Published : 19 Feb 2024 03:57 PM
Last Updated : 19 Feb 2024 03:57 PM

புதிதாக புற்றுநோய் மேலாண்மை இயக்கம்: தமிழக பட்ஜெட் 2024-ல் மருத்துவத் துறை அறிவிப்புகள்

சென்னை: தமிழக பட்ஜெட் 2024-25-ல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 20,198 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியாண்டில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்காக 243 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர் தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:

> மக்களைத் தேடி மருத்துவம் எனும் ஒரு மகத்தான திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வீட்டிலிருந்தே பயன்பெறும் வகையில் சேவைகளை வழங்கும் இத்திட்டத்துக்காக 243 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

> மருத்துவக் காப்பீட்டினைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில், அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பை 50 சதவீதத்துக்கும் மேலாக உயர்த்தி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த மருத்துவமனைகளில் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி, உயர் சேவைகளை வழங்குவதற்காக காப்பீட்டுத் தொகுப்பு நிதியிலிருந்து 200 கோடி ரூபாய் செலவிடப்படும்.

> 2 லட்சம் நபர்களுக்கு மேல் பயன் பெற்றுள்ள நாட்டிலேயே முன்னோடியான இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை மேலும் மேம்படுத்திட இந்த அரசு முனைந்துள்ளது. விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

> மாநிலம் முழுவதிலும் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் நோய் கண்டறிதல் சேவைகளுக்கான கட்டமைப்பு வசதிகள் வரும் நிதியாண்டில் மேலும் மேம்படுத்தப்படும். ராமேஸ்வரம், செந்துறை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம் ஆகிய மருத்துவமனைகளிலும், தேனி மற்றும் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், 50 படுக்கைகள் கொண்ட 6 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 142 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

> பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டப்படும். மேலும், 87 கோடி ரூபாயில் 25 வட்டம் மற்றும் வட்டம்சாரா மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும். சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் 64 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

புற்றுநோய் மேலாண்மை இயக்கம்: புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, தகுந்த சிகிச்சை அளிப்பது மற்றும் புனர்வாழ்வு சேவைகளை அளிப்பதற்காக ஒரு புதிய புற்றுநோய் மேலாண்மை இயக்கத்தை இந்த அரசு செயல்படுத்தும். அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்குத் தேவையான உயர்தர சிகிச்சைக்காக கூடுதல் உயர்நிலை புற்றுநோய்க கருவிகள் வழங்கப்பட்டு, அதனை உயர்திறன் மையமாக (Centre of Excellecne) தரம் உயர்த்தப்படும்.

> 25 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு போதைப் பழக்க மீட்பு மையங்களை நிறுவி, மது மற்றும் போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான மனநல ஆலோசனை, மருத்துவ சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகள் 20 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

> இந்த வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 20,198 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. | வாசிக்க > ரூ.300 கோடியில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள்: தமிழக பட்ஜெட் 2024-ல் பள்ளிக் கல்வி அறிவிப்புகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x