Published : 20 Feb 2024 06:51 AM
Last Updated : 20 Feb 2024 06:51 AM
சென்னை: தமிழக நிதியமைச்சரின் பட்ஜெட், அரசின் கனவு என்றும், அந்த கனவை நனவாக்க அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பாடுபடுவதுடன், திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின அறிவுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தடை களைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி தமிழகம் சீர்மிகு பயணத்தை நடத்தி வருகிறது. பொதுவாக பட்ஜெட் என்பது நிதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும். சமூகநீதியை மையமாகக் கொண்டு தயாரான இந்த அறிக்கை, அனைத்து மக்களுக்குமான சமநீதியையும் - சமநிதியையும் வழங்கி தமிழகத்தின் சீரான வளர்ச்சிக்கான பாதைக்கு அதிவேகப் பயணத்தை உறுதி செய்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 சதவீத பங்கை தருவதாக தமிழகத்தின் பொருளாதாரம் வளமாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. மாநிலத்தின் பணவீக்கம் 5.97 சதவீதமாக குறைந்துள்ளது. ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தமிழகத்தை உயர்த்தி இருக்கிறோம். புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இப்படி அனைத்துத் துறையிலும் முன்னேறி வரும் மாநிலமாகத் தமிழகம் உள்ளது.
7 மாபெரும் கனவுகள்: அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதே 'திராவிட மாடல்' வளர்ச்சியின் இலக்குகளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்த வளர்ச்சியின் அடுத்தகட்ட உயர்வை அடையாளம் காட்டுவதாக தமிழக பட்ஜெட் அமைந்துள்ளது. இந்த பட்ஜெட் 7 மாபெரும் கனவுகளை மாபெரும் இலக்காகக் கொண்டுள்ளது. குடிமை முதல் விண்வெளி வரை அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கையாக இது அமைந்துள்ளது.
ஏழு பெரும் கனவுகளையும் முழுமையாக நிறைவேற்றும்போது தமிழகம் நாட்டில் சிறந்த மாநிலமாக திகழும் காலம் விரைவாக ஏற்படும்.
அனைத்தும் நனவாகும்: இவை நமது அரசின் கனவுகள் மட்டுமல்ல, நனவாகப் போகும் கனவுகள். நாளை முதல் அனைத்தும் நனவாகும். துறை சார்ந்த அமைச்சர்களும், துறையின் செயலர்களும் இந்த திட்டங்கள் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டனவோ அதை மனதில் வைத்து சிறப்பாகச் செயல்படுத்திக் காட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கான திட்டங்களை மிகமிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT