Published : 19 Feb 2024 11:04 AM
Last Updated : 19 Feb 2024 11:04 AM
சிவகங்கை: தமிழக காங்கிரஸில் மாநிலத் தலைவர் மாற்றப்பட்ட நிலையில், மாவட்டங்களிலும் நிர்வாகிகள் மாற்றப் பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் தனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியை மாற்ற, மாநிலத் தலைமையை கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தி வந்தார். ஆனால், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டு கொள்ளவில்லை. இதனால், அவர் தனது தந்தை ப.சிதம்பரம் மூலம் தேசிய தலைமையிடம் காய் நகர்த்தி, கடந்த ஆண்டு செப்டம்பரில் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி ஆதரவாளராக இருந்த சத்திய மூர்த்தியை மாற்றிவிட்டு, தனது ஆதரவாளரான சஞ்சய்காந்தியை நியமிக்க நடவடிக்கை எடுத்தார்.
அதேபோல், திருநாவுக்கரசர் எம்.பி.க்கு எதிராகச் செயல்பட்ட திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ஜவஹரையும் மாற்ற கே.எஸ்.அழகிரி மறுத்தார். இதனால் தேசிய தலைமை மூலம் அவரை மாற்றிவிட்டு, தனது ஆதரவாளரான ரெக்ஸ் என்பவரை மாநகர மாவட்டத் தலைவராக நியமிக்க திருநாவுக்கரசர் நடவடிக்கை எடுத்தார்.
மேலும், சிவகங்கை மாவட்டத்தில் தங்களுக்கு எதிராக செயல்பட்ட நகர, வட்டார நிர்வாகிகளை கே.எஸ்.அழகிரி ஆதரவில்லாமல் மாற்றுவதில் கார்த்தி சிதம்பரத்துக்கு சிக்கல் இருந்து வந்தது.
தற்போது கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, மாநிலத் தலைவராக செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ப.சிதம்பரத்துக்கு நெருக்கமானவர் என்பதால், சிவகங்கை மாவட்டத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராகச் செயல்படும் நகர, வட்டார நிர்வாகிகள் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மற்ற மாவட்டங்களிலும் மீண்டும் சீட் கேட்டு வரும் எம்.பி.கள் தங்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்கி வரும் உள்ளூர் நிர்வாகிகளை மாற்ற மாநிலத் தலைமையிடம் வலியுறுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் வரலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், மாவட்டத் தலைவரை மாற்றினால் தனக்கு எதிர்ப்புக் குறையும் என கார்த்தி சிதம்பரம் நினைத்தார். இதனால் மற்ற நிர்வாகிகளை மாற்ற நினைக்கவில்லை.
ஆனால், அவர்கள் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராகச் செயல்படுகின்றனர். இதனால் அவர்களை மாற்ற வாய்ப்புள்ளது. இதேபோல், மற்ற மாவட்டங்களிலும் மாற்றம் இருக்கலாம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT