Published : 18 Feb 2024 12:19 PM
Last Updated : 18 Feb 2024 12:19 PM
சென்னை: ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்று தமிழ் மண்ணில் விளைந்த புரட்சியாளரான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் நினைவுகளைப் போற்றி, அவர் விரும்பிய சுயமரியாதையும் சமதர்மமும் தழைத்தோங்கும் சமூகம் வளர பாடுபடுவோம், என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்காரவேலரின் 165-வது பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "தமிழ்ப் பற்றும் பொதுவுடைமைக் கொள்கையும் கொண்டு உழைக்கும் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 165-ஆவது பிறந்தநாள் இன்று.
ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்று தமிழ் மண்ணில் விளைந்த புரட்சியாளரான அவரது நினைவுகளைப் போற்றி, அவர் விரும்பிய சுயமரியாதையும் சமதர்மமும் தழைத்தோங்கும் சமூகம் வளர பாடுபடுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சிங்காரவேலரின் 165-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சென்னை மேயர் பிரியா மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தமிழக அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT