Published : 19 Feb 2024 06:58 AM
Last Updated : 19 Feb 2024 06:58 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்றதால் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்துபிரான்சிஸின் மகன் சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சிபெற்று, தந்தையின் கனவை நிறைவேற்றியுள்ளார்.
தூத்துக்குடி அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்(53). ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் தாமிரபரணி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்தார். இந்நிலையில், 2023 ஏப்ரல் 25-ம் தேதி தனது அலுவலகத்தில் இருந்த லூர்து பிரான்சிஸை 2 பேர் வெட்டிக் கொலை செய்தனர். இந்தசம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மணல் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில், லூர்து பிரான்சிஸின் மகன் எல்.மார்ஷல் ஏசுவடியான் (23) சிவில் நீதிபதி தேர்வில் வெற்றிபெற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட சிவில் நீதிபதிக்கான தேர்வில் முதல் முயற்சியிலேயே மார்ஷல் ஏசுவடியான் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மார்ஷல் ஏசுவடியான் வீட்டுக்கே நேரில் சென்று பாராட்டினார்.
இதுகுறித்து மார்ஷல் ஏசுவடியான் ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது: சென்னையில் உள்ள ‘ஸ்கூல் ஆஃப் எக்சலென்ஸ் இன் லா' என்ற சட்டக் கல்லூரியில் பி.ஏ. எல்எல்பி (ஹான்ஸ்) 5 ஆண்டு பட்டப் படிப்பை கடந்த 2022-ல் முடித்து,அதே ஆண்டு இறுதியில் பார் கவுன்சிலில் பதிவு செய்து, வழக்கறிஞர் பணியைத் தொடங்கினேன்.
‘‘நீ எப்படியாவது நீதிபதியாக வேண்டும். தொடர்ந்து முன்னேறி, உச்ச நீதிமன்ற நீதிபதி வரை உயரவேண்டும்’’ என்று எனது தந்தை எப்போதும் கூறுவார். நான் நீதிபதியாக வேண்டும் என்பது அவரது கனவு.
இந்நிலையில், எனது தந்தை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவர் கொலையான 5-வது நாள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிவில் நீதிபதி தேர்வு அறிவிப்பு வெளியானது. என் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன், தேர்வுக்கு விண்ணப்பித்தேன். சொந்த முயற்சியில் தேர்வுக்கான பயிற்சிகளை எடுத்தேன். இதற்கிடையே எனது தந்தை கொலை வழக்கையும் கவனிக்க வேண்டி இருந்தது.
தற்போது நான் சிவில் நீதிபதி தேர்வில் வென்று, எனது தந்தையின் கனவை நிறைவேற்றியுள்ளேன். எனது தந்தையைப் போல கடைசி வரை நேர்மையாக இருப்பேன். அதுவே எனது லட்சியம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT