Published : 19 Feb 2024 09:17 PM
Last Updated : 19 Feb 2024 09:17 PM

“60,000 அல்ல... 10,600 பேருக்குதான் இதுவரை அரசு வேலை!” - அண்ணாமலை சாடல் @ தமிழக பட்ஜெட் 2024

சென்னை: “கல்விக் கடன் ரத்து, கோவிட் தொற்று காலத்தில் பாதிப்படைந்த தொழில்முனைவோர்களுக்கு இழப்பீடு, நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாணவ மாணவியருக்கு 4G, 5G டேப்லட், மீனவப் பெருமக்களுக்கு 2 லட்சம் வீடுகள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் என எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இன்று வெளியிட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் இந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுவரை கொடுத்துள்ள அரசு வேலைகள் எண்ணிக்கை 10,600 மட்டுமே. ஆனால், 60,000 பேருக்கு அரசு வேலை கொடுத்திருப்பதாகப் பொய் கூறுகிறார்கள்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: “இன்றைய ‘என் மண் என் மக்கள்’ பயணம், கார் உற்பத்தி தொழிற்சாலைகள், வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை அதிக அளவு நிறைந்திருக்கும் தொகுதியான செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில், மறைமலை அடிகளாரின் பெயர் கொண்ட மறைமலை நகரில், பொதுமக்கள் பேராதரவுடன் வெகு சிறப்பாக நடந்தேறியது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது மாணவி பிரசித்தி சிங், 8 வகையான சிறிய பழமரங்கள் கொண்ட வனத்தை உருவாக்கி, 9000 மரங்களுக்கு மேல் நட்டுள்ளார். இந்தச் சாதனையை இந்திய சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த இளம் சாதனையாளருக்கு, பிரதமர் மோடி கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பால புரஸ்கார் விருது வழங்கி கௌரவித்தார்.

தமிழகத்தில், பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படும் வண்ணத்தில், புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி, வண்ண பஞ்சு மிட்டாய்க்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாரத்தான் போட்டிகளில் ஓடுவது, அமைச்சர் உதயநிதி பின்னால் ஓடுவது, முதல்வர் ஸ்டாலின் உடன் நடைபயிற்சி செல்வது, உதயநிதி நடித்த படங்களுக்கு விமர்சனம் கூறுவது என இத்தனை வேலைகளுக்கு நடுவில் பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதை கண்டறிந்து அதை தடை செய்திருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும்.

ஆனால், தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் மூலமாக விற்பது சத்து மருந்தா? அரசு விற்பனை செய்யும் சாராயம் குடித்தால், கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்றவை வராது என சுகாதாரத் துறை சான்றிதழ் கொடுக்க முடியுமா? பிறகு ஏன் டாஸ்மாக்கில் சாராய விற்பனையை அரசே செய்து கொண்டிருக்கிறது?

பிரதமர் மோடி ஆட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொடுத்த 295 தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முழுவதுமாக நிறைவேற்றியிருக்கிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகள், நமது மத்திய அரசு, வளர்ச்சியை இன்னும் வேகப்படுத்தும் நோக்கிலான திட்டங்களை முன்வைத்து செயல்படும். ஆனால், திமுக தமிழகத்தில் கொடுத்த 511 தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளைக் கூட முறையாக நிறைவேற்றாமல், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் சொல்கிறார் தமிழக முதல்வர்.

சமையல் எரிவாயுவிற்கு ரூ.100 மானியம் என்று வாக்குறுதி கொடுத்து மூன்று ஆண்டுகள் கடந்தும், இன்னும் அதனை நிறைவேற்றவில்லை. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாட்களாக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியிருக்கிறது.

கல்விக் கடன் ரத்து, கோவிட் தொற்று காலத்தில் பாதிப்படைந்த தொழில்முனைவோர்களுக்கு இழப்பீடு, நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாணவ மாணவியருக்கு 4G, 5G டேப்லட், மீனவப் பெருமக்களுக்கு 2 லட்சம் வீடுகள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் என எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இன்று வெளியிட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் இந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை

மூன்றரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை என்று கூறிய திமுக, இன்றைய நிதி நிலை அறிக்கையில், 60,000 பேருக்கு அரசு வேலை கொடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். தமிழக அரசுப் பணிகள் தேர்வாணையம் நடத்தும், குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 3A, குரூப் 4, பொறியாளர்கள் தேர்வு என இதுவரை கொடுத்துள்ள அரசு வேலைகள் எண்ணிக்கை 10,600 மட்டுமே. ஆனால், 60,000 பேருக்கு அரசு வேலை கொடுத்திருப்பதாகப் பொய் கூறுகிறார்கள்.

சென்னைக்கு ஒரு புதிய பேருந்து நிலையம் கட்டுகிறோம் என்று கூறிவிட்டு, செங்கல்பட்டுக்கு அருகில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைக் கட்டியிருக்கிறார்கள். அங்கு அமைச்சர்கள் ஆய்வுக்கு வந்தபோது கூட, ஒரே ஒரு பேருந்துதான் நிற்கிறது. இதுதான் திமுகவின் செயல்பாடு. இந்த திமுக அரசு, மாநில வளர்ச்சி, மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துதல், ஊழல் தடுப்பு, கிராமப் புற வளர்ச்சி, விவசாயிகள் வளர்ச்சி, இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் வளர்ச்சி என அனைத்துக் குறியீடுகளிலும் தோல்வியைத் தழுவிய அரசாகவே உள்ளது.

பாஜக மக்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. அதை பொறுத்துக்கொள்ள முடியாமல், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு கொடுக்கும் 1,000 ரூபாய் திட்டத்தை நிறுத்தி விடும் என்று பொய் சொல்கிறார் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் அமைச்சர் அன்பில் மகேஷ். மாநில அரசின் திட்டத்தை மத்திய அரசு எப்படி நிறுத்த முடியும் என்பதைக் கூட யோசிக்காமல் பொய் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்.

உக்ரைன், கத்தார், ஆப்கானிஸ்தான், ஈரான் என வெளிநாடுகளில் ஏதேனும் பிரச்சினைகள் வரும்போது, அங்கிருக்கும் நமது நாட்டு மக்களை, பத்திரமாகக் காப்பாற்றி வந்துள்ளது நமது மத்திய அரசு. ஆனால், சென்னை விமான நிலையத்துக்குச் செல்வதை, உக்ரைனுக்குப் பேருந்து அனுப்பி அவர்களைக் காப்பாற்றியது போல, செலவுக் கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறது திமுக. 33 மாதங்களாக விளம்பர அரசியல் மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுமக்களின் பயணநேரத்தை குறைக்க தாம்பரம் செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் வழித்தடம் பாஜக ஆட்சியில் அமைக்கப்பட்டது. 598 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்தை 2022ஆம் ஆண்டு மே மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. 17 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

17,750 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 3,62,156 வீடுகளில் குழாய் மூலம் குடிநீர், 1,33,805 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,24,784 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 14,711 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 45,214 விவசாயிகளுக்கு பேருக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட முத்ரா கடன் 533 கோடி ரூபாய் என மத்திய அரசின் நலத்திட்டங்கள் மூலம் பல லட்சம் மக்கள் பலனடைந்துள்ளனர்.

தமிழகத்தின் சுகாதாரம், கல்வி, காவல் துறை என அத்தனை துறைகளையும் சரிப்படுத்த வேண்டும். குடும்ப அரசியலை அகற்றி, சாமானிய மக்களுக்கான, ஊழலற்ற, நேர்மையான நல்லாட்சியைக் கொண்டு வரவேண்டும். 70 ஆண்டு கால திராவிட அரசியலில், ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் மாற்றி மாற்றி மக்களை ஏமாற்றியது தான் மிச்சம். நேர்மையான நல்லாட்சி என்பதை தமிழகம் காண திராவிடக் கட்சிகள் வாய்ப்பளிக்கவில்லை.

மோடியின் பத்தாண்டு கால ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சிக்கு, தமிழகமும் துணையிருக்க வேண்டும். வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பிரதமர் கரங்களை வலுப்படுத்த வேண்டும” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x