூ.118 கோடியில் அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்படும்.

குறுங்குழும மேம்பாட்டு திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டம் வெள்ளயாபுரம், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம், கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம், சேலம் மாவட்டம் ராக்கிப்பட்டி, நாமக்கல் மாவட்டம் கத்தேரி, புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியத்தில், ஆயத்த ஆடை உற்பத்தி, சித்த மருத்துவ மூலிகைப் பொருட்கள் தயாரிப்பு, பட்டுநூல் உற்பத்திக்கு 6 குறுங்குழும திட்டங்கள், தமிழக அரசு மானியத்துடன் ரூ.25 கோடி மொத்த மதிப்பீட்டில் பொது வசதி மையங்களுடன் அமைக்கப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு பட்ஜெட்டில் மொத்தம் ரூ.1,557 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரம், மணிமேகலை மொழிபெயர்ப்புக்கு ரூ.2 கோடி: தமிழின் இரட்டைக் காப்பிங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை 25 இந்திய மற்றும் உலக மொழிகளுக்குச் சென்றடையும் வகையில், அவற்றை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட தமிழின் மிகச்சிறந்த நூல்களை உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களிலும், புகழ்பெற்ற நூலகங்களிலும் இடம்பெறச் செய்ய இந்தாண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும். தேமதுர தமிழோசை உலகெங்கும் பரவிடச் செய்யும் முயற்சிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

துரிதமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பப் பரப்பில், தமிழ்மொழி செழித்து வளரத் தேவையான இயந்திரவழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இயற்கைமொழிச் செயலாக்கம், பெருந்திரள் மொழி மாதிரிகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கிடும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க இந்த ஆண்டு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும்.

தமிழகமெங்கும் உள்ள அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மின்பதிப்பாக மாற்றும் முயற்சிக்கு இந்த ஆண்டு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கு ரூ.52,254 கோடி ஒதுக்கீடு

தமிழக பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கு ரூ.52,254 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு ‘தமிழ்ப்புதல்வன்’ என்ற திட்டத்தில் மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கென ரூ.7,500 கோடியில் ‘பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த இந்த அரசால் அறிவிக்கப்பட்டு, ரூ.2,497 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிதியாண்டிலும் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த 3 ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் ரூ.352 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன. 28, தகைசால் பள்ளிகளாக ரூ.100 கோடியில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் ரூ.525 கோடியில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் ரூ.435 கோடியில் 22,931 தொடங்கப்பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன. மேலும் வரும் நிதியாண்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.300 கோடியில் உருவாக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புவரை பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், பொதுஅறிவு நூல்கள் வாங்க மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இதற்காக வரும் நிதியாண்டில் ரூ.360 கோடி ஒதுக்கப்படுகிறது.

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்திட ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ரூ.213 கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் அரசு பொறியியல், கலை அறிவியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் கட்டிட கட்டமைப்பு பணிகள் ரூ.200 கோடி செலவில் செயல்படுத்தப்படும். பொறியியல், கலை அறிவியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் உட்பட 236 அரசு கல்வி நிறுவனங்களுக்கு கணினி மற்றும் இதர அறிவியல் கருவிகள் ரூ.173 கோடியில் வழங்கப்படும். 45 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளை தொழில்துறை 4.0 தரத்துக்கு உயர்த்திட ரூ.3,014 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி, விடுதி, போக்குவரத்து உள்ளிட்ட மொத்த கல்விச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. தற்போது படித்து வரும் 28,749 மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பதற்காக வரும் நிதியாண்டில் ரூ.511 கோடி செலவிடப்படும்.

இளைய தலைமுறையினரின் அறிவு தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கோவையில் அமைக்கப்படும். இந்த பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.8,212 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் 100 பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ரூ.200 கோடியில் புதிய திறன் பயிற்சி கட்டமைப்புகள் உருவாக்கப்படும். அரசு பள்ளி மாணவர்கள் தங்களது பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க உதவித்தொகை அளித்து உதவும் வகையில், புதிய திட்டம் வரும் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்.

2024-25-ம் ஆண்டில் ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி அளவுக்கு பல்வேறு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கிடுவதை அரசு உறுதி செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தெரு நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ரூ.20 கோடி: தமிழகத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவே, விலங்குகள் இனப்பெருக்கத் தடை திட்டத்தை மேலும் முறையாக செயல்படுத்திடவும், தமிழகத்தின் பல இடங்களில் இயங்கி வரும் இனப்பெருக்கத் தடை மையங்களை மேம்படுத்திடவும் 2024-25-ம் ஆண்டின் வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.20 கோடி ஒதுக்கப்படும். மேலும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.11 கோடி ஒதுக்கப்படும்.

ஊரகப்பகுதி அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்: ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.3,123 கோடி

‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ கடந்த 2022-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளில் மதுரையில் தொடங்கப்பட்டு, பிறகு கடந்த 2023-ம் ஆண்டு தமிழகத்திலுள்ள அனைத்து 30,992 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 15 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டது.

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மேலும் சுமார் 2.50 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், வரும் கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, வரும் நிதியாண்டில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் பொருட்டு ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, அதன் விளைவாக ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதத்துக்குட்பட்ட குழந்தைகளில் 74 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்கு முன்னேறியுள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக கண்டறியப்படும் 6 மாதத்துக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கப்படும். வரும் நிதியாண்டில் சுமார் ரூ.70 கோடி செலவில் வாடகைக் கட்டிடங்களில் இயங்கிவரும் 500 குழந்தைகள் மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்காக வரும் நிதியாண்டில் ரூ.3,123 கோடி ஒதுக்கப்படும்.

அதிநவீன வசதிகளுடன் ரூ.1,100 கோடியில் கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா

சென்னையைப் போல, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சியிலும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும். மதுரையில் ரூ.350 கோடி மதிப்பீட்டிலும், திருச்சியில் ரூ.345 கோடி மதிப்பீட்டிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயன்பாட்டின் வாய்ப்புகள் மற்றும் வழிநடத்திடத் தேவையான வரையறைகளைத் தெளிவாக வகுத்திட ‘தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்’ ஏற்படுத்தப்படும். மேலும், கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் 20 லட்சம் சதுரஅடியில் 2 கட்டங்களாக ரூ.1,100 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

பருவக்கால மழைநீரை சேமிக்கவும், பாசனத்துக்கு உரிய நீரை உறுதி செய்யவும், வரும் நிதியாண்டில் தரைகீழ் தடுப்பணை, கால்வாய் சீரமைப்பு, புதிய அணைக்கட்டு போன்ற நீர் செறிவூட்டும் கட்டுமானங்களும், நீர்பாசன பராமரிப்புப் பணிகளும் ரூ.734 கோடியில் மேற்கொள்ளப்படும். மேலும், அணைகள் மற்றும் கதவணைகளில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

கல்லணை கால்வாயினை நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் முதற்கட்டமாக ரூ.1,037 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இந்நிலையில், 2-ம் கட்டமாக வரும் நிதியாண்டில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 23 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். அரசு சார் இணையவழிச் சேவைகளை மேலும் துரிதமாக்கும் வகையில், மாநில தரவு மையம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

சாலை கட்டமைப்பு தரத்தை மேம்படுத்த நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறைக்கு ரூ.20,043 கோடி

சாலை கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்தும் விதமாக, முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4,881 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர ரூ.2,824 கோடியில் 16 புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகளும், ரூ.2,006 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.8,365 கோடியும், சென்னை எல்லைச் சாலை திட்டத்துக்கு ரூ.2,267 கோடியும், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்துக்கு ரூ.908 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு ரூ.20,043 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சிவகாசி வெளிவட்ட சாலை, மன்னார்குடி வட்டச் சாலை, திண்டுக்கல் நகருக்கு புறவழிச் சாலை, திருச்சி ஸ்ரீரங்கம் இடையே உயர் மட்ட பாலம், அவினாசி முதல் மேட்டுப்பாளையம் வரை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி, விழுப்புரம் மாரங்கியூர் - ஏனாதிமங்கலம் சாலையில் கோரையாறு குறுக்கே பாலம் கட்டும் பணி ஆகியவை ரூ.665 கோடியில் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன் தொடர்ச்சியாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையில் உள்ள 14.6 கிமீ நீளமுள்ள பகுதியில் 4 வழி உயர்மட்ட வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

மேலும், தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த சாலை கட்டமைப்பு திட்டங்களை சிறந்த மேலாண்மை முறைகளை பின்பற்றி செயல்படுத்துவதற்காக ‘தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்’ அமைப்பதற்கான சட்டமசோதா நடப்பு கூட்டத் தொடரிலேயே விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்துக்கு ரூ.4,625 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம்: சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள் ரூ.63,246 கோடி செலவில் 119 கி.மீ தூரத்துக்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் வரையிலான உயர் வழித்தடம் அடுத்த ஆண்டு டிசம்பரில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4,625 கோடி மதிப்பீட்டில் பெறப்பட்டு, மத்திய அரசின் மூலதன பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்தூர் வரையிலும் 2-ம் கட்டத்தின் நீட்டிப்பு வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்.

பொதுத்துறை, வணிக மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மரபுசார் வடிவமைப்புடன் 27 தளங்களைக் கொண்ட முத்திரைப் பதிக்கும் கட்டிடம் ரூ.688 கோடியில் கட்டப்படும். பிராட்வே பேருந்து நிலையம் அருகில் ஒருங்கிணைந்த பன்முகப் போக்குவரத்து வசதிகள் கொண்ட பேருந்து நிலையம், நவீன வசதிகள் கொண்ட அலுவலக வளாகம் ரூ.823 கோடி செலவில் உருவாக்கப்படும்.

10,000 புதிய சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்படும்: சுயஉதவி குழு இயக்கத்தில் சேராத பெண்கள் மற்றும் விளிம்புநிலை வாழ் குடும்ப உறுப்பினர்களை கொண்டு, வரும் நிதி ஆண்டில் 10,000 புதிய சுய உதவிகுழுக்கள் உருவாக்கப்படும். ரூ.35,000 கோடி அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் 345 பெண்கள் பயன்பெறும் வகையில் ரூ.26 கோடியில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்படும்.

உயர்கல்வியை தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்வி கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும். திருநங்கைகள் நல வாரியம் மூலம் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்துக்காக இந்த ஆண்டு ரூ.2 கோடி கூடுதலாக அரசால் வழங்கப்படும்.

அரசு கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள் ஆகிவற்றை திறம்பட செயல்படுத்தவும், அதன் நிர்வாகத்தை மேம்படுத்தவும், உரிய ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கே.சந்துரு குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் இத்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை சமூக பாதுகாப்பு துறை என்ற பெயரில் இயங்கி வந்த இத்துறை, இனி ‘குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை’ என பெயர் மாற்றம் செய்யப்படும். முதல்கட்டமாக கோவையில் குழந்தைகளுக்கான திறன் பயிற்சி கூடம், ஆலோசனை அறைகள், நூலகம், குடும்ப பார்வையாளர்கள் அறை, மருத்துவ பரிசோதனை அறை, பூங்கா, விளையாட்டு மைதானம் ஆகிய வசதிகளுடன் ‘பூஞ்சோலை’ என்ற பெயரில் மாதிரி இல்லம் அமைக்கப்படும். இதற்காக, சமூகநலம், மகளிர் உரிமை துறைக்கு ரூ.7,830 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறைக்கு ரூ.27,922 கோடி: தமிழக பட்ஜெட்டில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.27,922 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: அடுத்து வரும் 2 ஆண்டுகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது.

முதல்வரின் தாயுமானவர் திட்டம்: ‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ என்ற பெயரில் புதிய திட்டத்தில் சமூகத்தில் விளிம்பு நிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும். இந்த வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.27,922 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,328 கோடி மதிப்பில் பணிகள் முடிவுற்று, ரூ.1,659 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தை செயல்படுத்த வரும் நிதியாண்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

அம்ருத் 2.0 திட்டத்தில், ரூ.4,942 கோடி மத்திய அரசு பங்களிப்புடனும், ரூ.9,047 கோடி மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடனும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2024-25-ம் ஆண்டில், பல்வேறு திட்ட நிதிகளைத் திரட்டி நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் 4,457 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம், திருநீர்மலையில் ரூ26 கோடியில் ரோப்கார் வசதி: செங்கல்பட்டு திருநீர்மலை, மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள கோயில்களுக்கு கம்பிவட ஊர்தி வசதி ரூ.26 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சுற்றுலாத் துறை சார்பில் குமரி, மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒருங்கிணைந்த சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டங்கள் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில் 8,00,000 கான்கிரீட் வீடுகள்: சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கிராமப்பகுதிகளில் சுமார் 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. "குடிசையில்லா தமிழகம்" என்ற இலக்கைஎய்திடும் வகையில், வரும் 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். முதல்கட்டமாக, 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் ரூ.3.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். தங்கள் கனவு இல்லங்களை பயனாளிகள் தாங்களே உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு என குறிப்பிடத்தக்க அம்சங்களைத் தாங்கிய இப்புதிய திட்டம் ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்றபெயரில் வரும் நிதியாண்டில்ரூ.3,500 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2024- 25ம் ஆண்டில் 2,000 கி.மீ. சாலை மேம்பாட்டுப் பணிகள் ரூ.1,000 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-ன் கீழ், 2024-25ம் ஆண்டில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.1,147 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஊரகப்பகுதிகளில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குப் பதிலாக ரூ.365 கோடி மதிப்பீட்டில் 2,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இந்த ஆண்டு அமைக்கப்படும். மாநகராட்சிப் பகுதிகளை அடுத்துள்ள விரிவாக்கப் பகுதிகளில் வரும் ஆண்டில் ரூ.300 கோடி மதிப்பில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் வரத்துக் கால்வாய்களை சீரமைத்து மேம்படுத்தும் வகையில், இந்த ஆண்டில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் மக்கள் பங்களிப்போடு 5,000 நீர்நிலைகளைப் புனரமைக்கும் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும்.

2024-25-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துக்காக ரூ.3,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3500 புதிய பேருந்துகள்: பேருந்து தேவையை கருத்தில்கொண்டு இந்த நிதியாண்டில் தமிழகத்தில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதுமட்டுமின்றி ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்து இந்நிதியாண்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும், இந்த வரவு செலவுத் திட்டத்தில் மகளிருக்கான இலவச பேருந்துக் கட்டண மானியத்துக்காக ரூ.3,050 கோடி, மாணவர்களுக்கான பேருந்து கட்டண மானியத்துக்காக ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் அவிநாசி சாலை - சத்தியமங்கலம் சாலை வழித்தடத்தில் ரூ.10,740 கோடி, மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை வழித்தடத்தில் ரூ.11,368 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள், மூலதன பங்களிப்பு பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்ததும் பணிகள் தொடங்கப்படும்.

ரூ.60 ஆயிரம் கோடி முதலீட்டில் நீரேற்று புனல் மின் நிலையங்கள்: 2030-க்குள் 100 பில்லியன் யூனிட் கூடுதல் புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றலை தமிழ்நாட்டில் உருவாக்க, முதற்கட்டமாக புதிய பசுமை ஆற்றல் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 11,500 மெகாவாட் திறனுள்ள நீரேற்று புனல் மின் நிலையங்கள் அமைப்பதற்கு உகந்த 12 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. அவ்வகையில், பொதுத்துறை, தனியார் பங்கேற்புடன், சுமார் ரூ.60 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்த புதிய நீரேற்றுபுனல் மின் நிலையங்கள் உருவாக்கப்படும்.

பல்லுயிர் நலன் காக்கும் முயற்சியாக, அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதி ஒன்றை ரூ.50 கோடி செலவில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென முதற்கட்டமாக ரூ.5 கோடியை அரசு வழங்கும். இதன்மூலம், அழிந்துவரும் மற்றும் விளிம்பு நிலையிலுள்ள உயிரினங்களைப் பாதுகாக்க உரிய திட்டங்கள் வகுக்கப்படும். மேலும், நாகப்பட்டினம், சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையங்கள், தஞ்சை மாவட்டம் மனோரா பகுதியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.

எண்ணூர் கடற்கழிமுகப் பகுதியை ரூ.40 கோடியில் பாதுகாத்து மீட்டெடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை மெரினா, ராமநாதபுரம் அரியமான், தூத்துக்குடி காயல்பட்டினம், திருநெல்வேலி கோடாவிளை, நாகை காமேஸ்வரம், புதுகை கட்டுமாவடி, கடலூர் சில்வர் கடற்கரை, விழுப்புரத்தில் மரக்காணம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் ரூ.250 கோடியில் மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, நீலக் கொடி கடற்கரைகள் சான்றுகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

3 லட்சம் சதுர அடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்: கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த உள்ளது. ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில், ரூ.20 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னையில் ரூ.227 கோடியில், 4 லட்சம் சதுரஅடி பரப்பில், கைத்தறி, கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் கண்காட்சி அரங்கம், கைவினைப் பொருட்களுக்கான புத்தாக்க மையம், திறந்தவெளி விற்பனை அரங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய ஒன்றிணைந்த வளாகம் நிறுவப்படும்.

சென்னையை உலகத்தரம் வாய்ந்த மாநகரமாக மாற்றியமைக்கும் வகையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் 3 லட்சம் சதுரஅடி பரப்பில், 10 ஆயிரம் பேர் பார்வையிடும் வகையிலான சர்வதேச கண்காட்சி அரங்கம், 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட பன்னாட்டுக் கூடம் கொண்ட உலகத்தரம் வாய்ந்த ‘கலைஞர் பன்னாட்டு அரங்கம்’ நவீன வசதிகளுடன் அமைக்கப்படும்.

டெல்லியில் ரூ.257 கோடியில், 3 லட்சம் சதுரஅடி பரப்பில் புதிதாக தமிழ்நாடு இல்லம் கட்டப்பட உள்ளது. அதேபோல, கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்க வளாகத்தில், தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கலைகளை அரங்கேற்றம் செய்யும் வகையில் ரூ.20 கோடியில் பசுமைப் பரப்புகளுக்கான வளாகமும் நடப்பாண்டில் உருவாக்கப்படும்.

ரூ.373 கோடியில் நவீனமயமாகும் தீயணைப்பு துறை: தமிழகத்தில் உள்ள 1,551 காவல் நிலையங்களிலும், 372 சிறப்பு பிரிவுகளிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் திட்டத்தை (சிசிடிஎன்எஸ்) மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டமானது ரூ.124 கோடியில் மேம்படுத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து இணையவழியில் புகார்களை பதிவு செய்வது உள்ளிட்ட அம்சங்களுடன் சிசிடிஎன்எஸ் 2.0 என்ற ஒரு புதிய திட்டமாக அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

அதேபோல ரூ.373 கோடியில் தீயணைப்பு துறை வலுப்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட உள்ளது. அதற்கேற்ப நவீன தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு கருவிகளை வாங்குவதற்காக ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.104 கோடியில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் உயர்ரக பாதுகாப்புடன் கூடிய புதிய நவீன சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது. தடய அறிவியல் துறைக்கும் புதிய கருவிகளை வாங்குவதற்காக ரூ.26 கோடி வழங்கப்படும்.

அதேபோல சென்னை தலைமையகத்தில் சரக்கு மற்றும் சேவை வரிக்கான வருவாயைப் பெருக்கவும், வரி ஏய்ப்பை தடுக்கும் விதத்திலும் தகுந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ரூ.4 கோடியில் தரவுகள் பகுப்பாய்வு மையமும் அமைக்கப்பட இருக்கிறது.

காலநிலை மாறுபாடுகளை கணக்கிட்டு நிகழ் நேர மழைப்பொழிவு மற்றும் வானிலை அளவீடுகளை பெறுவதற்காக 1,400 புதிய தானியங்கி மழைமானிகளையும், 100 புதிய தானியங்கி வானிலை நிலையங்களையும் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.32 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் விரைவான கணினி சேவைகளை பெறுவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரிடர் அபாயக் குறைப்புக்கான கள நிலவரங்களுக்கு உகந்த செயல்பாட்டு உத்திகளை வகுக்க ஏதுவாக ‘தொழில்நுட்ப மையம்’ புதிதாக அமைக்கப்பட உள்ளது. வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்தும் விதமாக ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய இடங்களில் ரூ.52 கோடியில் 2 நவீன டாப்ளர் ரேடார்களை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு ரூ.13,720 கோடி: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம், 1.15 கோடி குடும்பத்தலைவிகளுக்கு ஒவ்வோர் மாதமும் ரூ.1,000 அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த தொகை அவர்களுக்கு பேருதவியாக இருப்பது மட்டுமின்றி, அவர்கள் மாதந்தோறும் கணிசமாக சேமிக்கவும் வழிவகுக்கிறது. மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்துக்காக, இந்த ஆண்டு ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x