Last Updated : 18 Feb, 2024 11:05 AM

 

Published : 18 Feb 2024 11:05 AM
Last Updated : 18 Feb 2024 11:05 AM

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குண்டாயிருப்பு கிராமத்தில் நேற்று (பிப்.17) விக்னேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழு தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், போர்மேன்கள் தொம்பக்குளத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், மாதாங்கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயபால் ஆகியோர் மீது ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதில், பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ் உள்ளிட்ட 3 பேரும் பட்டாசு ஆலையை முறையாக பராமரிக்காமலும், தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும், வெடிபொருள் மருந்து கலவையை சரிவரி கலக்கி கொடுக்காததால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம்: முன்னதாக, விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், இந்த துரதிர்ஷ்ட சம்பவம் குறித்து அறிந்து மனவேதனையடைந்தேன். இந்த கடினமான சூழலில், எனது எண்ணங்கள் அனைத்தும் குடும்ப உறுப்பினரை இழந்து தவிப்போருடனேயே இருக்கும். காயமடைந்தவர்களும் விரைவாக பூரண குணமடைய விரும்புகிறேன். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

முதல்வர் ரூ.3 லட்சம் நிதி: இதேபோன்று, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டார்.

உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, மத்திய அமைச்சர் எல்.முருகன், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x