Published : 20 Feb 2024 07:19 AM
Last Updated : 20 Feb 2024 07:19 AM

தமிழக பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது: நிதித் துறை செயலர் உதயச்சந்திரன் தகவல்

சென்னை: நெருக்கடியான சூழல்கள் இருந்தாலும், தமிழகப் பொருளாதாரம் ஆரோக்கியமாகவே உள்ளது என்று நிதித் துறை செயலர் த.உதயச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழக அரசின் பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில், பட்ஜெட் முக்கிய அம்சங்கள் குறித்து நிதித் துறை செயலர் த.உதயச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பணவீக்கத்தைப் பொறுத்த வரை தேசிய சராசரியைவிட தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. பொருளாதார வளர்ச்சி போன்று பணவீக்கமும் முக்கியம். பணவீக் கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. மூலதனச் செலவுகளைப் பொறுத்தவரை, 2024-25-ம் ஆண்டில் ரூ.47 ஆயிரம் கோடி அளவில் கட்டமைப்புகளுக்காக செலவிட உள்ளோம். குறிப்பாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இதில் அதிகம் செலவிட திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை, 3.5 சதவீதத்துக்குள் உள்ளது. மிக நெருக்கடியான காலத்தில், வரி வருவாய் சிக்கல்களுக்கு உள்ளானது. இதற்கு காரணம், தமிழகம் சந்தித்த 2 தொடர் இயற்கைப் பேரிடர்கள். இதனால் வருவாய் குறைவு மற்றும் வெள்ள நிவாரணத்துக்கும் செலவழிக்க வேண்டியிருந்தது. இந்த நெருக்கடிக்கிடையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், தமிழகப் பொருளாதாரம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. முக்கியமாக, சொந்த வரி வருவாயில், வணிவரித் துறையில் இருந்து 15 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கிறோம். பத்திரப் பதிவுத் துறையில் கடந்தாண்டு எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. ஆனால், அடுத்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கிறோம். அதேபோல் மற்ற வரி வருவாய்களும் அதிகம் வரும் என தெரிகிறது.

வணிகவரித் துறையில் நிறைய சீர்திருத்தம் செய்துள்ளோம். வரி ஏய்ப்பை தடுக்கவும், நிகழ்நேர தகவல் பரிமாற்றத்தின் மூலம் வரி வசூலைக் கண்காணிக்கவும், ஐதராபாத் ஐஐடியுடன் ஒப்பந்தம் செய்து தரவு பகுப்பாய்வு குழுவை அமைத்துள்ளோம். இதை கடந்தாண்டு கடைசி காலாண்டில் கொண்டுவந்தோம்.

அதேபோல், பத்திரப்பதிவுத் துறையிலும் நிறைய மாற்றங்கள் செய்துள்ளோம். இந்த முயற்சிகள் அடுத்த நிதியாண்டில் பலன் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன்மூலம் வரி வருவாய் திரட்டப்பட்டு, குறிப்பிட்ட இலக்கை அடைய முடியும். மத்திய அரசின் நிதிப்பகிர்வு 6.6 சதவீதத்தில் இருந்து 4.08 சதவீதமாக குறைந்துள்ளது. இதுதவிர செஸ் மற்றும் மேல்வரி ஆகியவற்றாலும் மாநிலத்துக்கு நிதி குறைவாகவே கிடைக்கிறது. இதுகுறித்தும் மத்திய அரசிடம் நாம் வலியுறுத்தி வருகிறோம்.

இதுதவிர, மத்திய அரசிடம் இருந்து வரும் மானிய உதவிகள் குறைந்துகொண்டே வருகிறது. மாநிலத்தின் வரி வருவாய் ரூ.1.95 லட்சம் கோடி, வரியில்லா வருவாய் ரூ.30,728 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கனிம வளம் தொடர்பாக புதிய சீர்திருத்தம் மற்றும் வரியில்லா வருவாய் தொடர்பான திட்டங்களில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். சேமிப்பு நிதியில் இருந்தும் கொண்டு வந்ததன் மூலம் இந்த நிலை எட்டப்படும்.

மத்திய வரி பகிர்வை பொறுத்தவரை, ஜிஎஸ்டி வருவாய் நாடு முழுவதும் அதிகரித்துள்ளதால், நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில் தமிழகத்துக்கான பகிர்வு அதிகரிக்கும் என்பதால் திருத்திய மதிப்பீடுகளில் அதிகமாக கொடுத்துள்ளோம்.

மேலும், மோட்டார் வாகன வரி உயர்விலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களைவிட, நான்கு சக்கர வாகனங்கள், சொகுசு வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வரி வருவாய் திரட்டுவதற்கான நம்பிக்கை உள்ளது.

‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் அடுத்த நிதியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். தொழில்நுட்ப சிக்கல், செமி கண்டக்டர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களுக்கான மடிக்கணினி இதுவரை வழங்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x