Last Updated : 18 Feb, 2024 07:06 PM

1  

Published : 18 Feb 2024 07:06 PM
Last Updated : 18 Feb 2024 07:06 PM

‘விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் திமுக அரசு’ - இபிஎஸ் பேச்சு @ மயிலாடுதுறை

மயிலாடுதுறை: விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி கூறியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (பிப்.18) நடைபெற்றது. இதில் புதிதாக கட்சியில் இணைந்தோரை வரவேற்று, கவுரவித்தப் பின்னர் பழனிசாமி பேசியது: “அதிமுக ஆட்சிக் காலத்தில், வாக்குகளை நோக்கமாக கொள்ளாமல், மக்களின் நலன் கருதி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. சீர்காழியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

மீத்தேன் திட்டம் வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் இன்றைய முதலவர் மு.க.ஸ்டாலின். ஆனால் அதை தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு. டெல்டா மாவட்டங்களில் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்த நீர் நிலைகளை தூர்வாரும் வகையில் குடிமராமத்து திட்டம் என்ற சிறப்பான திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தியது. தூர் வாரிய மண்ணை விவசாயிகளே பயன்படுத்திக் கொண்டனர். அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் அதிகபட்சமாக விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தரப்பட்டது. நாட்டிலேயே அதிகபட்சமாக 50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.9,400 கோடி இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தரப்பட்டது.

குறுவை சாகுபடிக்காக முதல்வர் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து வைத்தார். ஆனால் கர்நாடகத்திலிருந்து தண்ணீரை தொடர்ந்து பெற முடியாமல், 3.5 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் நீரின்றி காய்ந்து பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை பெற்றுத்தர முதல்வர் தவறிவிட்டார். காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றிருந்தால் ஹெக்டேருக்கு ரூ.84 ஆயிரம் கிடைத்திருக்கும். விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் அரசாக திமுக அரசு உள்ளது.பிரதமர் வீடுகட்டும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிட்டது. மாநில அரசின் வீடுகட்டும் திட்டமும் கைவிடப்பட்டுள்ளது.

அதிமுக கொண்டு வந்த பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டமும் கைவிடப்பட்டது. அதிமுக கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களையெல்லாம் கைவிடுவதுதான் திமுக அரசின் சாதனையாக உள்ளது. ஆட்சிக்கும் வந்ததும் முதல் கைழுத்திட்டு, ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறியவர்கள், பல லட்சம் கையெழுத்துப் பெற்று, அதை சேலம் மாநாட்டு திடலில் வீசிச் சென்றதை பார்த்தோம். ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு அதிமுக அரசால் கொண்டு வரப்பட்டு, இன்று அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகமானோர் மருத்துவம் படித்து வருகின்றனர்.

3 ஆண்டுகளில் எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை. சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளன. பாஜகவும் கூட்டணி இல்லை என அதிமுக சொன்ன பின்னர், இஸ்லாமியர்களை அழைத்து கோரிக்கைகள் குறித்து முதல்வர் பேசுகிறார். 3 ஆண்டுகளாக சிறுபான்மையினர்களின் கோரிக்கைகள் குறித்து பேசாதது ஏன்?

சிறுபான்மை மக்களுக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டும் என அதிமுக வலியுறுத்தியப் பின்னரே முதல்வர் அழைத்துப் பேசுகிறார். சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியுள்ளது. திமுக சிறுபான்மை மக்களை ஏமாற்றி வருகிறது. திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும்தான் உள்ளது. செயலில் எதுவும் இல்லை.

வரும் மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். காவிர் நீர் உரிமை தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை கூட பாதுகாக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக, கர்நாடகத்திலிருந்து தண்ணீரை கேட்டுப் பெற முடியவில்லை. இவற்றையெல்லாம் செய்யத் தவறிய, மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தை பாதுகாக்க முடியும் என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை. அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும். கூட்டணி அமைந்த பிறகு ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும். மேகேதாட்டு பிரச்சினை குறித்து ஏற்கெனவே அறிக்கை மூலம் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார். முன்னதாக அவர் வைத்தீஸ்வரன் வைத்தியநாதசுவாமி கோயிலில் வழிபாடு செய்தார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.பவுன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x