Published : 19 Feb 2024 08:55 PM
Last Updated : 19 Feb 2024 08:55 PM

“அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும் பட்ஜெட்” - தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை

சென்னை: “தமிழகத்தை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும் 2024-25 ஆண்டுக்கான மிகச் சிறந்த நிதிநிலை அறிக்கை” என தமிழக பட்ஜெட்டை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இயற்கைப் பேரிடர், மத்திய பேரிடர், ஆளுநர் பேரிடர் என்று எத்தகைய பேரிடர்கள் வந்தாலும் மத்திய அரசு உதவி செய்யாவிட்டாலும் தமிழகத்தின் நிதிநிலையை கொண்டும், உலக முதலீட்டாளர்களின் முதலீடுகளைக் கொண்டும் அழகான செப்பனிடப்பட்ட மிகச்சிறந்த நிதிநிலை அறிக்கையை அவையில் தாக்கல் செய்துள்ளார் தமிழக நிதியமைச்சர். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிதிநிலை அறிக்கையில் கல்வி, மருத்துவம், சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து அதிக கவனம் செலுத்தியிருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் நாட்டிலேயே மிகச்சிறந்த மாநிலமாக தமிழகம் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

தமிழ் வளர்ச்சி, பழங்குடி மொழி வளங்களை ஆவணப்படுத்தும் அறிவிப்பு, கடல்வழியை பாதுகாக்க நீலப்புரட்சி அறிவிப்பு, குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட, 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பு, மேலும் ஒவ்வொரு வீடும் 3.5 லட்சத்தில் கட்டப்படும் என்ற அறிவிப்பு வருங்காலத்தில் குடிசைகள் இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்கும்.

வீட்டு மனையில்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகையும் அவர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும், அதற்கு 3500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம் அறிவிப்பும் வரும் காலத்தில் வீட்டுமனையே இல்லாதவர்கள் என்ற நிலையை தமிழ்நாடு எட்டும்.

வறுமை ஒழிப்பில் சிறந்த மாநிலமாக உள்ளது தமிழகம் என்ற நிதிஆயோக் அறிக்கை, தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் முக்கிய கோரிக்கையான அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம் மற்றும் புதுமைப்பெண் விரிவுபடுத்தியது மிகச்சிறந்த அறிவிப்பாகும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதிஒதுக்கீடு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை பணிக்கு நிதி ஒதுக்கீடு, சென்னை 2.0 திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்ற அறிவிப்பு மற்றும் மின்சார பேருந்துகள் வாங்குவது என்ற அறிவிப்பு, கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் சிற்றுந்து இயக்கப்படும் என்ற அறிவிப்புகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகள் அடங்கிய நிதிநிலையாக இருக்கிறது.

தமிழகத்தை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும் 2024-25 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்கின்றேன். பாராட்டுகின்றேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x