Published : 19 Feb 2024 04:16 PM
Last Updated : 19 Feb 2024 04:16 PM

“பல சவால்களுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் 2024 தயாரிப்பு” - உதயச்சந்திரன் விவரிப்பு

சென்னை: "தொழிநுட்பத்தை உதவியுடன் நிதி மேலாண்மையை அரசு சீர்படுத்தியுள்ளது. தமிழக பொருளாதாரம் மிக சிறப்பாக உள்ளது" என்று தமிழக பட்ஜெட் குறித்து நிதித் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதும் ஒரு அரசின் கடமையாகும். அந்த வகையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில் ரூ.47,000 கோடி அளவில் கட்டமைப்புகளுக்கு செலவிட போகிறோம். சென்னை மெட்ரோ திட்டத்துக்கு இதில் அதிகம் செலவிட வாய்ப்பு உள்ளது.

நிதிப்பற்றாக்குறை 3.05%க்குள் இருக்க வேண்டும் நிதி குழு சொல்கிறது. அந்த வரம்புக்குள் தமிழ்நாடு இருக்கிறது, 2024-25 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.44% ஆக இருக்கும். மிக நெருக்கடியான காலகட்டத்தில் மாநிலத்தின் வரிவருவாய் எவ்வளவு சிக்கல்களுக்கு உள்ளானது என்பது பட்ஜெட்டில் விரிவாக சொல்லப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு சமீபத்தில் சந்தித்த இரு இயற்கை பேரிடர்கள். இந்த பேரிடர்களால் இரண்டு விதமான சிக்கல்கள் வந்தன. ஒன்று வருவாயில் குறைவு ஏற்பட்டது. வருவாய் அதிகம் கொடுக்கக் கூடிய சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டன. தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் வருவாய் குறைவு ஏற்பட்டது. இரண்டாவது வெள்ள நிவாரணத்துக்கென செலவு செய்ய வேண்டி இருந்தது.

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழகத்தின் பொருளாதாரம் மிக ஆரோக்கியமாக உள்ளது. தமிழகத்தின் சொந்த வரி வருவாயில் 15% வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். பத்திரப் பதிவு துறையில் சென்ற வருடம் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. ஆனால் வரும் வருடத்தில் நிறைய எதிர்பார்ப்புகளோடு இருக்கிறோம். மாநில அரசின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரி வருவாயை திரட்டுவதிலும், வரி ஏய்ப்பை தடுப்பதிலும் தொழில்நுட்பத்தின் துணையுடன் செயல்பட்டு வருகிறோம்.

புதுமைப் பெண் திட்டத்தின் வெற்றியால் கல்லூரிகளில் பெண்களின் சேர்க்கை அதிகமானது. எனவே, அதேபோல் தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடி மக்களுக்காக தொல்குடி திட்டம் என்ற முக்கியமான திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. மகளிர் நலன் காக்க இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்க முற்பட்டால் அவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட 10 இடங்களை தேர்வு செய்து அங்கு ஐடிஐ மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும்போது தொலைநோக்கு பார்வை எதிர்காலம் நோக்கி இருக்க வேண்டும். எதிர்காலம் அறிவுசார் பொருளாதாரம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதனை மிகக் கவனமாக கையாண்டு தொழில்நுட்ப பூங்காக்கள் திறப்பது உள்ளிட்ட புதிய திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பட்ஜெட் 7 முதன்மையான நோக்கங்களை கொண்டு தயாரிக்கப்பட்டது. நலத் திட்டங்கள் செயல்படுத்துவதில் தொய்வடைய கூடாது என்பது ஒருபுறம், கட்டமைப்புத் திட்டங்களில் முன்னேறி செல்ல வேண்டும் என்பது ஒருபுறம்.

இந்த பட்ஜெட் அறிக்கை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்டது. வரி வருவாயில் சிக்கல், இயற்கை பேரிடர்கள், ஜிஎஸ்டி இழப்பீட்டு சிக்கல், சென்னை மெட்ரோ ரயில் திட்ட சிக்கல், தமிழ்நாடு மின்பகிர்மான கழக நஷ்டத்தில் 90% அரசு ஏற்க வேண்டும் என்பது நிபந்தனை. அந்த நிபந்தனை நமது நிதி நிலைமையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் கொடுக்க வேண்டியது என்று யோசித்த தொகை சுமார் ரூ.3000 கோடி. ஆனால் அதிகமாக கொடுத்திருப்பது 15,000 கோடி ரூபாய். இது வருவாய் பற்றாக்குறையில் பிரதிபலிக்கிறது.

2017-ம் ஆண்டில் இதேபோன்று தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் நட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளும் உதய் என்கிறது திட்டம். அந்தத் திட்டத்தை அறிவித்தபோது அரசு நட்டத்தை எவ்வளவு ஏற்றுக்கொள்கிறது, அதனை நிதி பற்றாக்குறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும், அரசு திரட்டும் கடன் உச்ச வரம்பில் கழித்துக் கொள்ளப்படும் என்று சொல்லியிருக்கிறார். இதுதொடர்பாக ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

வருவாய் பற்றாக்குறையை பொறுத்தவரை, மதிப்பீடுகளை விட சற்று அதிகமாகியிருக்கிறது. சுமார் 17000 கோடி ரூபாய் அரசு நினைத்ததைவிட அதிகமாக செலவு செய்ய வேண்டியிருந்தது. சிறப்பான நிதி நிர்வாகத்தினால் இதனை 8000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் பற்றாக்குறையை குறைந்திருக்கிறோம்.

தொழிநுட்பத்தை உதவியுடன் நிதி மேலாண்மையை அரசு சீர்படுத்தியுள்ளது. தமிழக பொருளாதாரம் மிகச் சிறப்பாக உள்ளது. தேசிய சராசரியை விட தமிழ்கத்தின் வளர்ச்சி அதிகம். பணவீக்கம் குறைவு. இந்த முன்னேற்றத்தை தக்கவைத்து கொள்ள நாம் நலத்திட்டங்களில் கட்டமைப்புகளில் முதலீடு செய்ய வேண்டும். திறன் மேம்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. கணக்குகளின்படி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம், தமிழகம்” என்றார். | வாசிக்க > புதிதாக புற்றுநோய் மேலாண்மை இயக்கம்: தமிழக பட்ஜெட் 2024-ல் மருத்துவத் துறை அறிவிப்புகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x