Published : 18 Feb 2024 03:48 PM
Last Updated : 18 Feb 2024 03:48 PM
கிருஷ்ணகிரி: சூளகிரி பகுதியில் அசுத்தமான நீரில் கீரை வகைகளைச் சுத்தம் செய்யும் வியாபாரிகளைச் சுகாதார ஆய்வாளர் எச்சரித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான மக்களின் பிரதானத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
சந்தை வாய்ப்பு: இதில், சந்தை வாய்ப்பு மற்றும் விற்பனை வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு சூளகிரி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் குறுகிய காலப் பயிரான கீரை வகைகள், புதினா, கொத்தமல்லியை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், பெரும்பாலான வியாபாரிகள் நேரடியாக விளை நிலங்களுக்கு வந்து விவசாயிகளிடமிருந்து கீரை வகைகள் மற்றும் கொத்த மல்லி, புதினா ஆகியவற்றைக் கொள்முதல் செய்கின்றனர். இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் கீரை வகைகளை வாகனங்கள் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநில சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
துர்நாற்றம் வீசும் நீர்: விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் கீரை, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சந்தைகளுக்கு அனுப்பும் முன்னர் சூளகிரி-பேரிகை சாலையில் உள்ள துரை ஏரியில் தேங்கியுள்ள அசுத்தமான நீரில் சுத்தம் செய்து வாகனங்களில் ஏற்றி அனுப்பி வருகின்றனர். இந்த ஏரியில் மாசடைந்துள்ள நீரில் மீன்கள் உயிரிழந்து மிதப்பதுடன், தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த நீரில் கீரை வகைகளைச் சுத்தம் செய்வதைப் பார்க்கும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். மேலும், இதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோய் பாதிக்கும் அபாயம் - இது தொடர்பாக சூளகிரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: சூளகிரி - பேரிகை சாலையில் உள்ள துரை ஏரியில் அசுத்தமான நீரில், வியாபாரிகள் சிலர் கீரைகளை சுத்தம் செய்கின்றனர். இதனால், இதைப்பயன்படுத்தும் மக்களுக்கு நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறைக்கு புகார் தெரிவித்துள்ளோம். மேலும், இதைத் தடுக்க சுகாதாரத் துறை மூலம் இப்பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இப்பகுதியில் ஆய்வு செய்து தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வும்..எச்சரிக்கையும்: இதனிடையே, சூளகிரி அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் தினேஷ் குமார் மற்றும் அலுவலர்கள் துரை ஏரியில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்குக் கீரை வகைகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்த வியாபாரிகளிடம், அசுத்தமான நீரில் சுத்தம் செய்யக் கூடாது என விழிப்புணர்வு செய்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT