Published : 19 Feb 2024 04:01 PM
Last Updated : 19 Feb 2024 04:01 PM
சென்னை: “2 கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதுதான் நமது முதற்கட்டப் பணி” என கட்சியினருக்கு தமிழக வெற்றிக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனையின்படி வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்: தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும்.
விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். கட்சித் தலைமை ஆணையை ஏற்று, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும்.
ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள, புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
வருகின்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ரீதியாகவும், சட்டமன்றத் தொகுதி வாரியாகவும் புதிய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள், தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் தொடர்புடைய வாக்காளர் பட்டியலின் நகலை முறைப்படி பெற்றுக்கொள்ள வேண்டும்.
மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள், தங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். பூத் கமிட்டி அமைத்து, பூத் வாரியாக வாக்காளர்களில் கட்சி சார்புள்ளவர்கள் யார் யார், எந்தக் கட்சியையும் சாராதவர்கள் யார் யார் என்ற விவரங்களையும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை ஏற்றுச் செயல்படுவதைக் கடமையாகக் கருத வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அறிவித்து, தலைமை அறிவித்துள்ள அறிக்கையில், இலக்கு குறித்தும், அரசியல் நிலைபாடு குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார். அதனை மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரில் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் தயாரிக்கும் போதும், பயன்படுத்தும் போதும், கட்சித் தலைமையால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கட்சியின் அதிகாரபூர்வ நியமனங்கள், அறிவிப்புகள் அனைத்தும் கட்சியின் தலைவர் அல்லது அவரின் ஒப்புதலுடன் பொதுச் செயலாளரால் கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்படும் என்பதை மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு நமது இலக்கான 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதை அன்போடு கேட்டுகொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/wDtoYPqhcv
— TVK Vijay (@tvkvijayhq) February 19, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...