Published : 19 Feb 2024 04:02 AM
Last Updated : 19 Feb 2024 04:02 AM
திண்டுக்கல்: எல்லை விரிவாக்கம் தாமதம் காரணமாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் எந்தவித வளர்ச்சியும் அடையாமல் நகராட்சி போலவே உள்ளது திண்டுக்கல் மாநகராட்சி.
திண்டுக்கல் , 2014-ம் ஆண்டு பிப். 19-ம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதையடுத்து நகராட்சி எல்லைக்குள் இருந்த 48 வார்டுகளுடன் திண்டுக்கல்லை சுற்றியுள்ள பால கிருஷ்ணாபுரம், பள்ளபட்டி, அடியனூத்து, தோட்டனூத்து, செட்டி நாயக்கன் பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, குரும்பபட்டி, பொன்மாந்துரை புதுப்பட்டி, பிள்ளையார் நத்தம் ஆகிய கிராம ஊராட்சிகளை திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நகர வளர்ச்சி இல்லாமல் திண்டுக்கல் பெயரளவில் மட்டும் மாநகராட்சியாக இருந்து நகராட்சி போலவே செயல்பட்டு வருகிறது.
திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை புறநகர்ப் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை உள்ளது. நகர எல்லை விரிவாக்கம் செய்யப்படாததால் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய முடியவில்லை. இதனால் திண்டுக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே மாற்றினாலே திண்டுக்கல் நகரின் பாதி பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விடும். கடந்த அதிமுக ஆட்சியிலும் சரி, தற்போது நடைபெறும் திமுக ஆட்சியிலும் சரி, பேருந்து நிலையத்தை இடமாற்றும் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
திண்டுக்கல் நகரில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் ஒரு சில வார்டுகளில் மட்டுமே பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை இல்லை. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இரண்டாம் கட்டமாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியும், திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. முதல் கட்டமாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தில் நிலவும் குளறுபடிகளால் தினமும் நகரின் ஏதோ ஒரு பகுதியில் கழிவு நீர் வெளியேறி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவது தொடர்கிறது.
திண்டுக்கல்லில் நகரமைப்பு பிரிவு சார்பில் கண் துடைப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாவதும் தொடர் கதையாக உள்ளது. நடைபாதைகள், சாலைகள் மிகவும் குறுகலாகி பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். அனுமதி பெறாமல் பிளெக்ஸ் போர்டுகள் வைப்பது திண்டுக்கல் நகரில் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
நாய்கள், மாடுகள் தொல்லை: திண்டுக்கல் நகரில் மொத்தம் 7 ஆயிரம் தெரு நாய்கள் உள்ளன. பல மாதங்களாக கருத்தடை மையம் செயல் பாட்டில் இல்லாததால், நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது. அதே போல், நகரில் மாடுகள் வளர்ப்போர் தங்கள் மாடுகளை அவிழ்த்து விடுவதால் அவை சாலைகளில் வலம் வருகின்றன. சாலையில் திரியும் மாடுகளால் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் திறம்பட செயல்பட்டால்தான் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தரம் உயர்த்தப் பட்ட நடவடிக்கை பெயரளவில் மட்டும் இல்லாமல், செயல்பாட்டிலும் இருந்தால்தான் நகரின் வளர்ச்சி சாத்தியமாகும் என்று திண்டுக்கல் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT