Published : 19 Feb 2024 02:12 PM
Last Updated : 19 Feb 2024 02:12 PM
சென்னை: “சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களை மேலும் 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட் 2024-25 உரையில் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் அவர் வெளியிட்ட தமிழ் வளர்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள்:
> தமிழர்களின் ஒற்றுமை, அரசியல் நேர்மை குடிமக்கள் உரிமை, வணிகச் சிறப்பு, சமய நல்லிணக்கம், பசிப்பிணி ஒழிப்பு மற்றும் பெண்ணியம் உள்ளிட்ட சமூகச் சிந்தனைகள், பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் தமிழின் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை 25 இந்திய மற்றும் உலக மொழிகளுக்குச் சென்றடையும் வகையில், அவற்றை மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
> நமது செழுமையான தமிழ் இலக்கியப் படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லவும், சிறந்த பன்னாட்டு அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பெற்று தமிழில் பல புதிய படைப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு, சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தியது. இதில் 40 நாடுகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழ்ப் படைப்புகளை பிற மொழிகளுக்கு மொழி பெயர்க்க 483 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட மொத்தம் 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
> கடந்த இரு நூற்றாண்டுகளில் பல்வேறு உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்களை விட இரண்டு மடங்கு தமிழ்நூல்களை, தற்போது இரண்டே ஆண்டுகளில் மொழிபெயர்த்திட இவ்வரசு முன்முயற்சி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழின் மிகச்சிறந்த நூல்களை உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களிலும், புகழ்பெற்ற நூலகங்களிலும் இடம்பெறச் செய்ய இவ்வாண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும். தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிடச் செய்யும் இம்முயற்சிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
தமிழில் 600 முக்கிய நூல்கள்: தமிழக பாடநூல் கழகத் தலைவராக பதவியேற்றிருந்த காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கான 32 துறைகள் சார்ந்த 875 கலை, அறிவியல் பாடநூல்களை தமிழ்வழியில் வெளியிட்டு சாதனை படைத்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. அவர் வகுத்துத் தந்த பாதையில் பயணித்து, தற்போது கலைஞர் நூற்றாண்டில் தமிழ்நாடு பாடநூல் கழகம் இதுவரை 340 மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 600 முக்கிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.
> 25 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னின்று நடத்திய தமிழ் இணையம்-99 மாநாட்டிற்குப் பிறகு, இந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்ற கணித்தமிழ்-24 மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மின்னணு வணிக நிறுவனங்களுடைய நிர்வாகிகள் கலந்துகொண்டு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தமிழுக்கான இடம் குறித்து ஆக்கபூர்வமாக விவாதித்து பல செயல்திட்டங்களை உருவாக்கியுள்ளனர்.
அதன்படி துரிதமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பப் பரப்பில் தமிழ்மொழி செழித்து வளரத் தேவையான இயந்திரவழிக் கற்றல் (machine learning) செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயற்கைமொழிச் செயலாக்கம் (Natural Language processing) , பெருந்திரள் மொழி மாதிரிகள் (large language models) போன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கிடும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்திட இந்த ஆண்டு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
> தமிழ் இணைய கல்விக்கழகம் உருவாக்கியுள்ள தமிழ் மின் நூலகம் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மின் நூலகமாகத் திகழ்ந்து வருகிறது. 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நூல்கள், பருவ இதழ்கள், அரிய ஆவணங்கள் மற்றும் 8 லட்சம் ஓலைச்சுவடிப் பக்கங்கள் இந்த நூலகத்தில் காணக் கிடைக்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 5 கோடி முறை இந்த இணையதளம் பார்வையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்மொழியின் வளம், தமிழரின் தொன்மை குறித்து எதிர்காலத் தலைமுறையினருக்கும் கொண்டு சேர்த்திடும் வகையில் தமிழ்நாடெங்கும் உள்ள அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மின்பதிப்பாக மாற்றும் முயற்சிக்கு இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
பழங்குடி மொழி வளங்களை ஆவணப்படுத்துதல்: தமிழ்நாட்டில் பேசப்படும் சௌராஷ்டிரா, படுக மொழிகளையும் தோடர், கோத்தர், சோளகர், காணி, நரிக்குறவர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மக்களின் மொழி வளங்கள் மற்றும் ஒலி வடிவங்களையும் எதிர்காலத் தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் இனவரைவியல் (Ethnography) நோக்கில் ஆவணப்படுத்திப் தமிழ்நாடு அரசு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திடும்.
பண்பாடு: கீழடி எனும் ஒற்றைச்சொல் தமிழர்தம் மரபுவழிப் பயணத்தில், தலைமுறைகளைத் தாண்டி உலகத் தமிழர்களை ஒன்றிணைத்தது. கூடல் மாநகருக்கு அருகே வைகைக் கரையில் சங்ககாலத்தில் செழித்து வளர்ந்த நகர நாகரிகத்தினை தொல்லியல் அகழ்வாராய்ச்சி மூலம் வெளிக்கொணர்ந்ததை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமே கொண்டாடி மகிழ்ந்தது. தமிழரின் நீண்ட நெடிய பண்பாட்டு மரபினை மொழி வரலாறு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் துணைகொண்டு. சான்றுகளின் அடிப்படையில் அறிவுலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில், உறுதியாக நிறுவிடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம், கடலூர் மாவட்டம் மருங்கூர். கிருஷ்ணகிரி மாவட்டம் . சென்னானூர் என மொத்தம் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், தமிழகம் மட்டுமின்றி பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் காலச்சுவடுகளைத் தேடி கேரள மாநிலத்திலுள்ள முசிறி (பட்டணம்) ஒடிசா மாநிலத்திலுள் மாநிலத்திலுள்ள பாலூர், வெங்கி கர்நாடகத்திலுள்ள ஆந்திர மஸ்கி ஆகிய தொல்லியல் சிறப்புமிக்க இடங்களிலும் இந்த ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்படும். மேற்கூறிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
மேற்கூறிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அகழ்வாராய்ச்சிக்கென நாட்டிலேயே ஒரு மாநிலத்தில் இவ்வளவு அதிக நிதியை தமிழ்நாடு அரசுதான் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமைச்சர் பட்ஜெட் உரையில் கூறினார். | வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT